கலாவதி பண்டர்கர் தனது ஐந்து மகள்களின் பிரசவத்தை வீட்டிலேயே அவரது கண்காணிப்பிலேயே நடத்தியிருக்கிறார், திருமணமான அவரது ஐந்து மகள்களும் அவரைப் போலவே வறுமையில் இருப்பவர்கள். மருத்துவ செலவுகளை தவிர்ப்பதற்காக இப்படி செய்திருக்கிறார். நாங்கள் அவரை சந்திக்க சென்றிருந்த போது வீட்டில் 10 பேர் தங்கி இருந்தனர். இவர்கள் அனைவரையும் கவனித்துக் கொள்வதோடு பெரும் இழப்புகளுடன் ஒன்பது ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்தும் வருகிறார். அதோடு மற்றவர்களின் நிலங்களில் வேலை செய்வதன் மூலம் தினக் கூலியாக ரூ.30/ பெறுகிறார். பருவகாலம் அல்லாத மாதங்களில் விறகுகள் சேகரித்து விற்பனை செய்வதன் மூலம் ரூ.20/ வருவாய் ஈட்டுகிறார். அவருக்கான ஒரே நிரந்தர வருவாய் என்பது அவருக்கு சொந்தமான எருமை மூலம் கிடைக்கும் பாலை விற்பனை செய்வதால் கிட்டுவது மட்டுமே.
அவரது நான்காவது மகளது திருமணத்தை எந்த செலவுகளும் இல்லாமல் நடத்தியதாகவும், ஐந்தாவது மகளுக்கு மிகவும் குறைந்த செலவில் திருமணம் செய்ய முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார். விதர்பா பகுதியின் யவத்மால் மாவட்டத்தின் ஜால்கா கிராமத்தில் வசிக்கும் கலாவதிக்கு ஏழு பெண், இரண்டு ஆண் வாரிசுகள் உள்ளனர். கடந்த பதினான்கு ஆண்டுகளில் விவசாயத்தில் வருமானமின்றி தற்கொலை செய்து கொண்ட ஒரு விவசாயியின் மனைவி.
கிடைக்காத இழப்பீடு
“அரசிடமிருந்து எந்த ஒரு இழப்பீடும் இதுவரை கிடைத்தவில்லை”, என்கிறார் புன்னகை மாறாத, யதார்த்தவாதியான இந்த பாட்டி. காரணம், இவர் விவசாயம் செய்து வரும் ஒன்பது ஏக்கர் நிலமும் இவருக்கு உரிமையானதல்ல, குத்தகை நிலம் மட்டுமே. விவசாயத்தில் நஷ்டம் ஏற்ப்பட்ட போது அதனை தாங்கும் சக்தியின்றி அவரது கணவர் பரசுராம் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். விவசாயம் செய்த நிலம் அவரது சொந்த நிலம் அல்லாததால் அரசு விதிமுறைப்படி விவசாயி தற்கொலை என அவரது மரணம் அங்கீகரிக்கப்படவில்லை. விதர்பா மக்கள் பாதுகாப்புக் குழு மட்டுமே இவர் குடும்பத்திற்க்கு சிறிய நிவாரணம் வழங்கியது.




