மகாராஷ்டிர மாநிலம், சதாரா மாவட்டம், மான் வட்டத்தில் இருப்பது, மஸ்வத் நகரம். அங்குள்ள சந்தையில் ஒரு ஆட்டையும் ஒரு மாதக் குட்டியையும் யாராவது வாங்க வருவார்களாக எனக் காத்துக்கொண்டு இருக்கிறார், விதோபா யாதவ். பகிர்வுக்கட்டண ஜீப் ஒன்றில் ஆடுகளைக் கொண்டுவந்த அவர், காலை 7 மணி முதல் மூன்றரை மணி நேரமாகக் காத்திருக்கிறார்.
பால் தரக்கூடிய ஒரு வெள்ளாட்டின் விலை, இங்கே ரூ.7 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம்வரை இருக்கும். 16 கி.மீ. தொலைவிலுள்ள வாலை கிராமத்திலிருந்து வரும் 80 வயது விதோபா, ஆட்டின் விலையை 3 ஆயிரம்வரை குறைத்துப் பார்த்துவிட்டார். அப்படியும் ஆடும் குட்டியும் விற்றபாடு இல்லை. ” இதுவரை யாரும் இவற்றை வாங்க முன்வரவில்லை. சும்மா விலையைக் கேட்க கூட யாரும் என்னை அணுகவே இல்லை” என நொந்தபடி கூறினார், ஊருக்குத் திரும்புவதற்கு ஜீப்பைப் பிடிக்கும் அவசரத்தில் இருந்த விதோபா.
இந்தப் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் வறட்சி அதிகரித்தபடி இருக்கிறது. மாங் எனும் தலித் சமூகத்தைச் சேர்ந்த விதோபாவைப் போன்ற நிறைய பேருக்கு தங்கள் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆண் ஆடுகள் என்றால் இறைச்சிக்காக விற்றுவிடமுடியும். பொதுவாக, பெண் ஆடுகளை வளர்ப்பதற்காகத்தான் வாங்குவார்கள். தண்ணீர், தீவனத்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால் ஆடுகளை வாங்க யாருக்கும் விருப்பமில்லை என்றாகிவிட்டது.
விதோபா போன்ற நிறைய பேருக்கு நிலம் இல்லை; ஆடுகள் மட்டும்தான் அவர்களின் வாழ்வாதாரம். நெருக்கடியான கட்டங்களில் இவைதான் அவருக்கு காப்பீட்டைப் போல இருக்கும். இப்போது அதுவும் அவர்களைக் கைவிட்டுவிட்டது.
தமிழில்: தமிழ்கனல்