பேசிக் கொண்டிருக்கும்போதே அவரின் நெற்றியில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. அவரின் வெளிறிய முகத்தில் அந்த சுருக்கங்கள் அப்பட்டமாக தெரிகின்றன. கூன் போட்டு மெதுவாக தாங்கி தாங்கி நடக்கும் அவர் சில நூறு மீட்டர்களுக்கு ஒருமுறை நின்று மூச்சு வாங்கிக் கொள்கிறார். மெல்லிய காற்று அவரது நரை முடியை விலக்கி முகத்தை காட்டி வீசிச் சென்றது.
இந்திராவதி ஜாதவுக்கு 31 வயதுதான் ஆகிறது என்பதை எவராலும் நம்ப முடியாது.
மகாராஷ்டிராவின் நாக்பூரருகே உள்ள குப்பத்தில் வசிக்கும் ஜாதவ், நாள்பட்ட தீவிர நுரையீரல் அடைப்பு நோயால் (COPD) பாதிக்கப்பட்டிருக்கிறார். உயிரை பறிக்கவல்ல அந்த நோய் நுரையீரலுக்கு காற்று போவதை தடுத்து சுவாச சிக்கல்களை ஏற்படுத்தும். நுரையீரலை பாதிக்கக்கூடிய தீவிர இருமல் அடிக்கடி வரும். ‘புகைபிடிப்பவர்களின்’ நோய் என அழைக்கப்படும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30, 40 சதவிகித மக்கள் நடுத்தர, அடிமட்ட வருமானம் கொண்ட நாடுகளில் புகைப்பழக்கம் கொண்டிருந்த மக்களாக இருக்கின்றனர் எனக் குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை
ஜாதவ், சிகரெட்டை தொட்டது கூட இல்லை. ஆனால் அவரின் இடது நுரையீரல் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள காற்று, விறகு அல்லது நிலக்கரி அடுப்பு பயன்படுத்துவதால் மாசடைகிறது என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.
சுத்தமான சமையல் எரிவாயு ஜாதவுக்கு கிடைத்ததில்லை. “நாங்கள் எப்போதும் விறகையோ கரியையோ கொண்ட அடுப்பில்தான் உணவு சமைப்போம். நீரை காய வைப்போம். இந்த திறந்த அடுப்பில் சமைத்து என் நுரையீரல் ஒன்றுக்கும் ஆகாமல் போய்விட்டது,” என்கிறார் அவர் மருத்துவர்கள் சொன்னதை குறிப்பிட்டு. அவரின் அடுப்பிலிருந்து வெளியாகும் மாசு அவரது நுரையீரலை பாதித்துவிட்டது.
2019ம் ஆண்டின் லான்செட் ஆய்வின்படி கிட்டத்தட்ட ஆறு லட்சம் இந்தியர்கள் ஒவ்வொரு வருடமும் முதுமைக்கு முன்னமே காற்றுமாசால் இறந்து போகின்றனர். வீட்டுக்காற்றின் மாசு, காற்று மாசில் முக்கியமான பங்கு வகிப்பதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது.










