அவரது 12 ஏக்கர் நிலத்தை சொற்ப பணத்திற்கு ஒத்திக்கு விட்டு, சுயமாக தையல் கற்றுக்கொள்ள முடிவெடுக்கிறார். “சின்ன வயதில் கொஞ்சம் தையல் கற்றிருக்கிறேன்” என்கிறார் அவர். “அதனால் இதை முயற்சித்துப் பார்க்கலாம் என நினைத்தேன்”. மல்லப்பாவின் கடனையும் அவர் அடைக்க வேண்டியிருந்தது. அவர் இழந்த சொற்ப இழப்பீட்டுப் பணத்தையும், கால்நடைகளையும் மற்ற சில உடைமைகளையும் விற்று கடனை அடைத்தார். அவர் பாதுகாத்து வளர்க்க வேண்டிய மூன்று சிறு மகள்களையும் வளர்க்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது. முதல் இரு மகள்களையும் நன்றாக படித்து வந்தார்கள். அறிவியல் தேர்வில் 50-க்கு 49 மதிப்பெண் பெற்றிருந்தார் ஒரு மகள். அவர்கள் விரும்பும் வரை உயர்ந்த படிப்பை படிக்க வைப்பதுதான் பார்வதியின் குறிக்கோளாக இருந்தது.
எதற்காக தையல் கலை? கிராமத்தில் படித்து தையலையும் கற்றுக்கொண்டார். “இங்கு 800 குடும்பங்கள் உள்ளன. ஏறத்தாழ அனைவருக்குமே மகள்கள் இருக்கிறார்கள். தையல் தொழிலில் குறைவாக பணம் கிடைத்தாலும், தையலைக் கற்றுத்தருவதில் கொஞ்சம் அதிகமான பணம் கிடைக்கிறது. இங்கிருக்கும் 10 சதவிகிதம் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு தையலைக் கற்றுத்தர விரும்பினாலும் கூட என்னால் கையாள முடியும்” என்றார். ”கொஞ்சம் உதவியுடன் கூடுதலாக இரண்டு தையல் இயந்திரங்களுடன் அந்த பயிற்சி மையத்தைத் தொடங்கியிருக்கிறேன்” என்று கூறினார். “மகள்கள் பள்ளியில் இருக்கும் போது கொஞ்சம் அதிகம் வேலை பார்க்கலாம். . அவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டால், ஓரே குழப்பம்தான்” என்றார்.
“அவரது துணிச்சல் அபூர்வமானது” என்கிறார் மல்லா ரெட்டி. அனந்தபூரின் கிராம முன்னேற்ற அறக்கட்டளையின் சூழல் மையத்தின் நிர்வாக இயக்குநர் மல்லா ரெட்டி. பெண் கல்வியை முன்னேற்றும் அமைப்புடன் அவர் தொடர்பில் இருக்கிறார். “மூன்று மகள்களை வளர்த்துக்கொண்டு இந்த சவால்களைச் சந்திப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், அவர் அதைச் செய்கிறார். அவருக்கு அவருடைய வேலைகளைப் பற்றிய திட்டம் தெளிவாக இருக்கிறது. அவரின் குழந்தைகளின் கண்களில் அவரது கனவினைக் காண்கிறார். அவர்கள்தான் அவரது உந்துசக்தி” என்றார்.
இதே மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பார்வதிகளும், கிருஷ்ணம்மாக்களும் இருக்கிறார்கள். பலரும் கடனை அடைப்பதற்காக கால்நடைகளையும், உடைமைகளையும் விற்றுவிட்டார்கள். தன் குழந்தைகள் கல்விகற்பதை நிறுத்திவிட்டு வீட்டில் தங்கியதைப் பார்த்தவர்கள். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை விட குறைவான கூலிக்காக மிக கடினமாக உழைத்தார்கள் பலர். மற்ற இடங்களில் நிகழ்ந்த விவசாய இழப்புகளைப் போலவே, இவ்விடங்களிலும் பசியும், வலியும் நிறைந்தன. தற்கொலைகளைப் பார்த்த சோகத்தில் மறுபடியும் தற்கொலைகள் நடந்தன. 100,000 மேற்பட்ட மக்கள் அடுத்த தலைமுறையாவது வாழ வேண்டுமே என்னும் நோக்கத்தில் பாடுபடுகிறார்கள். “எங்கள் கதை முடிந்துவிட்டது. எங்கள் பிள்ளைகளுக்காக உழைக்கிறோம்” என்றார் பார்வதி மல்லப்பா.
ஜூன் 26, 2007-இல் தி இந்துவில் இந்த கட்டுரையின் ஒரு வடிவம் முதலில் வெளியிடப்பட்டது.
தமிழில்: குணவதி