“பெண்கள் விமானத்தையே ஓட்டுகிறார்கள், ஆட்டோ ஓட்டுவதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது?” என கேட்கிறார் சாந்தினி பார்மர். 2018-ம் ஆண்டு இவர் ஆட்டோ ஓட்ட தொடங்கும் போது, பூஜ் நகரில் ஆட்டோ ஓட்டும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அப்போது வெறும் 20 வயது மட்டுமே. இரண்டாவதாக, இவரை விட ஒரு வயது மூத்தவரான ஆஷா வகேலா. இருவருமே உறவினர்கள் கூட; ஆஷா, சாந்தினியின் சித்தி.
இவர்கள் ஓட்டும் வாகனம் சக்கடா என அழைக்கப்படுகிறது. மூன்று சக்கரம் கொண்ட இந்த வாகனத்தில் 10 நபர்கள் அமர்ந்து பயணம் செய்யலாம். குஜராத் கட்ச் மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் பூஜ் நகரலிருந்து 25கிமீ சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்ல இது பயன்படுகிறது. இது டாக்ஸி மீட்டர் இல்லாமல் ஓடுவதால், கூடக் குறைய கட்டணம் வாங்குகிறார்கள். “குறைந்த தூரத்திற்கு 20-30 ரூபாய் வாங்குவோம். நீண்ட தூர பயணத்திற்கு அதைவிட சற்று அதிகமாக வாங்குவோம். சில சமயங்களில் அதிக தூரம் சென்றால் 300 ரூபாய் வரை வாங்குவோம்” என்கிறார் ஆஷா.
முதலில் இவர்களது குடும்பங்கள், முக்கியமாக ஆஷாவின் பெற்றோர்கள் தங்கள் மகள்களை வெளியே அனுப்ப தயக்கம் காட்டினார்கள். இதற்குமுன் தங்கள் குடும்பத்திலோ அல்லது பூஜ் நகரிலோ எந்த பெண்ணும் இதுபோல் செய்ததில்லை என்பதால் அவர்கள் பயந்தார்கள். ஆனால் குடும்ப பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு சாந்தினியை ஆட்டோ ஓட்ட கற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதித்தார்கள்.
நான்கு சகோதரிகளுக்கும், இரண்டு சகோதரர்களுக்கும், தங்கள் பெற்றோர்களுக்கும் மூத்த குழந்தையாக இருக்கும் சாந்தினி, பூஜ் ரயில்நிலையத்திற்கு அப்பாலுள்ள புட்டேஷ்வர் நகரில் இருக்கும் அவரது வீட்டிற்கு ஞாயிற்று கிழமை மாலை என்னை அழைத்துச் சென்றார். அவரது வீட்டிற்குச் செல்லும் பாதை மேடும் பள்ளமுமாக மிக மோசமாக உள்ளது. “என்னை தவிர, எந்த ஆட்டோ ஓட்டுனரும் இந்தப் பகுதிக்கு வர மாட்டார்கள். அதனால் எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பலரும் நகரத்திற்கு செல்ல எனக்கு வாடிக்கையாளராக உள்ளார்கள்” என்கிறார்.







