பசுமையான மலைகள், சிறு அருவிகள், சுத்தமான காற்று கொண்ட சூழலில் ஓர் இளைஞர் தன் எருமைகள் மேய்வதை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
“ஏதேனும் கணக்கெடுப்பு எடுக்கிறீர்களா?” என அவரை நான் அணுகியபோது கேட்டார்.
”இல்லை,” என சொல்லிவிட்டு, “இங்கிருக்கும் சத்து குறைபாடு சார்ந்த நிகழ்வுகள் பற்றிய செய்திகள் சேகரிக்க வந்திருக்கிறேன்,” என்றேன்.
மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்டத்திலுள்ள மொகாடா தாலுகாவில் நாங்கள் இருக்கிறோம். 5221 குழந்தைகள் இங்கு குறைந்த எடையில் இருக்கின்றன. அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் குறைந்த எடை இருப்பதில் மாநிலத்திலேயே இது இரண்டாம் இடம் எனக் குறிப்பிடுகிறது இந்த அறிக்கை.
தலைநகர் மும்பையிலிருந்து நாங்கள் வெறும் 157 கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறோம். ஆனால் இங்கிருக்கும் பசுமையான நிலப்பரப்பு , மும்பையிலிருந்து வெகுதூரத்திலிருப்பதை போன்ற தோற்றமளிக்கிறது.
ரோகிதாஸ் கா தாகூர் சமூகத்தை சேர்ந்தவர். மகாராஷ்டிராவில் பட்டியல் பழங்குடி சமூகம் அது. பல்கர் மாவட்டத்தின் 38 சதவிகித மக்கள் பழங்குடியினர்தான். எருமை மேய்க்கும் இளைஞர் தன் வயதை சரியாக சொல்ல முடியவில்லை. 20களின் பிற்பகுதியில் அவர் இருக்கலாம். ஒரு குடை தோளில் தொங்கியது. கழுத்தைச் சுற்றி ஒரு துண்டு. கையில் ஒரு மரக்குச்சு. புற்களை மேய்ந்து கொணிட்ருந்த இரு விலங்குகளைத் தாண்டி அவர் பார்க்கிறார். “மழை பெய்யும் நாட்களில்தான் இவை வயிறு நிறைய சாப்பிட முடியும்,” என்கிறார் அவர். “கோடை காலங்களில் அதிமாக அவை உணவு தேடி அலைய வேண்டும்.”






