‘கேப்டன் பாவ்’ (ராம்சந்திரா ஸ்ரீபதி லாட்)
விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் டூஃபான் சேனையின் தலைவர்
ஜூன் 22, 1922 - பிப்ரவரி 5, 2022
அவர் போராடிய தேசத்தால் எந்த கவுரவமும் செலுத்தப்படாமல் அவர் சென்றுவிட்டார். ஆனால் இவரைத் தெரிந்த ஆயிரக்கணக்கானோர் வணக்கம் செலுத்தியிருக்கின்றனர். 1940களில் உலகிலேயே வலிமையாக இருந்த பேரரசைத் தம் தோழர்களுடன் எதிர்த்து நின்றவர். ராம்சந்திரா ஸ்ரீபதி லாட் தலைமறைவுஅரசில் முக்கியமான பங்கு வகித்தார். 1943ம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து பிரிவதாக அறிவித்த சதாராவின் தலைமறைவு அரசாங்கத்தை புகழ்பெற்ற நானா பாட்டில் தலைமை தாங்கினார்.
ஆனால் கேப்டன் பாவ் (அவரின் தலைமறைவு புனைபெயர்) மற்றும் தோழர்கள் அதோடு நின்றுவிடவில்லை. 1946 வரையிலான மூன்றாண்டுகள் அவர்கள் பிரிட்டிஷாரை தடுத்தி நிறுத்தி வைத்தனர். 600 கிராமங்களிலிருந்து அவர்கள் இணை அரசாங்கத்தை நடத்தினார்கள். ஒருவகையில், பிப்ரவரி 5ம் தேதி நேர்ந்த அவரது மரணம், பிரிட்டிஷாரை எதிர்த்து நின்ற அரசாங்கத்தின் முடிவை குறிக்கிறது.







