சமிதாவின் வீட்டிலிருந்து துணிக்கட்டுகள் அருகே இருக்கும் குடியிருப்புக்கு இப்போது போவதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் வரை, வடா டவுனின் அஷோக்வன் காம்ப்ளக்ஸ்ஸில் இருக்கும் குடும்பங்களின் துணிகளை ஒவ்வொரு நாள் காலையும் வாங்கி வருவார். கையிலும் தலையிலும் மூட்டைகளை தூக்கிக் கொண்டு இரண்டு கிலோமீட்டர் நடந்து பனுஷலி தொழிலாளர் குப்பத்தில் இருக்கும் வீட்டுக்கு செல்வார். அங்கு துணிகளுக்கு இஸ்திரி போட்டு, மடித்து வைத்து அன்று மாலையே குடும்பங்களுக்கு சென்று கொடுத்துவிடுவார்.

“ஊரடங்கு தொடங்கியதிலிருந்து எனக்கு வேலைகள் வருவதில்லை,” என்கிறார் சமிதா மோர். ஒரு நாளைக்கு நான்கு ஆர்டர்கள் கிடைத்த நிலையிலிருந்து மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்கு பிறகு வாரத்துக்கே ஒரு ஆர்டர் மட்டும்தான் சமிதாவுக்கு கிடைக்கிறது. 100லிருந்து 200 ரூபாய்  வரை அன்றாடம் கிடைத்துக் கொண்டிருந்த அவரின் வருமானம் – சட்டை அல்லது பேண்ட்டுக்கு இஸ்திரி போட ஐந்து ரூபாயும் புடவைக்கு 30 ரூபாயும் வாங்குகிறார் – வாரத்துக்கே 100 ரூபாய் என்கிற அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் குறைந்தது. “இவ்வளவு குறைவான வருமானத்தை கொண்டு நான் எப்படி வாழ்வது?” என அவர் கேட்கிறார்.

சமிதாவின் கணவரான சந்தோஷ்ஷுக்கு வயது 48. ஆட்டோ டிரைவராக வேலை பார்த்தவர். 2005ம் ஆண்டில் வடா டவுனருகே செல்கையில், யாரோ ஒருவர் ஆட்டோ மீது எறிந்த கல் பட்டு ஒரு கண்ணின் பார்வை பறிபோனது. “என்னால் வேறு வேலை செய்ய முடியாதென்பதால், என் மனைவியின் இஸ்திரி வேலையில் உதவி செய்கிறேன்,” என்கிறார் அவர். “ஒரு நாளில் நான்கு மணி நேரம் நின்று இஸ்திரி போடுவதால் கால்கள் வலிக்கின்றன.”

சந்தோஷ்ஷும் சமிதாவும் 15 வருடங்களாக இஸ்திரி தொழில் செய்கிறார்கள். “அவருக்கு நேர்ந்த விபத்துக்கு பிறகு, சாப்பாட்டுக்கும் எங்கள் இரு மகன்களின் படிப்பு செலவுக்குமென நான் வேலை பார்க்கத் தொடங்கினேன்,” என்கிறார் சமிதா. “ஆனால் இந்த ஊரடங்கு எங்களுக்கு ரொம்ப கொடுமையாக இருக்கிறது.” கடந்த சில வாரங்களாக கையிலிருந்து சேமிப்பை செலவழித்தார்கள். பிறகு காய்கறிகள் வாங்கவும் மாதாமாதம் வரும் மின்சாரக் கட்டணமான 900 ரூபாய் கட்டவும் உறவினர்களிடம் 4000 ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள்.

Santosh and Samita More have been ironing clothes for 15 years; they have used up their modest savings in the lockdown weeks and borrowed from relatives
PHOTO • Shraddha Agarwal
Santosh and Samita More have been ironing clothes for 15 years; they have used up their modest savings in the lockdown weeks and borrowed from relatives
PHOTO • Shraddha Agarwal

சந்தோஷ்ஷும் சமிதா மோரும் 15 வருடங்களாக இஸ்திரித் தொழிலில் இருக்கிறார்கள். கையிலிருந்து சிறு சேமிப்பும்  செலவாகி, உறவினர்களிடம் கடன் வாங்கியிருக்கிறார்கள்.

மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்டத்திலுள்ள வடா டவுனில் சமிதா வாழும் அதே தெருவில் 45 வயதான அனிதா ரவுத் வசிக்கிறார். அவரும் இஸ்திரித் தொழிலில்தான் வருமானம் ஈட்டுகிறார். “என்னுடைய கணவர் ஆறு வருடங்களுக்கு முன் இறந்துபோனபோது கூட ஓரளவுக்கேனும் என்னால் சமாளிக்க முடிந்தது. ஆனால் இந்த ஊரடங்கு நேரத்தில் எங்களின் தொழில் முற்றிலுமாக முடக்கப்பட்டுவிட்டது,” என்கிறார் அவர். அனிதாவின் கணவர் 40 வயதான போது பக்கவாதம் வந்து உயிரிழந்தார்.

அவருடன் வசிக்கும் 18 வயதான மகன் பூஷனும் இஸ்திரி வேலைக்கு உதவுகிறார். “என் கணவர், அவருடைய அப்பா, தாத்தா எல்லாரும் இந்த வேலைதான் செய்தார்கள்,” என்கிறார் அனிதா. பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சலவைத் தொழிலாளர் சமூகமாக குறிப்பிடப்பட்டிருக்கும் பரீத் சாதியை சேர்ந்தவர். (இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பிற குடும்பங்கள் மராத்தா அல்லது பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள்.) “அவருடைய கால்கள் ஒரு நாளில் 5-6 மணி நேரங்கள் இஸ்திரி போட நிற்பதால் வீங்கி விடுகின்றன. அதனால் நானும் அந்த வேலையை செய்கிறேன். துணிகளை வீடுகளுக்கு கொண்டு போய் நானே கொடுக்கிறேன்,” என்கிறார் பூஷன். வடாவின் ஜூனியர் கல்லூரியில் 12ம் வகுப்பு படிக்கிறார் அவர்.

“இந்த மாதங்களிலெல்லாம் (ஏப்ரலிலிருந்து ஜூன் வரை) நிறைய திருமண நிகழ்ச்சிகள் நடக்கும். புடவை மற்றும் துணிகளுக்கு (சல்வார் கமீஸ்) இஸ்திரி போடும் வேலைகள் நிறைய இந்த நேரத்தில் எங்களுக்கு கிடைக்கும். ஆனால் இப்போது எல்லா திருமண நிகழ்ச்சிகளும் வைரஸ்ஸால் ரத்து செய்யப்பட்டுள்ளது,” என்கிறார் அனிதா. திறந்த சாக்கடை இருக்கும் ஒரு குறுகலான சந்தில் இருக்கும் ஒரறை வீட்டில் வசிக்கிறார். வீட்டு வாடகை 1500 ரூபாய். “கடந்த வருடம் அன்றாடச் செலவுக்காக என் சகோதரியிடம் கொஞ்சம் கடன் வாங்கினேன்,” என்கிறார் அவர். ஆறு வருடங்களுக்கு முன் அவரின் கணவருக்கு பக்கவாதம் வந்த பிறகான சிகிச்சைக்கும் சகோதரியிடமிருந்து அவர் கடன் வாங்கியிருந்தார். “இந்த மாதத்தில் கடனை திரும்ப அடைத்துவிடுவதாக வாக்குறுதி கொடுத்திருந்தேன். ஆனால் எந்த வருமானமும் இல்லை. நான் எப்படி கடன் அடைப்பது?” என கேட்கிறார் அவர்.

47 வயதாகும் அனில் துர்குதே வடாவின் அதே பகுதியில் வசிப்பவர். ஏப்ரலிலிருந்து ஜூன் மாதம் வரை அதிகமான இஸ்திரி வேலைகள் கிடைக்குமென நம்பியிருந்தார். அவரின் வலது பாதத்தில் இருக்கும் வெரிகோஸ் நரம்புகளில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்கு அவருக்கு பணம் தேவை. வெரிகோஸ் நோய் நரம்பின் சுவர்களும் வால்வுகளும் பழுதானாலோ வலிமை குறைந்தாலோ வருவது. “எனக்கு இப்பிரச்சினை இரண்டு வருடங்களாக இருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் 70000 ரூபாய் ஆகும். அந்த மருத்துவமனையும் வடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது.

“ஆனால் ஊரடங்கினால் என்னுடைய தொழில் முடங்கிவிட்டது,” என்கிறார் அனில். அவரின் காலில் தொடர் வலி இருந்து கொண்டே இருக்கிறது. “ஒரு நாளில் குறைந்தது ஆறு மணி நேரங்களாவது இஸ்திரி போட நிற்க வேண்டும். என்னிடம் சைக்கிள் இல்லை என்பதால் என்னுடைய வாடிக்கையாளர்கள் வீட்டுக்கே வந்து துணிகளை கொடுத்து விட்டுப் போவார்கள். ஒரு நேரத்தை நான் சொல்லிவிடுவேன். அந்த நேரத்தில் திரும்ப வந்து துணிகளை எடுத்துக் கொள்வார்கள்.” ஊரடங்குக்கு முன் மாதத்துக்கு 4000 ரூபாய் வரை அனில் சம்பாதித்தார். கடந்த இரு மாதங்களில் அவர் வெறும் ஆயிரத்திலிருந்து ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை மட்டுமே சம்பாதித்திருக்கிறார்.. சேமிப்பை செலவழிப்பதாக அவர் சொல்கிறார்.

Left: Anita Raut, son Bhushan (centre) and nephew Gitesh: 'Our [ironing] business has shut down'. Right: Anil and Namrata Durgude: 'We are losing our daily income'
PHOTO • Shraddha Agarwal
Left: Anita Raut, son Bhushan (centre) and nephew Gitesh: 'Our [ironing] business has shut down'. Right: Anil and Namrata Durgude: 'We are losing our daily income'
PHOTO • Shraddha Agarwal

இடது: அனிதா ரவுத், மகன் பூஷன் (நடுவே) மற்றும் கிதேஷ். ‘எங்களின் (இஸ்திரி) தொழில் முடங்கிவிட்டது’. வலது: அனில் மற்றும்  நம்ரதா துர்குதே: “எங்களின் அன்றாட வருமானத்தை இழந்து கொண்டிருக்கிறோம்’

“இஸ்திரி போடுகையில் வெளியாகும் வெப்பத்தை என் மனைவி நம்ரதாவால் தாங்கிக் கொள்ள முடியாது. வீட்டு வேலையையும் எங்கள் வேலைகளின் கணக்கு வழக்கையும் அவர் பார்த்துக் கொள்கிறார். எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. ஆனால் இறந்து போன என் சகோதரனின் இரண்டு மகன்களை பார்த்துக் கொள்கிறோம். என்னுடைய இளைய சகோதரர் சில வருடங்களுக்கு முன் நேர்ந்த ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டார்,” என விளக்குகிறார் அனில். இரண்டு மகன்களின் தாய் தையல் வேலை பார்க்கிறார். ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் அவரின் 5000 ரூபாய் வருமானமும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கிறது. “இந்த ஊரடங்குக்கான காரணத்தை எங்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. இயல்பு எப்போது திரும்பும் என்றும் எங்களுக்கு தெரியவில்லை,” என்கிறார் அனில். “ஒவ்வொரு நாளின் வருமானத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாக எங்களுக்கு தெரிகிறது.”

சுனில் பாட்டிலின் வருமானத்தையும் ஊரடங்கு பாதித்திருக்கிறது. மார்ச் 25-க்கு முன் வரை, அவர் நாளொன்றுக்கு இஸ்திரி வேலைகளில் 200 ரூபாயும் ‘மகாலஷ்மி’ என்கிற பெயரில் நடத்தும் கடையின் வழி 650 ரூபாயும் சம்பாதித்திருந்தார். பருப்பு, அரிசி, எண்ணெய், பிஸ்கட்டுகள், சோப் போன்ற பொருட்களை விற்கும் சிறுகடை அது. “இப்போது என் வருமானம் ஒரு நாளுக்கு 100-200 ரூபாய் என குறைந்துவிட்டது,” என்கிறார் அவர்.

மனைவி அஞ்சுவுடனும் மூன்று குழந்தைகளுடனும் 2019ம் ஆண்டின் அக்டோபரில் வடா டவுனுக்கு சுனில் வருவதற்கு முன் காய்கறிக் கடையில் 150 ரூபாய் நாட்கூலிக்கு உதவியாளராக வேலை பார்த்தார். “என் சகோதரி இந்தக் கடையை பற்றி சொன்னார். அவரிடமிருந்து ஆறு லட்சம் ரூபாய் கடன் வாங்கி இந்தக் கடையை நான் வாங்கினேன்,” என்கிறார் அவர். புதுக்கடை வாங்குவது பெரிய கட்டம். அவர் வாழ்க்கையின் பெரும் நம்பிக்கை.

கடைக்கு வெளியே இஸ்திரி வேலைக்கு என ஒரு மேஜை போட்டிருக்கிறார் சுனில். ஊரடங்குக்கு முன் வரை ஒரு நாளில் மட்டும் 4-5 இஸ்திரி வேலைகள் கிடைக்கும்.  “நிலையான வருமானம் கிடைத்ததால் இஸ்திரி வேலை செய்யத் தொடங்கினேன். கடை இருந்தாலும் அதில் சில நேரங்களில் வருமானம் வரும். சில நேரங்களில் வராது.”

48 வயதாகும் அஞ்சு, “இஸ்திரி வேலைகளில் என் கணவருக்கு நானும் உதவ விரும்புகிறேன். ஆனால் இரண்டு மணி நேரங்களுக்கு மேல் நின்றால் எனக்கு முதுகு வலிக்கும். ஆதலால் கடையை நான் கவனித்துக் கொள்கிறேன். இப்போது நாங்கள் கடையை மூன்று மணி நேரங்களுக்கு மட்டும் திறந்து கொள்ளலாம் (காலை 9 மணியிலிருந்து நண்பகல் வரை). இன்று இரண்டு பார்லி-ஜி பிஸ்கெட் பாக்கெட்டுகளை மட்டுமே விற்றிருக்கிறேன். வாடிக்கையாளர் வந்தாலும் எதை நாங்கள் விற்பது? எங்கள் கடை காலியாக இருக்கிறது,” என்கிறார். ஊரடங்குக்கு முன் வாங்கப்பட்ட பொருட்கள் மட்டும் மகாலஷ்மி கடையில் இருந்தது. அலமாரிகளில் பெரும்பகுதி காலியாகிவிட்டது. “பொருட்களை வாங்கி வைக்கக் கூட பணமில்லை,” என்கிறார் சுனில்.

அவர்களின் 23 வயதான மகள் சுவிதா, வடா டவுனில் ட்யூஷன் எடுத்து ஈட்டிய 1500 ரூபாய் மாத வருமானமும் தற்போது நின்றுவிட்டது. வகுப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. “ஏப்ரம் மாதம் நடக்கவிருந்த சுவிதாவின் நிச்சயதார்த்தத்தையும் ஊரடங்கு காரணமாக நாங்கள் தள்ளிப்போட்டிருக்கிறோம்,” என்கிறார் சுனில். “பையனின் தந்தை திருமணச் செலவுக்கு 50000 ரூபாய் நான் தரவில்லையெனில் நிச்சயதார்த்தத்தை நிறுத்தப் போவதாக மிரட்டியிருக்கிறார். அவருக்கும் ஊரடங்கின் காரணமாக நிறைய நஷ்டமாகியிருக்கிறது.”

பாட்டில் குடும்பத்தின் குடும்ப அட்டை வடா டவுனில் ஏற்கப்படவில்லை. அதனால் கோதுமையையும் அரிசியையும் சந்தையிலேயே அவர்கள் வாங்கினார்கள். அதுவும் அவர்களுக்கு நிலையான வருமானம் வந்து கொண்டிருந்த காலத்தில்தான்..

காணொளி: ‘என்னால் இன்று வாழ முடியும். ஆனால் நாளைக்கு என்னிடம் உணவு இல்லை’

அவர்களின் மற்ற இரண்டு குழந்தைகளான 21 வயதாகும் அனிக்கெட் மற்றும் 26 வயதாகும் சஜன்  வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். “என்னுடைய மூத்த மகன் பிவாந்தியிலுள்ள கேமரா ரிப்பேர் கடை ஒன்றில் வேலை  (ஊரடங்குக்கு முன்) பார்த்தார். இப்போது அக்கடை மூடப்பட்டிருக்கிறது. அனிகெத் சமீபத்தில்தான் பட்டப்படிப்பை முடித்தார்,” என்கிறார் சுனில். ‘சில நேரங்களில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ளலாமா என யோசித்திருக்கிறேன். பிறகு இதில் நான் மட்டும் அல்ல; எல்லாரும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என புரியும். பக்கத்து வீட்டிலிருக்கும் சவரத் தொழில் செய்பவர் பல நாட்களாக சம்பாதிக்கவில்லை. சில நேரங்களில் அவருக்கு கொஞ்சம் பிஸ்கட்டுகளையும் பருப்பையும் (மிச்சமுள்ள) கடையிலிருந்து கொடுக்கிறேன்.”

பிவாந்தியில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் வடா டவுனில் பாட்டில் குடும்பத்தின் குடும்ப அட்டை ஏற்கப்படுவதில்லை. நியாயவிலைக் கடையில் அவர்களுக்கு கிலோ இரண்டு ரூபாயில் கோதுமையும் மூன்று ரூபாய்க்கு அரிசியும் கிடைத்திருக்கும். ஆனால் “நான் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ கோதுமையையும் 30 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியையும் சந்தையில் வாங்குகிறேன்” என்கிறார் சுனில். அதுவும் அவர்களுக்கு தொடர் வருமானம் இருந்த காலத்தில்தான். “தற்போது கடையில் கிடைக்கும் சிறிய வருமானத்தை கொண்டு வாரத்துக்கு ஒரு முறை உணவுப் பொருட்களை வாங்குகிறேன். கடையில் வியாபாரமில்லாத நாட்களில் ஒருவேளை உணவு மட்டுமே நாங்கள் உண்கிறோம்,” என்கிறார் சுனில் அழுதபடி.

மற்ற குடும்பங்களும் ஊரடங்கை சமாளிக்கும் உத்திகளை உருவாக்கியிருக்கின்றன. ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து அனிதா அருகே இருக்கும் ஒரு குடியிருப்பில் வீட்டு வேலை செய்யத் தொடங்கியிருக்கிறார். அதில் அவருக்கு மாதம் 1000 ரூபாய் கிடைக்கிறது. “நாங்கள் வேலைக்காக வெளியே செல்லவில்லை என்றால், எங்களுக்கு சாப்பிட உணவு இருக்காது,” என்கிறார் அவர். “பழைய, கிழிந்த துணியில் முகக்கவசம் தைத்துக் கொண்டேன். அதை மாட்டிக் கொண்டு நான் வேலைக்கு செல்கிறேன்.”

அனிதா மற்றும் சமிதா ஆகியோரின் குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 500 ரூபாய் கிடைத்தது. மே மாதத்தில் (ஏப்ரல் மாதத்திலல்ல) குடும்ப அட்டைக்கு கிடைக்கும் ஐந்து கிலோ உணவுப்பொருட்கள் அல்லாமல் கூடுதலாக ஐந்து கிலோ அரிசி தலா ஒருவருக்கு என கிடைத்தது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சமிதா இஸ்திரி வேலை செய்கிறார். “ஊரடங்கில் யாரும் பேண்ட்-சட்டைகள் போடவில்லை என்றாலும், ஆர்டர் கிடைத்தால் நான் வெளியே செல்ல வேண்டும். என் மகன்கள் வீட்டை விட்டு செல்ல வேண்டாமென என்னை சொல்கிறார்கள். ஆனால் வேறு வழியில்லை என்பது அவர்களுக்கு தெரியவில்லை. எப்படியாவது அவர்களுக்கு நான் வருமானம் ஈட்ட வேண்டும்,” என்கிறார் சமிதா.

துணிகளை வாங்கவோ கொடுக்கவோ வெளியே சென்றுவிட்டு, வீடு திரும்பியதும் அவருடைய மகன் யூ ட்யூப் வீடியோ ஒன்றை பார்த்து அறிவுறுத்தியபடி அவர் கைகளை சோப் போட்டு கழுவுகிறார்.


தமிழில்: ராஜசங்கீதன்.

Shraddha Agarwal

ଶ୍ରଦ୍ଧା ଅଗ୍ରୱାଲ୍‌ ପିପୁଲ୍‌ସ ଆର୍କିଭ୍‌ ଅଫ୍‌ ରୁରାଲ୍‌ ଇଣ୍ଡିଆରେ ରିପୋର୍ଟର ଓ କଣ୍ଟେଣ୍ଟ ଏଡିଟର୍‌ ଭାବେ କାମ କରନ୍ତି ।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Shraddha Agarwal
Translator : Rajasangeethan

ରାଜସଙ୍ଗୀତନ୍‌ ଚେନ୍ନାଇରେ ରହୁଥିବା ଜଣେ ଲେଖକ। ସେ ଏକ ଅଗ୍ରଣୀ ତାମିଲ ସମାଚାର ଚାନେଲରେ ସାମ୍ବାଦିକ ଭାବେ କାର୍ଯ୍ୟରତ ଅଛନ୍ତି।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Rajasangeethan