இந்தியாவின் ‘விவசாயப் பேரிடர்’ வெறும் விவசாயிகளுக்கு மட்டுமே ஏற்பட்டிருக்கும் பேரிடர் அல்ல.
இது ஒட்டுமொத்த சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பேரிடர் ஆகும். இந்தியாவின் சிறு விவசாயிகள், தொழிலாளர்கள் பெருந்திரளாகக் கூடி தங்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடுகிறார்கள். அந்த வகையில் அது நாகரிகப் பேரிடராகவும் இருக்கக் கூடும். உழுகிற நிலத்தை இழந்து நிற்பது என்பது மட்டுமே விவசாயப் பேரிடரின் அளவுகோலாக இனி ஒருக்காலும் இருக்க முடியாது. இனிமேலும், விவசாய நெருக்கடியை நிலத்தை இழந்துவிட்டு நடுத்தெருவில் நிற்பது மட்டுமே என்று சுருக்கிவிட முடியாது. அது நிச்சயமாக மனித உயிர்கள், வேலைவாய்ப்புகள், மகசூல் ஆகியவற்றைப் பறிகொடுப்பது மட்டுமே அல்ல. இந்தப் பேரிடரானது நம்மிடம் மிச்சம் மீதியிருக்கும் மனித நேயமும் மரித்துக் கொண்டிருப்பதற்கான ஆதாரம். நம்முடைய மானுடம் சுருங்கி கொண்டே வருவதன் சாட்சியம். கடந்த இருபது ஆண்டுகளில் 300,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதும், திக்கற்றுத் தவித்துக் கொண்டிருக்கும் கடைக்கோடி மக்களின் துயரம் பெருகிக் கொண்டே இருந்த போதும் நாம் வேடிக்கை பார்ப்பதை தவிர வேறொன்றும் செய்யவில்லை. இந்தத் துயர்மிகுந்த காலத்தில் தான், மனசாட்சியே இல்லாமல் இந்தியாவின் ‘முன்னணி பொருளாதார மேதைகள்’ சிலர் விவசாயம் பேரிடரில் தவிக்கிறதா என்ன? என்று நக்கல் தொனிக்கப் பேசினார்கள்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளின் தற்கொலை புள்ளிவிவரங்களை வெளியிடவே இல்லை. அதற்குச் சில ஆண்டுகள் முன்புவரை பல்வேறு மாநிலங்கள் தாக்கல் செய்த போலியான புள்ளி விவரங்கள் பெருமளவில் குற்ற ஆவணக் காப்பகத்தின் கணக்கீடுகளைச் சிதைத்தன. எடுத்துக்காட்டாக, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் முதலிய மாநிலங்கள் ஒரே ஒரு விவசாயி கூடத் தங்கள் மாநிலங்களில் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று புள்ளிவிவரங்களை நீட்டின. கடந்த 2014-ல், 12 மாநிலங்கள், 6 மத்திய ஆட்சிப்பகுதிகள் ஒரு விவசாயி கூடத் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று அறிக்கை வாசித்தன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ‘விவசாயத் தற்கொலை’ புள்ளிவிவரங்களில் 2014, 2015 ஆண்டுகளில் மோசடியான வெட்கக்கேடான கணக்கீட்டு முறைகளைக் கொண்டு தற்கொலைகளின் எண்ணிக்கைகள் குறைத்து கணக்குக் காட்டப்பட்டன. எனினும், களத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் கூடிக்கொண்டே இருக்கின்றன.
இன்னொரு பக்கம், விவசாயிகள், தொழிலாளர்களின் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்ததைப் போல விவசாயிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது போல ஒப்பந்தங்களைக் கொண்டு அவர்களை ஏமாற்றி, ஏய்க்கிறார்கள். பண மதிப்பு நீக்கம் விவசாயத்தை உருக்குலைத்தது. பண மதிப்பு நீக்கம் எல்லாப் பக்கங்களிலும் கேட்டையே விளைவித்தது என்று சொல்ல வேண்டியதில்லை. ஊரகப்பகுதிகளில் கோபமும், வலியும் கூடிக்கொண்டே இருக்கின்றன. ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் திட்டமிட்டு தீர்த்து கட்டப்படுவதால் விவசாயிகள் மட்டுமல்லாமல் தொழிலாளிகளும் கொதித்துப் போயுள்ளனர். இந்தக் கொதிப்பு மீனவர்கள், ஆதிவாசிகள், கைவினை கலைஞர்கள், சுரண்டப்படும் அங்கன்வாடி தொழிலாளர்கள் என்று அனைவரிடமும் குமுறிக் கொண்டிருக்கிறது. தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்கள், அரசே தான் நடத்தும் பள்ளிகளை இழுத்து மூடுவதையும், அவற்றுக்குச் சாவு மணி அடிப்பதையும் காண்கிறார்கள். அரசுத்துறை, போக்குவரத்துத் துறை, பொதுத்துறை ஆகியவற்றில் பணியாற்றும் கடைக்கோடி ஊழியர்களின் வேலைக்கும் வேட்டு வைக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.





