திருப்பமும் வளைவும் கொண்ட லாலிபாப் வடிவத்திலான கத்கியேதியின் ரட-டட்-டட் சத்தம், பொம்மை விற்பவர்கள் பெங்களூருவின் தெருக்களுக்கு வந்துவிட்டார்கள் எனச் சுட்டுகிறது. அருகிலிருக்கும் குழந்தைகள் ஒவ்வொன்றும் அந்த பொம்மையை விரும்பியது. தெருக்களிலும் சிக்னல்களிலும் பரவலாகக் காணப்படுகிற சத்தம் தரும் பளபளப்பான பொம்மை, 2000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாதிலிருந்து வியாபாரியால் நகரத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. "நாங்கள் செய்யும் பொம்மை அத்தனை தூரம் பயணிப்பதில் சந்தோஷம் கொள்கிறோம்," என்கிறார் பொம்மை செய்பவர் பெருமையோடு. "நாங்கள் செல்ல விரும்பினாலும் பயணிக்க முடியாது. ஆனால் எங்களின் பொம்மை பயணிக்கிறது. இது நல்ல அதிர்ஷ்டம்."
முர்ஷிதாபாத்தின் ரம்பரா கிராமத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருமே கத்கியேதி பொம்மை செய்கின்றனர். நெல்வயல்களின் களிமண்ணும் இன்னொரு கிராமத்திலிருந்து கொண்டு வரும் சிறு மூங்கில் குச்சிகளும் கத்கியேதி செய்ய பயன்படுத்தப்படுவதாக ரம்பராவில் வீட்டிலிருந்து பொம்மை தயாரிக்கும் தபன்குமார் தாஸ் சொல்கிறார். அவரிம் மொத்தக் குடும்பமும் தயாரிப்பில் ஈடுபடுகிறது. வண்ணங்கள், ஒயர்கள், வண்ணக் காகிதம், பழைய படச்சுருள்கள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். “ஒரு அங்குலம் அளவில் வெட்டப்பட்ட இரண்டு படச் சுருள்கள் மூங்கில் கண்ணில் செருகப்படும்,” என்கிறார் கொல்கத்தாவின் பராபஜாரிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன் படச்சுருள்கள் வாங்கி வந்த தாஸ். அச்சுருள்கள் கத்கியேதி அசையவும் சத்தம் கொடுக்கவும் உதவுகின்றன.


