“விழாவுக்கான சிறந்த நாள் இது. வானிலையும் நன்றாக இருக்கிறது,” என்கிறார் லெ மாவட்டத்தின் சாலை கட்டுமான வேலைகள் செய்யும் தினக்கூலி தொழிலாளர் பெமா ரிஞ்சென்
லடாக்கின் ஹன்லே கிராமத்தை சேர்ந்த 42 வயது ரிஞ்சென், திபெத்திய நாட்காட்டியின் முக்கிய விழாவென சகா தவா விழாவை குறிப்பிடுகிறார். லடாக், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச பவுத்தர்களால் அந்த விழா கொண்டாடப்படுகிறது.
“முன்பு, ஒவ்வொரு கிராமமும் சகா தவா விழாவை அவரவர் பகுதிகளில் கொண்டாடினர். ஆனால் இந்த வருடம் (2022) ஆறு குக்கிராமங்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றன,” என்கிறார் 44 வயது சோனம் டோர்ஜே. ஹன்லேவின் இந்திய வானியல் மையத்தில் பணிபுரியும் அவர் நாகா கிராமத்தை சேர்ந்தவர். கோவிட் ஊரடங்கால் இரண்டு வருடங்கள் சிறு அளவில் மட்டுமே கொண்டாட முடிந்த புங்குக், குல்தோ, நாகா, ஷாதோ, போக் மற்றும் ஜிங்சோமா போன்ற கிராமங்கள் தற்போது ஒன்றாக கொண்டாடவிருக்கின்றன. குறைவான மக்கள்தொகை கொண்ட இந்த குக்கிராமங்கள்1,879 பேர் (கணக்கெடுப்பு 2011) வசிக்கும் ஹன்லே கிராமத்தில் இருக்கின்றன.
மஹாயானா பிரிவு பவுத்தர்களால் கொண்டாடப்படும் சகா தவா, திபெத்திய சந்திர நாட்காட்டியின் நான்காவது மாதத்தின் 15ம் நாள் கொண்டாடப்படுகிறது. 2022ம் ஆண்டில் இந்த நாள் ஜூன் மாதத்தில் வருகிறது. திபெத்திய மொழியில் ’சகா’ என்றால் நான்கு, ‘தவா’ என்றால் மாதம் எனப் பொருள். சகா தவா மாதத்தை ‘நல்ல செயல்களுக்கான மாதம்’ எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த மாதத்தில் செய்யப்படும் நற்செயல்களுக்கான பலன்கள் பல முறை கிடைக்கும் என சொல்லப்படுகிறது.புத்தரை நினைவுகூரும் இவ்விழா, அவரின் பிறப்பு, ஞானமடைதல், முற்றும் துறத்தல் ஆகியவற்றை குறிக்கிறது.































