ராய்ப்பூரில் உள்ள தெலிபந்தா ரயில் நிலையத்தில் மாலை 6 மணியளவில், ராய்ப்பூர்-தம்தாரி குறுகிய தடத்தில் பயணிக்கும் ரயிலில் ஏறிய உடனேயே, எனக்கு ஒருவர் அமருவதற்கு இடம் தந்தார். நான் ஏற்றுக்கொண்டு, அவருடனான எனது உரையாடலைத் தொடங்கினேன். இந்த பயணம் தொடங்கியதில் இருந்து, இந்த ரயிலில் தினமும் பயணிக்கும் மனிதர்களுடன் எனது உரையாடலைத் தொடர்ந்தேன். என்னுடன் பயணிக்கும், சகபயணியான கிருஷ்ணகுமார் தாரக், நவ்கான்(துஹா) கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் அவரது ஊரிலிருந்து தினமும் 12 கிலோமீட்டர் தூரம், மிதிவண்டியில் பயணம் செய்து இந்த வழித்தடத்தில் உள்ள குருத் ரயில் நிலையத்தை அடைகிறார்.
இந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த இவரும்,இவரைப் போன்ற பிற தொழிலாளர்களும், அதிகாலையிலே ரயிலைப் பிடித்து, தினக்கூலி வேலை தேடுவதற்காக, சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரை அடைகின்றனர். மாலையில் வெகுநேரம் கழித்தே வீட்டை அடைகின்றனர். தம்தாரி வரை செல்லும் இந்த ரயில் மற்றும் இன்னொரு ரயில் இரண்டும், சுமார் 66 கிலோமீட்டர் தூரம்வரை பயணிக்கிறது. அதற்கு ஏறக்குறைய 3 மணிநேரம் எடுத்துக்கொள்ளும் இந்த ரயில்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை இந்த வழித்தடத்தில் பயணிக்கிறது.
இதேவேளையில், தம்தாரி மாவட்டத்தின் பகுதிகளில், வருடத்திற்கு இருபோகம் சாகுபடியாவதால், விவசாயத் தொழிலாளர்களுக்கு தேவை உள்ளது என, இந்த பயணத்தில் நான் ஈடுபட்ட உரையாடலின் வாயிலாக தெரிந்துக் கொண்டேன். மேலும், இங்கு விவசாயக்கூலி குறையாக,கிட்டத்தட்ட 1௦௦ ரூபாயாக உள்ள வேளையில், ராய்ப்பூர் பகுதியில் 2௦௦ லிருந்து 250 ரூபாயாக உள்ளது. அதுமட்டுமல்லாது, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் இதர பஞ்சாயத்து வேலைகளின் வழியாக கிடைக்கும் வருமானம், வேலை செய்ததற்கு அடுத்த மாதம் தான் கிடைக்கிறது. ஆனால், நகர்புறத்தில் கிடைக்கும் வருமானம் என்பது உடனடியாக கிடைத்து விடுகிறது. இதன் காரணமாகவே பலர், ஆறு மணிநேரம் ரயிலில் பயணம் செய்து ராய்ப்பூருக்கு வேலைக்கு செல்கின்றனர்.
கிருஷ்ணகுமாரிடம் அவர் எங்கிருந்து வருகிறார் எனக்கேட்டேன். அவருக்கு வயது 40க்கு மேல் இருக்கும். “நான் ராய்ப்பூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன். எனது மிதிவண்டியை பான்(பாக்கு) கடையில்(குருத்தில்) விட்டு விட்டு வருவேன். இரவு சுமார் 10 மணியளவில் தான் நான் வீட்டை அடைவேன்”. என பதிலளித்தார். பான் கடை மிதிவண்டி நிறுத்தமாகவும் செயல்படுகிறது. இங்கு தினமும் 50-1௦௦ மிதிவண்டி வரை தினமும் நிறுத்தப்படுகிறது. அதற்கு ஒரு நாளைக்கு 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
மேலும், எவ்வளவு நிலம் நீங்கள் வைத்துள்ளீர்கள்? பயிர்களின் விளைச்சல் எவ்வாறு உள்ளது? என கேட்டபோது “ஐந்து ஏக்கர்” வைத்துள்ளதாக தெரிவித்தார். மேற்கொண்டு கூறுகையில்,”ராபி பயிர் இன்னும் வயலில் சாகுபடியில் தான் உள்ளது.(நாங்கள் சந்தித்த போது). எங்கள் விளைச்சலில் சிறிதளவு கரீப் அரிசியை விற்றுவிட்டு, சிலவற்றை எங்கள் வீட்டு தேவைகளுக்காக வைத்துக்கொள்வோம்.” என்றார். பாசன வசதி உள்ள அவரது நிலத்தில் இரண்டு போகம் சாகுபடி நடக்கிறது. சாகுபடி காலத்தின் போது அவரது மொத்தக் குடும்பத்தினரும் ஒன்றாக உழைக்கின்றனர். “நாங்கள் உரம், இடுபொருட்கள் மற்றும் இதர பொருட்களுக்காக 25,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை செலவு செய்கிறோம். எங்கள் குடும்பத்தில் 45 பேர் உள்ளனர். எனக்கு ஐந்து சகோதரர்கள், எல்லோருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். எனது மனைவி விமலா, எனக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்”
எனது உரையாடலுக்கு அழுத்தம் கொடுத்து: நீங்கள் எதுவரை படித்துள்ளீர்கள்? என்றேன். “நான் மூன்றாம் வகுப்பு வரை படித்துள்ளேன். என் பெற்றோர்களால் படிக்க(அதற்குமேல்) வைக்க முடியவில்லை, அதற்கு பதிலாக வேலைக்கு செல்ல கூறினர். எங்கள் பொருளாதாரச்சூழல் நன்றாக இல்லை. எனது தந்தைக்கு மூன்று மனைவிகள். முதல் தாரத்திற்கு இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள்- அதில் நானும் ஒன்று.” என்றார்.






