”கடன் வசூலிக்கும் முகவர்கள் எங்களது வீடு தேடி வருவதை தற்போது நிறுத்து விட்டனர்”, என்றார் யவத்மால் மாவட்டதவரான சரஸ்வதி அம்பேர்வர். ஜூன் 15ம் தியதி அ ப ஜெ அப்துல் கலாம் வருகை தரவிருக்கும் இடத்திற்க்கு மிக அருகாமையில் தான் இவர் வசிக்கிறார். 1998ம் ஆண்டு நடந்த இவரது கணவர் ராம்தாசின் மரணம் தான் விதர்பா பகுதியிலிருந்து ஊடகங்களின் மூலம் வெளிவந்த முதல் விவசாய தற்கொலை குறித்த செய்தியாகும். அவரது மரணத்தைத் தொடர்ந்து கடன் வழங்கியவர்கள் கடனை திருப்பிச் செலுத்த தொடர்ந்து வலியுறுத்தப்பட்டார். அப்படியான சூழலைக் கடந்து தற்போது எவரும் கடனை திரும்பச் செலுத்தக் கேட்டு வரவில்லை என்பதே ஆச்சர்யமான செய்தி தான்.
“கடந்த முறை கடனை வசூலிக்க வந்தவர்களிடம் கிஷோர் வழங்கிய கடிதத்தை காண்பித்தேன், பின்னர் அவர்கள் இங்கு வருவதை நிறுத்தி விட்டனர்”. ஒரு கடிதம் கடன் வசூலிப்பவர்களை எவ்வாறு தடுத்து நிறுத்தியது?. விதர்பா மக்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக செயல்படுபவர் தான் கிஷோர் திவாரி. அப்பகுதியில் விவசாயிகள் உரிமைக்காக தொடர்ந்து போராடுபவர். வங்கிகளை கண்டித்து முற்றுகை போராட்டங்கள் நடத்தி அவர்களை துரத்தியவர். இப்படியானவரின் கடிதத்தால் எப்படி கடன் வசூலிப்பாளர்களை தடுத்து நிறுத்த முடிந்தது?
“அன்பிற்குரிய கடன் வசூலிக்கும் அதிகாரிக்கு, ராம்தாஸ் பல முறை சொர்கத்திலிருந்து என் கனவில் தோன்றி உங்களது கடனை திருப்பி செலுத்தும் அளவு பணம் அவரிடம் உள்ளதாகவும், உடனே கடன் வசூலிப்பாளர்களை சொர்கத்திற்க்கு வந்து பணத்தை பெற்று கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார். இவண், கிஷோர் திவாரி”, என்பது தான் அக்கடிதத்தின் சாரம்.
திவாரி ஜனாதிபதி கலாமிற்க்கு எழுதிய மடல் சற்று பணிவுடனே எழுதப்பட்டிருந்தது. “இந்த துரதிருஷ்டமான விதவைகளை யவத்மால் அல்லது வார்தாவில் சந்திக்க ஒரு சில நிமிடங்களை ஒதுக்க பணிவோடு விழைகிறேன்”, என கோரியிருந்தார்.
நாக்பூர் மற்றும் மேற்கூறிய இடங்களை ஜனாதிபதி கடந்து செல்கிறார். அவரது பயணத்திட்டத்தில் யவத்மால் மாவட்டத்தில் அமோல்க்சந்த் கல்லூரியின் நிகழ்வும், வார்தா மாவட்டம் மகாத்மா காந்தி சர்வதேச இந்தி பல்கலைகழகத்தில் ஒரு நிகழ்வும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாய நெருக்கடி குறித்த எந்த நிகழ்விலும் கலந்து கொள்வதாக தகவல் இல்லை.
பருத்தி விலை பிரச்சனைகள்
ஜனாதிபதி கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வுகள் விவசாய நெருக்கடியால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட யவத்மால் மாவட்டதில் தான் நடைபெறுகின்றன. “இந்த ஆண்டு மட்டும் விதர்பா பகுதியில் 428 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்”, என குறிப்பிடுகிறார் திவாரி. “பருத்தி விலை நிர்ணயத்தில் அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த வருடம் மிக மோசமானதாக அமையும். கடந்த ஆண்டு 1,296 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விதர்பாவின் ஆறு மாவட்டங்களில் மேலும் 1,348 தற்கொலைகள் நடந்ததாக ஒத்துக்கொள்ளும் அரசு, அவை விவசாய நெருக்கடியால் நடைபெற்றவை அல்ல எனவும் அறிவித்துள்ளது.
2001ம் ஆண்டு முதல் யவத்மால் மாவட்டத்தை உள்ளிட்ட விதர்பா பகுதியில் 6000 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. 1990ம் ஆண்டுக்கு பின்னர் தற்கொலை செய்து கொண்ட சுமார் 1,00,000 விவசாயிகள் ஒருவரின் விதவை தான் சரஸ்வதியும். இவரை போன்ற பல நூறு பெண்கள் யவத்மால் மாவட்டத்தில் தனித்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவரது வீட்டிற்க்கு சிவ சேனாவின் தலைவரான அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் நாராயண் ரானே உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர். அப்போது வழங்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் உதவித் தொகை அவர்களது கடனை முழுமையாக செலுத்தக் கூட போதுமானதாக இல்லை.
“எங்கள் மகள் மீனாட்சியின் மருத்துவச் செலவிற்காக ரூ.30,000/ செலவு செய்கிறோம்”, என்றார். (மற்றொரு மகள் 2004ம் ஆண்டு மரணமடைந்து விட்டார்). “மருத்துவ செலவை ஈடுகட்ட பல ஏக்கர் நிலங்களையும், இருந்து சில கால்நடைகளையும் விற்க நேர்ந்தது. தற்போது விவசாயமும் அதிக செலவு மிகுந்ததாக மாறி விட்டது”, என்றார். எனினும் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையில் அவரது முயற்சிகளை கைவிடாமல் தொடர்கிறார்.





