சஞ்சய் பணியாற்றிய வேளாண் நில உரிமையாளர் மற்றும் கிராமத் தலைவருமான உத்தவ்ராவ் பலேரோ கூறுகையில், "ஒவ்வொரு வருடமும் வேளாண் நிலத்தில் பூச்சிக்கொல்லி தெளித்ததைப்போலவே அப்போதும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து முடித்தோம்" என்றார். அன்றைய தினம் மாலை 5 மணியளவில் கண்கள் வீங்கிய நிலையில் உத்தவ்ராவ் வீட்டுக்குச் திரும்பியுள்ளார் சஞ்சய். உத்தவ்ராவ் அவரை உடனடியாக இருசக்கர வாகனத்தில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள அர்னி டவுனுக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து மேற்கொண்டு 40 கி.மீ. தொலைவிலுள்ள யவத்மல் மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். "பூச்சிக்கொல்லி விஷப் பாதிப்பு குறித்து கேட்டிருக்கிறோம். ஆனால், அது எங்களைப் பாதிக்கும் என ஒரு போதும் நினைத்ததில்லை" என்கிறார் உத்தவ்ராவ். மருத்துவமனை முழுவதும் விஷத் தன்மையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் நிரம்பியிருந்ததை உத்தவ் நினைவுகூர்ந்தார்.
“இது அதிர்ச்சியளிக்கக்கூடிய மோசமான நிலை. நாங்கள் இத்தனை ஆண்டு காலம் பயன்படுத்திய இதே பூச்சிக் கொல்லிகளை அவர்களும் பயன்படுத்துகின்றனர்.” ஆனால் பருத்திகளில் இம்முறை ஒரே வித்தியாசமாக, அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் அதீத வளர்ச்சி இருந்ததாக பாலிரோ தெரிவிக்கிறார்.
நான் ஜனவரி மாதம் சிகாலி கன்ஹோபா சென்றிருந்தபோது, ஜூலை 2017 முதல் இளஞ்சிவப்பு காய்ப்புழு உட்பட பல பூச்சிகளின் கொடியத் தாக்குதலைக் கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் விவசாயத் தொழிலாளர்கள் பூச்சிக்கொல்லி கலவையின் நச்சுப் புகையை சுவாசித்த அதிர்ச்சியில் தத்தளித்து வருகின்றனர்.
வழக்கத்திற்கு மாறாக தடிமனாகவும், உயரமாகவும் வளர்ந்திருந்த பருத்தியின் மீது பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த பின் இந்த கிராமத்திலிருந்த 5 தொழிலாளர்கள் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சஞ்சய் உள்பட 4 பேர் உயிர் பிழைத்திருக்கின்றனர். ஆனால் அந்த் சமூகத்தின் கடைநிலை விவசாயியான 45 வயது தியானேஸ்வர் தால், இரண்டு மாத மருத்துவமனை போராட்டத்திற்குப் பிறகு உயிரிழந்திருக்கிறார். இவர்தான் 2017ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதன்முதலாக சார் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதற்கு அடுத்தநாளே யவத்மால் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஒருமாத காலம் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனையின்படி நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.