ஜாட் அயூப் அமீன், அவரது சமூகத்தில் உள்ள மற்றவர்களைப்போலவே, தான் நிறைவான வாழ்வு வாழ்வதாக கூறுகிறார். “நாங்கள் மது அருந்த மாட்டோம். மற்றவர்களின் செல்வத்தை பார்த்து பொறாமை கொள்ள மாட்டோம். நாங்கள் எங்கள் மனசாட்சி சொல்வதை கேட்டு, எங்கள் பாதையில் பயணிப்போம்“ என்கிறார்.
நான் முதலில் ஜாட் அயூப் மற்றும் மற்ற மல்தாரிகளை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புஜ்ஜீக்கு வெளியே ஒரு மாசு படிந்த சாலையில் சந்தித்தேன். மல்தாரிகள், குஜராத் மாநிலத்தின் கச்சில் உள்ள நாடோடிகள் மேய்ச்சல் விலங்குகளை வளர்ப்பவர்கள். மால் என்றால் விலங்குகள் என்று பொருள். (மால் என்பது நேரடியாக பொருள் என்றும் கொள்ளப்படும்). தாரி என்பது இந்த விலங்குகளை வைத்துக்கொள்பவர்கள் என்று பொருள். அந்த மந்தை ஒட்டகங்கள், செம்மறியாடுகள், ஆடுகள், எருமைகள் மற்றும் பசுக்கள் ஆகிய அனைத்து விலங்குகளையும் உள்ளடக்கியது.
பெரும்பாலான மல்தாரி சமூகத்தினர், கோடை காலத்திற்கு முன்னதாக மார்ச் முதல் ஏப்ரல் மாதங்களில் பசுமையான மேய்ச்சல் நிலங்கள் உள்ள பகுதிகளுக்கு புலம்பெயர்வார்கள். மீண்டும் அவர்களின் கிராமங்களுக்கு மழைக்காலம் துவங்குவதற்கு முன்னர் ஜீலை முதல் ஆகஸ்ட் மாதங்களில் திரும்பி வருவார்கள். அவர்கள் வளர்க்கும் விலங்குகளைப்பொறுத்து, இந்த இடப்பெயர்வு நடைபெறும். அவர்கள் நடப்பதால்தான் வாழ்கிறார்கள்.
கச்சில் உள்ள பெரும்பாலான மல்தாரி சமூகத்தினர் ஜாட், ராபரி மற்றும் சமாஸ் ஆவார்கள். அவர்கள் இந்துக்கள் (ராபரிகள்) அல்லது முஸ்லிம்களாக (ஜாட்கள் மற்றும் சமாஸ்கள்) இருப்பார்கள். அனைத்து சமூகத்தினரும் இணக்கமாக வாழ்வார்கள். ஒரே மாதிரியான நாடோடி வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.
என்னைப்பொறுத்தவரை, தனித்தன்மைமிக்க மல்தாரிகளை புகைப்படம் எடுப்பது சவாலான ஒன்று. உயரமான இடங்களில் மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பவர்களிடம் ஒரு எளிமையான சமூக கட்டமைப்பு மட்டும் இருக்கும். ஆனால் கச்சில் உள்ள ஜாட் சமூகத்தினரில் அந்த கட்டமைப்புகள் மிகவும் சிக்கலானதாவும், அவற்றை கண்டுபிடிக்க கால அவகாசம் எடுத்துக்கொள்வதாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக ஜாட்களே, பக்கீராணி ஜாட், ஹாஜியானி ஜாட், டனீடா ஜாட் மற்றும் கரசியா ஜாட் என நான்கு சமூகத்தினரை உள்ளடக்கியது. அதில் சிலர் பல காலத்திற்கு முன்னரே பசுக்களும், எருமைகளும் வளர்ப்பதோடு இருந்துவிட்டார்கள். பக்கீராணிகள் மட்டும் ஒட்டகங்கள் வைத்துக்கொண்டு நாடோடிகளாகவும், ஆண்டு முழுவதும் இடம்பெயர்பவர்களாகவும் இருக்கிறார்கள். வழக்கமாக தங்கள் தாலுகாவுக்குள்ளே இடம்பெயர்கிறார்கள்.
“சாது சாவ்லா பிர் அவர்களின் பாதையை பின்தொடர்பவர்கள் பக்கீராணி ஜாட்களாக இருக்கிறார்கள்“ என்று அகா கான் சாவ்லானி கூறுகிறார். இவர் மூத்த ஆன்மிக ஆசிரியர் மற்றும் பக்கீராணி ஜாட்களிலே உயர்ந்த மரியாதைக்குரிய இடத்தை பெற்றுள்ளவர். 1600களில் சாவ்லா பிர், தேவிதாஸ் ராபரிக்கு ஒட்டகத்தை பரிசாக வழங்கியதாகவும், அதனால்தான் ராப்ரிகள் கராய் ஒட்டகங்களை வளர்த்து வருவதாகவும் சாவ்லானி கூறுகிறார். இன்றுவரை அவரை அவர்கள் மதிக்கிறார்கள்.
பக்கீராணி ஜாட்கள் பழமைவாதிகள் மற்றும் அவர்களுக்கு கேமரா பிடிக்காது. அவர்களை சந்திக்க வருபவர்களுக்கு ஒட்டகப்பால் தேநீர் கொடுத்து வரவேற்றாலும், அவர்கள் புகைப்படங்கள் எடுப்பதை விரும்புவதில்லை. நான் பேசிய பெரும்பாலான குடும்பத்தினர், அவர்களின் அன்றாட வாழ்க்கையை பதிவு செய்ய புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற எனது யோசனையை மறுத்துவிட்டனர்.
பின்னர் நான் ஜாட் ஆயுப் அமீனை சந்தித்தேன். அவர் கச்சில் உள்ள பாச்சாவ் தாலுகாவைச் சேர்ந்த ஒரு பக்கீராணி ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவராவார். மிகவும் எளிமையான மற்றும் அடக்கமான மனிதராவார். இவர் தனது மனைவி காட்டூன் மற்றும் சகோதரி ஹசீனா மற்றும் ஒட்டக மந்தையுடன் இடம்பெயர்கிறார். 2016ம் ஆண்டின் துவக்கத்தில் அவர் தனது வாழ்க்கை முறையை படமெடுக்க அனுமதித்தார்.
இங்குள்ள ஜாட் சமூதாயத்தினர் பெருபான்மையாக கச்சி மொழியை பேசினாலும், 55 வயதன அமீன் சரளமாக இந்தி பேசுகிறார். அவர் ரேடியோ கேட்டு இந்தி பேசக்கற்றுக்கொண்டதாக கூறுகிறார். மற்ற பக்கீராணி குடும்பத்தினரைப்போலன்றி, அமீன் மற்றும் குடும்பத்தினர் புல், சணல், கயிறு மற்றும் மரத்துண்டுகளால் அமைக்கப்படும் தற்காலிக வீடுகளில் வசிப்பதில்லை. அவர்கள் திறந்தவெளியிலேயே வசிக்கிறார்கள்.
பக்கீராணி ஜாட்கள் கராய் மற்றும் கச்சி என இரண்டு வகை ஒட்டகங்கள் வளர்த்தாலும், அயூபிடம் கராய் இனங்கள் மட்டுமே உள்ளது. மேலும் இவற்றிற்கு மாங்குரோவ் காடுகளில் கிடைக்கும் தாவரங்கள் உடலுக்கு ஏற்றதாக இருக்காததால், அவர் தொடர்ந்து மேய்ச்சல் நிலத்தை அவற்றிற்காக தேடிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனினும், காடுகள் அழிப்பு, தொழிலகங்கள் விரிவாக்கம் போன்றவற்றால் மாங்குரோவ் காடுகள் குறிப்பாக அப்தாசா, லாக்பாத் மற்றும் முத்ரா போன்ற கடற்கரையோரங்களில் குறைந்துவிட்டன. 1982ம் ஆண்டு வனத்துறையினர் இந்த கடற்கரையோரப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டவை என்று அறிவித்தபோதும் வளர்ச்சி அவற்றை பாதுகாக்கவில்லை. அதிகளவில் வளர்ந்திருக்கும் சீமைக்கருவேல மரங்கள் குறித்தும் அயூப் பேசுகிறார். அவை புல் மற்றும் விலங்குகள் உண்ணக்கூடிய மற்ற தாவரங்கள் வளர்வதற்கு வழிவிடுவதில்லை.
இந்த பிரச்னைகள் அனைத்தும் இருந்தாலும், அயூப் தனது சமூகத்தில் உள்ள மற்றவர்களைப்போல், மகிழ்ச்சியாகவே இருக்கிறார். “எனக்கு தேவையான ரொட்டியும், ஒட்டகத்தின் பாலும் எனக்கு கிடைக்கிறது. எங்களுக்குத் தேவையான உணவு உள்ளது. எனவே தூங்கச்செல்கிறோம்“ என்று அவர் கூறுகிறார்.
சகஜீவனில் உள்ள ஒவ்வொருவருக்கும் நன்றி. சகஜீவன் என்பது புஜ்ஜைச் சேர்ந்த ஒரு அறக்கட்டளை மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனம். மல்தாரிகளுக்காக பணிபுரிகிறது. ஹர்திக்கா தயாளினிக்கு சிறப்பு நன்றி. எனது நண்பர், உடன் பயணித்தவர் மற்றும் கச்சில் உள்ள நாடோடிகளின் கலாச்சாரங்கள் குறித்து எனக்கு அறிமுகப்படுத்தியவர்.
தமிழில்: பிரியதர்சினி. R.