மூன்றாவது ஆழ்துளைக் கிணறும் காய்ந்த பிறகு, விளைச்சலுக்கான நீருக்கு மழையைத்தான் டி.அமர்நாத் ரெட்டி எதிர்பார்க்க வேண்டியிருந்தது. ஆந்திராவின் வறண்டப் பகுதியான ராயல்சீமாவில் மழையை நம்ப முடியாது. அங்குதான் 51 வயது அமர்நாத் ரெட்டி தக்காளிகளை விளைவிக்கிறார். சித்தூரிலுள்ள முடிவெடு கிராமத்தில் அவருக்கு இருக்கும் மூன்று ஏக்கர் விளைநிலத்தில் ஆழ்துளைக் கிணறுகள் போட 5 லட்சம் ரூபாய் செலவழித்தார். துளையிட வட்டிக்குக் கடன் வாங்கினார். முதல் கிணறு பயனற்றுபோன பிறகு, அவர் மீண்டும் முயன்றார். மூன்றாவது முறை, அவரின் கடன் அதிகரித்திருந்தது. நீர் மட்டும் கிட்டவில்லை.
ஏப்ரல்-மே 2020-ன் அறுவடைக்கு அமர்நாத் கவலையுடன் காத்திருந்தார். கடன்களை திருப்பி அடைக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறுச் செலவு, மூத்த மகளின் திருமணச் செலவு, பயிர்க்கடன் என அவருக்கு மொத்தம் 10 லட்ச ரூபாய் கடன் இருந்தது. ஆனால் மார்ச் 24ம் தேதி திடீரென பிரதமர் அறிவித்த ஊரடங்கு அவரது திட்டங்களை சின்னாபின்னமாக்கியது. தக்காளிகளை அறுவடை செய்து விற்க முடியாமல், அவை பழுத்து அழுகிப் போவதை அவர் பார்த்திருக்க நேர்ந்தது.
“பெருந்தொற்று சமயத்தில் பிரச்சினைகள் தீரும் வாய்ப்பில்லை என அவர் நினைத்து நம்பிக்கையிழந்திருக்கக் கூடும்,” என்கிறார் அமர்நாத்தின் மனைவியான டி.விமலா, செப்டம்பர் 17, 2020 அன்று அமர்நாத் விஷம் குடித்த தகவலை விளக்க முற்பட்டு. “அதற்கு 10 நாட்கள் முன்பு கூட அவர் தற்கொலைக்கு முயன்றார். பெங்களூருவில் உள்ள பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஒரு லட்ச ரூபாய் செலவு செய்தோம்,” என்கிறார் விமலா. மீண்டும் தற்கொலை முயற்சிக்குப் போக வேண்டாமென அமர்நாத்தை அவர் கெஞ்சியிருக்கார்.
சித்தூரின் விவசாயத் தற்கொலைகளுக்கு ஆழ்துளைக் கிணறு பயனற்றுப் போனதே முக்கியக் காரணமாக காவல்துறை அறிக்கைகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. தக்காளிப் பயிரின் வீழ்ச்சி, விவசாயக் கடன் முதலியவைப் பிறக் காரணங்கள். குடும்பங்களுக்கான இழப்பீடை வழங்கும் மாநில அரசின் உத்தரவில் இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன: “தற்கொலைகளுக்கான காரணங்களாக ஆழ்துளைக் கிணறின் பயனின்மை, பணப்பயிர் வளர்ப்பதற்கு ஆகும் அதிகப்படியான செலவு, கிடைக்காத விலைகள், வாய்மொழிக் குத்தகை, வங்கிக் கடன் வாங்கும் தகுதியின்மை, அதிக வட்டியுடனான தனியார்க் கடன், தீவிர பருவநிலைகள், குழந்தைகளின் கல்விக்கு ஆகும் அதிகச் செலவு, ஆரோக்கியக் குறைபாடு மற்றும் திருமணங்கள் ஆகியவற்றைச் சொல்லலாம்.”
இத்தகையச் சூழல் கடந்த வருடம் திட்டமின்றி போடப்பட்ட ஊரடங்கால் மேலும் மோசமடைந்தது. 2020ம் ஆண்டில் மட்டும் சித்தூர் மாவட்டத்தில் 34 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர். 2014ம் ஆண்டுக்கு பிறகான அதிக எண்ணிக்கை. அதில் 27 பேர் ஏப்ரலுக்கும் டிசம்பருக்கும் இடையில் இறந்திருக்கின்றனர்.
பெருந்தொற்றுக்கு முன்னிருந்த நிலையும் சிறப்பாக இருக்கவில்லை. ஆந்திராவின் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் சராசரியாக 2.45 லட்ச ரூபாய் கடன் இருந்தது. நாட்டிலேயே அதிக அளவு. சமீபத்தில் வெளியான Situation Assessment of Agricultural Households and Land and Livestock Holdings of Households in Rural India, 2019 அறிக்கையின்படி, மாநிலத்தின் 93 சதவிகித விவசாயக் குடும்பங்கள் அந்த வருடத்தில் கடனில் இருந்திருக்கின்றன.
அமர்நாத் மற்றும் விமலா வசிக்கும் தெருவுக்கு அடுத்தத் தெருவில், 27 வயது பி.மஞ்சுளா இறந்துபோன கணவரின் மனநிலையை ஊகிக்க முயன்று கொண்டிருந்தார். நெருக்கடிக்கான எந்த அடையாளமும் அவரிடம் இல்லை. திருமணமான எட்டு வருட வாழ்க்கையில் 10 ஏக்கர் நிலத்தில் பயிர் விளைவிப்பதை பற்றி பலமுறை அவர் பேசியிருக்கிறார். “ஆனால் அவரது பொருளாதார சிக்கல்களின் தீவிரத்தைப் பற்றி பேசியதில்லை. “அவரது கடன் (ரூ.8.35 லட்சம்) எனக்கு ஆச்சரியம்தான்.” அவரின் கணவரான 33 வயது பி.மதுசூதன் ரெட்டி ஒரு மரத்தில் தூக்கிட்டுக் கொண்டு ஜூலை 26, 2020 அன்று இறந்து போனார்.
அரை ஏக்கர் நிலத்தில் மதுசூதன் விளைவித்தத் தக்காளிகள் இன்னும் அறுவடை செய்யப்படாமல் இருக்கிறது. நிலத்தில் அமைத்த நான்கு ஆழ்துளைக் கிணறுகளுக்கான செலவால்தான் பெரும்பாலான கடன் எனச் சொல்கிறார் அவரது தந்தையான பி.ஜெயராமி ரெட்டி. 700-800 அடி ஆழ்துளைக் கிணறுகள் எட்டு வருட காலத்தில் தோண்டப்பட்டிருக்கின்றன. வாங்கியக் கடன்களின் வட்டி பெருகியிருக்கிறது.
கடன்களின் ஒரு பகுதியை அடைப்பதற்காக மதுசூதனின் மரணத்துக்குப் பிறகு அவரது குடும்பம் இரண்டு ஏக்கர் நிலத்தை விற்றது. அரை ஏக்கர் நிலத்தில் அவர்கள் தற்போது நெல் விளைவிக்கின்றனர். அப்பகுதியில் இருக்கும் ஏழு குடும்பங்களுடன் இணைந்து ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்திக் கொள்கின்றனர். “நாங்கள் விதைத்த நிலக்கடலை நல்ல அறுவடை தரவில்லை. காரணம் இந்த வருடம் (2021) பெய்த கன மழை. எங்களின் முதலை நாங்கள் எடுக்க முடியாது. மிச்ச நிலம் தரிசாய்க் கிடக்கிறது,” என்கிறார் ஜெயராமி ரெட்டி.
2019ம் ஆண்டிலிருந்து பெய்யும் அதிக மழையால் மாவட்டத்தின் விவசாயிகள் தக்காளியிலிருந்து நெல்லுக்கு மாறிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார் சித்தூர் தோட்டக்கலையின் உதவி இயக்குநரான பி.ஸ்ரீநிவாசலு. எனினும் 2009-10 தொடங்கி 2018-19 வரையிலான ஏழு வருடங்களில், மாவட்டத்தில் இருக்கும் குராபலகொடா மண்டலம் உள்ளிட்டப் பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என அறிவிக்கப்பட்டன என்கிறார் என்.ராகவ ரெட்டி. மண்டலத்தின் உதவி புள்ளியியல் அதிகாரி.
விவசாயத் தற்கொலைகள் 2019ம் ஆண்டிலிருந்து சித்தூரில் அதிகரித்திருக்கிறது. மாவட்டக் குற்ற ஆவணப்பிரிவின் தரவுகள்படி 2018ம் ஆண்டின் எண்ணிக்கை 7. 2019ம் ஆண்டில் அது 27 ஆக உயர்ந்தது. 2020ம் ஆண்டில் நாட்டிலேயே அதிக விவசாயத் தற்கொலைகள் நேரும் மாநிலங்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை ஆந்திரப் பிரதேஷ் பிடித்தது. தேசியக் குற்ற ஆவணப் பிரிவின்படி 564 பேர் தற்கொலை செய்திருந்தனர். அதில் 140 பேர் குத்தகை விவசாயிகள். 34 பேர் சித்தூரைச் சேர்ந்தவர்கள்.
தலித் குத்தகை விவசாயி எம்.சின்ன ரெட்டப்பா அவர்களில் ஒருவர். சம்பதிகொட்டா கிராமத்தில் ஆறு மாதக் குத்தகையாக 20,000 ரூபாய்க்கு அவர் எடுத்த 1.5 ஏக்கர் நிலத்தில் தக்காளிகள் விளைவித்தார். கோவிட் ஊரடங்கு, விற்பனைக்கான வாய்ப்பை அவருக்குக் கொடுக்கவில்லை என்கிறார் எம்.ஈஸ்வரம்மா. “பயிர் வாடின. மூன்று லட்ச ரூபாய் கடன் எங்களுக்கு ஏற்பட்டது.” வருமானத்தை ஈடுகட்ட அவர்களுக்கு சொத்தோ சேமிப்போ இருக்கவில்லை. டிசம்பர் 30ம் தேதி 45 வயது சின்ன ரெட்டப்பா அவரின் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
ஈஸ்வரம்மாவும் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மகள் பூஜாவும் தேகனிப்பள்ளி கிராமத்தில் இருக்கும் பெற்றோரின் வீட்டுக்கு இடம்பெயர்ந்தனர். “தினக்கூலி 200 ரூபாய்க்கு நிலங்களில் வேலை பார்த்து நான் பிழைக்கிறேன். கடனை திருப்பி அடைக்கும் வழியில்லை,” என்கிறார் ஈஸ்வரம்மா. “பிழைப்பதே சிரமமாக இருக்கும் சூழலிலும் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து அழைத்து தொந்தரவு கொடுக்கிறார்கள்.”
ர்யுது ஸ்வராஜ்யா வேதிகா அமைப்பு அனுப்பிய தகவல் அறியும் மனுவுக்கான பதிலில், 2014 முதல் 2018ம் ஆண்டு வரை 1513 விவசாயிகள் ஆந்திராவில் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. அரசின் இழப்பீடான ரூ.5 லட்சம், 391 குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. ஊடகத்தில் இச்செய்தி வெளியானதும் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. ”640க்கும் அதிகமான பேருக்கு இழப்பீடு வழங்க அரசு ஒப்புக்கொண்டது. 482 விவசாயக் குடும்பங்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை,” என்கிறார் இழப்பீடு மறுக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் விவசாய அமைப்பின் செயலாளரான பி.கொண்டல் ரெட்டி. அக்டோபர் 2019-ல் இறந்த விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் இழப்பீடை மாநில அரசு 2 லட்சமாக உயர்த்தியது. ஆனால் விமலாவுக்கோ மஞ்சுளாவுக்கோ ஈஸ்வரம்மாவுக்கோ ஒன்றும் கிடைக்கவில்லை.
2019-20-ல் மாநிலத்தின் தக்காளி விளைச்சலில் 37 சதவிகிதத்தை சித்தூர் மாவட்டம் அளித்தது. தக்காளி தயாரிப்பில் அந்த வருடம் ஆந்திரப் பிரதேசம் நாட்டிலேயே இரண்டாம் இடத்தில் இருந்தது. நாட்டுவகையும் கலப்பின வகையும் வருடம் முழுக்க விளைவிக்கப்பட்டன. சித்தூரின் பல தக்காளி விவசாயிகளும் ராயல்சீமாவின் பிற மாவட்டத்தினரும் (ஒய்எஸ்ஆர் கடப்பா, அனந்தப்பூர், குர்னூல்) அருகாமை மாநிலமான கர்நாடகா விவசாயிகளும் தக்காளி விளைச்சலை சித்தூரில் இருக்கும் மதனப்பள்ளிச் சந்தையில்தான் விற்கின்றனர். நாட்டின் பெரிய சந்தைகளில் அதுவும் ஒன்று.
மதனப்பள்ளியில் விலைகள் ஏலத்தில் முடிவு செய்யப்படுகின்றன. விலையைப் பலக் காரணிகள் தீர்மானிக்கின்றன. உதாரணமாக, முந்தைய இரவில் பெய்யும் மழை தக்காளி விலைகளை சரித்து விடும். நல்ல விலைகள் இருக்கும்போது நிறைய தக்காளி விளைச்சல் சந்தைக்கு வந்தால், ஏலம் விட்ட விலை சரியும். இது ஆகஸ்ட் 29ம் தேதி இந்தச் செய்தியாளர் மல்ரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீநிவாசலுவை மதனப்பள்ளிச் சந்தையில் சந்தித்தபோது நேர்ந்தது. “30 கிலோ பெட்டியின் விலை நேற்றைய 500 ரூபாயிலிருந்து 390 ரூபாய்க்கு குறைந்துவிட்டது. நல்ல விலை கிடைப்பதால் நிறைய தக்காளிகளை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வந்திருந்தார்கள்,” என்கிறார் அவர்.
“ஒரு ஏக்கர் தக்காளிக்கான முதலீடு 1 லட்ச ரூபாயிலிருந்து 2 லட்ச ரூபாய் வரை இருக்கும்,” என்கிறார் அல்லுகுண்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஆர்.ராமஸ்வாமி ரெட்டி. “அதிக செலவு செய்தால் விளைச்சல் அதிகமாக இருக்கும். மழை மட்டும் பெய்யாமலிருக்க வேண்டும்,” என்கிறார் அவர். 2-3 வருடங்களாக ஏற்பட்ட நஷ்டங்களை நான்காவது வருடத்தில்தான் மீட்க முடியும்.
கடந்த மூன்று வருடங்களில் தக்காளி விளைவிப்பது ஆபத்தாக மாறியிருப்பதாக சொல்கிறார் மதனப்பள்ளியைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.சகாதேவ நாயுடு. அவரது குடும்பம் 10-15 ஏக்கர் குத்தகை நிலத்தில் தக்காளி விளைவிக்கிறது. “என்னுடைய 20 வருட அனுபவத்தில் விலைகள் ஒரு வாரத்துக்குக் கூட ஒரே மாதிரி இருந்தது கிடையாது,” என்கிறார் அவர். கடந்த இருபது வருடங்களில் விளைச்சலுக்கு ஆகும் செலவு 7-10 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் சொல்கிறார். ஆனால் தக்காளியின் விலையோ 1 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரைதான் இருந்திருக்கிறது என்கிறார். எனினும் நல்ல லாபம் கிடைக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால் தக்காளி விளைச்சல் விவசாயிகளை ஈர்க்கிறது. அதிகமாக விளைவித்ததால் நாயுடுவின் குடும்பம் ஊசலாடும் விலையைக் கையாள முடிந்தது. “நிலத்தை குத்தகைக்கு விட்டு தக்காளி விளைவித்தோம். வருடம் முழுக்க தக்காளி விற்பனை செய்தோம். எனவே எங்களால் நஷ்டங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது,” என்கிறார் அவர்.
இந்த வருட செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நேர்ந்த கடுமையான மழைப்பொழிவு மற்றும் 255 சதவிகிதத்துக்கும் அதிகமான நவம்பர் மாத மழை யாவும் ராயல்சீமாவின் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை பாதித்துள்ளது. குறைவான தக்காளி வரத்து மதனப்பள்ளியில் அக்டோபர் மாதத்திலிருந்து விலைகளை உயர்த்தி வருகிறது. கடந்த மாதத்தில் கிலோ ரூ.42லிருந்து ரூ.48 வரை விற்கப்பட்டு வந்த கலப்பின தக்காளி நவம்பர் 16ல் கிலோ 92 ரூபாயாக விற்கப்பட்டது. உயர்ந்து கொண்டே வந்த விலை நவம்பர் 23ம் தேதி கிலோவுக்கு ரூ.130 என்கிற விலையைத் தொட்டது.
சில விவசாயிகள் நிம்மதியாக அந்த நாள் வீட்டுக்குச் சென்றபோதும் அவர்களின் நிலையற்ற வாழ்வுக்கான இன்னொரு நினைவுறுத்தலாக அது அமைந்தது.
நீங்கள் தற்கொலை எண்ணம் கொண்டவராக இருந்தாலோ நெருக்கடியில் இருக்கும் எவரும் உங்களுக்குத் தெரிந்திருந்தாலோ தேசிய உதவி எண்ணான 1800-599-0019-லோ (24/7 கட்டணமற்ற சேவை) அல்லது இந்தப் பிற உதவி எண்களை யோ தொடர்பு கொள்ளுங்கள். மனநல வல்லுனர்கள் மற்றும் சேவைகள் தெரிந்து கொள்ள SPIF-ன் மனநல விவரப் புத்தகத்துக்குச் செல்லுங்கள்
தமிழில் : ராஜசங்கீதன்