காதலிக்க ஏன் பயப்பட வேண்டும்... காதல் குற்றமல்ல... இது போல் மூச்சுத்திணறி ஏன் இறக்க வேண்டும்…
60களில் வெளியான முகல் இ ஆசாம் படத்தில் இடம்பெற்றிருக்கும் இப்பாடலை வித்தி முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார். மத்திய மும்பையில் புதிதாக வாடகைக்கு எடுத்திருக்கும் அறையிலுள்ள அவர், பாடலை நடுவே நிறுத்திவிட்டு கேட்கிறார், “நாங்களும் குற்றம் ஏதும் செய்யவில்லை. நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்?” என.
அவரது கேள்வி வெற்றுப் பேச்சுக்காக கேட்கப்பட்ட கேள்வி அல்ல. பதிலை வேண்டும் கேள்வி அது. கொல்லப்படுவோம் என்கிற அச்சம் அவரைப் பொறுத்தவரை நிஜம். வகுப்புத் தோழரான ஆருஷியை காதலித்து குடும்பத்தை எதிர்த்து வீட்டை விட்டு கிளம்பியதிலிருந்தே அந்த அச்சத்துடன் அவர் வாழ்ந்து வருகிறார். காதலில் இருக்கும் இருவரும் மணம் முடித்துக் கொள்ள விரும்புகின்றனர். ஆனால் சட்டப்பூர்வமாக அவர்கள் இணைவதற்கான பாதை நீண்டதாகவும் கடினமானதாகவும் கடும் சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. அவர்களின் உறவை அவர்களது குடும்பங்களும் அங்கீகரிக்காது; பிறப்பால் நேர்ந்த பெண் என்கிற அடையாளத்துடன் ஆருஷி நடத்தும் போராட்டத்தையும் அவர்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆருஷி திருநம்பியாக அடையாளப்படுத்திக் கொள்கிறார். தற்போது ஆருஷ் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்.
மெட்ரோ நகரத்துக்கு இடம்பெயர்ந்த பின்னர் பெற்றோரிடமிருந்து தப்பி விட்டதாக நினைத்தார்கள். வித்தியின் குடும்பம் தானே மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் இருக்கிறது. அங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் பல்கர் மாவட்டத்தில் ஆருஷின் கிராமம் இருக்கிறது. 22 வயது வித்தி, மகாராஷ்டிராவின் பிற்படுத்தப்பட்ட சமூகமான அக்ரி சமூகத்தைச் சேர்ந்தவர். 23 வயது ஆருஷ் பிற்படுத்தப்பட்ட சமூகமான குன்பி சமூகத்தை சேர்ந்தவர். ஆனால் கிராமங்களில் வழங்கப்படும் படிக்கிரமத்தின்படி அவரது சமூகம் அக்ரி சமூகத்தை விட கீழ் நிலையிலிருப்பதாக கருதப்படுகிறது.
வீட்டை விட்டு இருவரும் மும்பைக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. திரும்பிச் செல்லும் திட்டம் ஏதும் அவர்களிடம் இல்லை. ஆருஷ், அவரது குடும்பம் குறித்து அதிகம் பேசவில்லை. எனினும் “நான் ஒரு மண்வீட்டில்தான் வாழ்ந்தேன். எப்போதும் அது எனக்கு அவமானகரமாக இருந்திருக்கிறது. என் தாயுடன் அதைக் குறித்து சண்டை போட்டிருக்கிறேன்,” என்கிறார் அவர்.












