அப்துல் ரஹ்மானின் உலகம் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், உடல் ரீதியாகவும் சுருங்கி விட்டது. நான்கு கண்டங்களில் உள்ள தொழிலாளர் குழுக்களில் பணியாற்றிய புலம்பெயர் தொழிலாளியான அவர் இப்போது ஐந்து குடும்ப உறுப்பினர்களுடன் 150 சதுர அடி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மும்பையின் டாக்ஸி டிரைவரான இவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் கிராமப்புறத்திலிருந்து இந்த நகரத்திற்கு வந்தார். கடந்த காலத்தில் சவுதி அரேபியா, துபாய், பிரிட்டன், கனடா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் புல்டோசர்கள் மற்றும் கார்களை ஓட்டியுள்ளார். இன்று, அவரை ஒரு நாற்காலியில் வைத்து, மஹிம் சேரிக் காலனியின் குறுகியப் பாதை வழியாக சியோனில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடிய டாக்ஸிக்கு அவரைத் தூக்கிச் செல்ல வேண்டும்.
மருத்துவமனைக்குச் செல்லும் நேரம் வந்ததும், ரஹ்மான் தனது அறையிலிருந்து இறங்குவதற்குத் தயாராகிறார். ஏணி கதவுக்கு வெளியே உள்ளது. அவர் தரையில் அமர்ந்திருக்கிறார். அவரது மகன் கீழே இருந்து கால்களைப் பிடித்துள்ளார். ஒரு மருமகன் அல்லது பக்கத்து வீட்டுக்காரர் மேலே இருந்து அவரைத் தாங்கிப் பிடிக்கிறார். ஒன்பது செங்குத்தான படிக்கட்டுகளில் ஒரு நேரத்தில் ஒரு படி என வலியுடன், மெதுவாக கீழே இறங்கினார் ரஹ்மான்.
கீழே உள்ள குறுகியப் பாதையில், ஒரு பழைய பெயிண்ட் படிந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அவர் இறங்கினார். முடமான அவரது வலதுகால் அதில் இருந்தது. பின்னர் அவரது மகனும் மேலும் இருவரும் நாற்காலியை நீண்ட மற்றும் வளைந்து செல்லும் பாதையின் வழியாக, மஹிம் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள சாலையை நோக்கிக் கொண்டுச் சென்றனர். அங்கே, ரஹ்மான் ஒரு டாக்ஸியில் ஏற்றப்பட்டார்.
ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சியோனில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்லும் டாக்ஸிக் கட்டணம், அவருக்கு மிக அதிகமான தொகை. இருப்பினும், கடந்த ஆண்டில் பல மாதங்களாக, காலில் கட்டு போட வாரந்தோறும் அவர் அங்கு செல்ல வேண்டியிருந்தது. காயம் சிறிது குணமாகிய பிறகு, மருத்துவமனைக்கு செல்வது குறைந்தது. இருப்பினும் அவ்வப்போது ’நாற்காலி ஊர்வலம்’, வடக்கு மும்பையின் மோரி சாலையில் உள்ள காலனின் இருபுறமும் இரண்டு-மூன்று அடுக்குகளில் குறுகிய அறைகளை கொண்டிருக்கும் காலனியின் குறுகியப் பாதையில் நடக்கிறது.
பல வருடங்களாக, அப்துல் ரஹ்மான் அப்துல் சமத் ஷேக் இந்தப் பாதையில் தினமும் காலையில் தனது டாக்ஸிக்கு விரைந்து சென்று 12 மணி நேர வேலை நேரத்தைத் தொடங்குவார். மார்ச் 2020-ல் தொடங்கிய பொதுமுடக்கத்துக்குப் பிறகு, அவர் வண்டி ஓட்டுவதை நிறுத்திவிட்டார். ஆனால் சில சமயங்களில், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களைச் சந்திக்க டீக்கடைகளுக்குச் செல்வார். அவரது நீரிழிவு நோய் தீவிரமடைந்தது. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். பொது முடக்கம் தளர்த்தப்பட்டபோதும் வேலையைத் தொடர முடியவில்லை. ஆனால் அவர் நடமாடிக் கொண்டிருந்தார்.
பின்னர் அவர் தனது கால்விரலில் ஒரு சிறிய கரும்புள்ளியைக் கவனித்தார். சில மருந்துகளில் சரியாகிவிடும் என்று மருத்துவர் சொன்னபிறகு ரஹ்மான் அதைப் பற்றி அதிகம் பொருட்படுத்தவில்லை. "அது உதவவில்லை," என்று அவர் கூறுகிறார். வலது நடு விரலில் இருந்த கரும்புள்ளி சீராக வளர்ந்து கொண்டே இருந்தது. "என் கால் மிகவும் மோசமாக வலிக்க ஆரம்பித்தது," என்று அவர் கூறுகிறார். "நடக்கும் போது அதில் ஒரு ஊசி அல்லது ஆணி பதிக்கப்பட்டிருப்பது போல் உணர்ந்தேன்."
மேலும் பல மருத்துவர்களின் வருகைகள், எக்ஸ்ரே மற்றும் சோதனைகளுக்குப் பிறகு, கருமையாக இருந்த தோல் அகற்றப்பட்டது. அதுவும் உதவவில்லை. ஒரு மாதத்திற்குள், ஆகஸ்ட் 2021 -ல், கால் விரலை வெட்ட வேண்டியிருந்தது. சில வாரங்களுக்குப் பிறகு, அருகில் இருந்த கால்விரலும் அகற்றப்பட்டது. கடுமையாகத் தடைப்பட்ட இரத்த ஓட்டம் சீராகப் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் ரஹ்மானின் வலது கால் பாதி துண்டிக்கப்பட்டது. "அவர்கள் ஐந்து விரல்களையும் வெட்டிவிட்டார்கள்," என்று அவர் கூறுகிறார், சோர்வுடன், அவரது அறையில் தரையில் வைக்கப்பட்டிருந்த மெல்லிய மெத்தையில் அமர்ந்தபடி.
அப்போதிருந்து, அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர, அவரது உலகம் அந்த சிறியக் காற்று இல்லாத முதல் மாடி அறையாக சுருங்கியது. "நான் படுத்தபடி இருக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். “என்னிடம் நேரத்தை கடத்த எந்த வழியும் இல்லை. எங்களிடம் ஒரு டிவி உள்ளது, ஆனால் அதை இயக்க முடியாது... நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன்... என் நண்பர்கள், என் குழந்தைகளுக்காக நான் வாங்கியப் பொருட்கள் எல்லாம் எனக்கு நினைவிருக்கிறது... ஆனால் இதையெல்லாம் நினைத்து நான் என்ன செய்வேன்?"
பாதி கால்களை இழந்து, உடல்நிலை குறையத் தொடங்கும் வரை, நாற்பது ஆண்டுகளுக்கு ரஹ்மானின் உலகம் அந்த அறையையும் பாதையையும் தாண்டி, டாக்ஸியில் போக முடிந்த நகரத்தின் தொலைதூர மூலைகளிலும், அதற்கு அப்பாலும் நீண்டிருந்தது. அவருக்கு 18 வயதாக இருந்தபோது, நகரின் தெருக்களில் மற்ற டாக்ஸி டிரைவர்களிடம் இருந்து ரஹ்மான் ஓட்டக் கற்றுக்கொண்டார். சிறிது நேரத்தில், “30-50 ரூபாய் சம்பாதிப்பதற்காக” தினமும் சில மணிநேரங்களுக்கு ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்தார். அவருக்கு 20 வயதாகும்போது, மும்பையின் பொதுப் பேருந்து சேவையான BEST-ல் துப்புரவுத் தொழிலாளி மற்றும் மெக்கானிக் உதவியாளராக வேலை கிடைத்தது.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1992-ல், அவரது சம்பளம் ரூ. 1,750. ஒரு முகவர் மூலம் சவுதி அரேபியாவில் வேலை கிடைத்தது. "அந்த நாட்களில் இது மிகவும் கடினமாக இல்லை," என்று அவர் கூறுகிறார். "அங்கு [சவுதியில்] நான் மாதம் 2,000-3000 ரூபாய் சம்பாதிப்பேன். ஒரு மாதத்திற்கு வீட்டை நடத்த ரூ.500 போதுமானதாக இருந்தது."
ரஹ்மான் அங்கு புல்டோசர் இயக்குபவராகப் பணிபுரிந்தார். சில சமயங்களில் வாடகைக் கார் ஓட்டினார். "எனது முதலாளி ஒரு நல்ல மனிதர்," என்று அவர் கூறுகிறார். அவர் வீட்டுவசதி அளித்தார். பிற நாடுகளில் வேலை செய்யும் தளங்களுக்கு தனது பணியாளர்களை அனுப்புவார். காலப்போக்கில், ரஹ்மான் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களில் பணிபுரிய வைக்கப்பட்டார்.
அவரது பயணப் புகைப்படங்களில், அவர்களில் பலர் மங்கிப் போயிருந்தனர். அவரது மனைவி தாஜுனிசா பிளாஸ்டிக் பையில் இருந்து புகைப்படங்களை எடுக்கிறார். அரிதாக சிரித்துக்கொண்டிருக்கும் ரஹ்மான், காருக்கு எதிரே சாய்ந்து, புல்டோசரில் அமர்ந்து, கடைக்குள் நின்று, நண்பர்களுடன் அமர்ந்து என விதவிதமாக எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களில் திருப்தியாகத் தெரிகிறார். அந்தப் புகைப்படங்களில் அவர் உயரமாகவும் திடகாத்திரமாகவும் இருந்தார். தற்போதைய 57 வயது ரஹ்மான், மெத்தையில் தனது நாட்களைக் கழிக்கிறார். சுருங்கி, பலவீனமாக, பேசும்போது மூச்சுத் திணறுகிறார்.
எப்பொழுதும் உட்கார்ந்து அல்லது படுத்துக் கொண்டிருக்கும் அவரது மனம் ஒருவேளை அந்த குறுகியப் பாதையில் இப்போது தொலைதூர நிலங்களுக்கு அலைந்து திரியலாம். அங்கு வாழ்க்கை வசதியாக இருந்தது என்கிறார். “[சவுதியில்] என் அறையில் ஏசி இருந்தது. நான் ஓட்டிய காரில் ஏசி இருந்தது. உணவுக்காக அரிசி மற்றும் முழு கோழி கிடைக்கும். எந்தப் பதற்றமும் இல்லை. நான் வேலையிலிருந்து திரும்புவேன். குளிப்பேன். சாப்பிடுவேன், தூங்குவேன். இங்கே, எங்கள் சுற்றுப்புறத்தில் தொடர்ந்து உரத்த சத்தம் மற்றும் சண்டை. யாரும் அமைதியாக உட்காருவதில்லை. இங்குள்ள மின்விசிறியின் காற்று எனக்கு வலியைத் தருகிறது. உயிரற்றதுபோல் உணர்கிறேன்.”
ரஹ்மான் 2013-ல் இந்தியாவுக்குத் திரும்பினார். ஏனென்று அவர் கூறுகையில், சவுதியில் உள்ள முதலாளிகள் மற்ற நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை 15 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்க முடியாது என்கிறார். அவர் திரும்பி வந்தது, இப்போது அவர் வசிக்கும் அதே அறைக்குத்தான். அவரது தாயார் 1985-ம் ஆண்டு அதை, டிரைவரான ரஹ்மானின் தந்தை இறந்தபிறகு கிடைத்த வருங்கால வைப்பு நிதி ரூ. 25,000 கொண்டு வாங்கினார் . (அந்தக் குடும்பம் அதுவரை வடாலாவில் உள்ள பணியாளர் குடியிருப்பில்தான் வசித்து வந்தது; ரஹ்மான் அங்கே 7-ம் வகுப்பு வரை படித்தார்). அவருக்கு நான்கு இளைய சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் இருந்தனர். "நாங்கள் இங்கு சென்றபோது, இந்த அறையில் நாங்கள் 10 பேர் இருந்தோம்," என்று அவர் கூறுகிறார். (டிசம்பர் 2021 வரை, அது ஏழாக இருந்தது. ரஹ்மான் மற்றும் தாஜுனிசா, அவர்களது நான்கு குழந்தைகள் மற்றும் அவரது தாயார். அந்த மாதத்தில்தான் தாயார் காலமானார்.)
அவர்கள் மஹிம் நகருக்குச் சென்றபோது, அவருடைய தாயார் வீட்டுப் பணிப்பெண்ணாக (அவரது சகோதரிகளைப் போலவே, இறுதியில்) வேலை பார்த்தார். தெருவோர வியாபாரிகளான இரண்டு சகோதரர்களும் தனித்தனி விபத்துகளில் இறந்தனர். ரஹ்மான் மற்றும் அவரது மீதமுள்ள இரண்டு சகோதரர்கள் - அவர்களில் ஒருவர் ஏசி மெக்கானிக், மற்றொருவர் மரத்தை பாலிஷ் செய்பவர் - மஹிம் சேரி காலனியில் மூன்றடுக்கு கட்டடத்தில் வசிக்கின்றனர். நடு அறையில் ரஹ்மான், அண்ணன்கள் மேலே. அடர்ந்த நிரம்பிய அறைகளில் கீழே.
அவரது சகோதரிகள் திருமணத்திற்குப் பிறகு இடம்பெயர்ந்தனர். வெளிநாட்டில் பணிபுரியும் போது, ரஹ்மான் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவுக்கு வந்தார். அந்த நேரத்தில், அவர் தனது சம்பளம் மற்றும் சேமிப்பில் இருந்து, அவர்களுக்கு (பின்னர் அவரது மருமக்களுக்கு) திருமணம் செய்ய உதவினார்.
ரஹ்மான் சவுதி அரேபியாவில் இருந்து திரும்பியபோது சிரமப்பட்டு சேமித்த ரூ.8 லட்சம் அவரிடம் இருந்தது. (அப்போது அவரது மாத வருமானம் சுமார் ரூ. 18,000. அதில் பெரும்பகுதியை அவர் வீட்டிற்கு அனுப்புவார்.) இந்த சேமிப்பில் பெரும்பகுதி குடும்பத்தில் நடந்த திருமணங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. டாக்ஸி பெர்மிட்டையும் வாங்கினார். வங்கியில் 3.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி சான்ட்ரோ கார் வாங்கினார். அவர் டாக்ஸியை ஓட்டியும் சில சமயங்களில் வாடகைக்கு கொடுத்தும் ஒரு நாளைக்கு ரூ.500-600 வருமானம் ஈட்டினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காரின் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்க முடியாமலும் உடல்நலக்குறைவு காரணமாகவும் ரஹ்மான் வண்டியை விற்று வாடகை டாக்ஸி ஓட்டத் தொடங்கினார். சுமாராக ஒரு நாளைக்கு 300 ரூபாய் கிடைத்தது.
அது 2015 ல் நடந்தது. "[மார்ச் 2020 -ல்] பொது முடக்கம் வரை, நான் இதைச் செய்து கொண்டிருந்தேன்," என்று அவர் கூறுகிறார். "பின்னர் எல்லாம் நிறுத்தப்பட்டது." நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்காக அவர் வழக்கமான சந்திப்பு இடங்களுக்குச் சென்றாலும், "நான் பெரும்பாலும் வீட்டில்தான் இருக்கிறேன்" என்று அவர் கூறுகிறார். தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தர்காக்கள் வழங்கிய ரேஷன்கள் மற்றும் நண்பர்களும் உறவினர்களும் அவ்வப்போது கொடுத்த சில நூறு ரூபாய்களில்தான் பொதுமுடக்கத்தின்போது குடும்பம் நடந்தது.
ரஹ்மான் சவுதி அரேபியாவில் இருந்தபோது நீரிழிவு நோய் கண்டறியப்பட்டது. அவர் மருந்து உட்கொண்டார். ஆனால் அவரது உடல்நிலை பெரும்பாலும் மோசமாக இருந்தது. 2013 -ல் அவர் இந்தியா திரும்பிய பிறகு, அது இன்னும் மோசமடையத் தொடங்கியது என அவர் கூறுகிறார். இதனால் அவர் மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யவில்லை. ஆனால் பொதுமுடக்கத்தில் அவரது உலகம் உண்மையில் சுருங்கியது. நீண்ட நேரம் படுத்திருந்ததால் அவருக்குப் புண்கள் ஏற்பட்டன. அந்த காயங்களுக்கும் சியோன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
இதற்குப் பிறகுதான் ரஹ்மான் தனது வலது நடு விரலில் கரும்புள்ளி இருப்பதைக் கவனித்தார்.
பல மருத்துவமனைக்குச் சென்றார். ஒரு உள்ளூர் மருத்துவரிடமும் ஆலோசனை பெற்றார். இரத்த ஓட்டத் தடைகளை அகற்ற ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு மருத்துவர் ஆலோசனை கூறினார். இந்த செயல்முறை அக்டோபர் 2021 -ல் சியோன் மருத்துவமனையில் செய்யப்பட்டது, சில வாரங்களுக்குப் பிறகு அவரது கால் பாதி வெட்டப்பட்டது. "ரத்த ஓட்டம் மேம்பட்டது. வலி குறைந்தது. கருமை மறைந்தது" என்று ரஹ்மான் கூறுகிறார், "காலில் சிறிது வலி மற்றும் அரிப்பு இருந்தது." உள்ளூர் அமைப்பு ஒரு உதவியாளரை காயத்திற்கு கட்டுப் போட்டுவிட ஏற்பாடு செய்தது. அதனால் மருத்துவமனைக்குச் செல்வது குறைந்துவிட்டது.
ரஹ்மானின் கால் குணமாகியபோது, அவர் நம்பிக்கையுடன் இருந்தார் (இருப்பினும், அவரது அசைவின்மையால் உருவான வயிற்றுப் பிரச்சினைகளுக்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் சில நாட்கள் KEM மருத்துவமனையில் இருந்தார்). "என் காலில் தோல் வளர்ந்தவுடன், இதற்கு சிறப்பு பூட்ஸ் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்," என்று அவர் கூறினார். “எவ்வளவு செலவாகும் என்று கேட்டேன். பின்னர் நான் மீண்டும் நடக்க ஆரம்பிக்க முடியும்…” தாஜுனிசா ஒரு சக்கர நாற்காலியை அவர்கள் வாங்க விரும்புவதாக கூறினார் (அவர் இப்போது பயன்படுத்த முயற்சிக்கும் நடை சாதனத்துக்குப் பதிலாக).
கால் குணமாகிவிட்டதாகத் தோன்றியபோது, ரஹ்மான் தனது மூத்த சகோதரி மற்றும் குடும்பத்தை சந்திக்க, தமிழ்நாட்டின் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள பூர்வீகக் கிராமமான எலவனாசூர்கோட்டைக்கு எப்போதாவது (கடந்த காலங்களில்) சென்றபோது, அவர் அடைந்த மகிழ்ச்சியைப் பற்றியும் மனநிறைவைப் பற்றியும் பேசினார். மேலும் அவரது உடல்நிலை குறித்து அவர்கள் கேட்கும் போது, அவரது உடன்பிறந்தவர்களின் அக்கறைப் புரிந்து அவர் திருப்தி கொள்கிறார். "அது நன்றாக இருக்கிறது," என்று அவர் கூறினார்.
அவரது நீண்டகால பலவீனம் அவரது குடும்பத்தை ஆழமாக பாதித்துள்ளது. பொதுமுடக்கக் காலத்திற்கும் மேலாக வருமானம் இல்லாததால், அவர்கள் தொடர்ந்து உதவியை நம்பியிருக்கிறார்கள். சமீப காலம் வரை வீட்டுப் பணிப்பெண்ணாக இருந்த 48 வயது தாஜுனிசா, உள்ளூர் பால்வாடியில் குறுகிய கால துப்புரவுப் பணியாளராக மாதம் ரூ.300 வருமானம் ஈட்டுகிறார். "நான் வீட்டு வேலை பார்க்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார். "தேவைப்பட்டால் நாங்கள் எங்கள் மூத்த மகனை தையல் வேலைக்கு அனுப்புவோம்."
மூத்த மகன் அப்துல் அயனுக்கு வயது 15. சிறுவன் பெரியவனாக இருந்திருந்தால், "அவனை துபாய்க்கு வேலைக்கு அனுப்ப முயற்சி செய்திருக்கலாம்" என்கிறார் ரஹ்மான். "எங்கள் நிலை மோசமாக உள்ளது," என்று தாஜுனிசா கூறுகிறார். "நாங்கள் 19,000 ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கி வைத்துள்ளோம். ஆனால் மின்சாரத் துறையைச் சேர்ந்தவர் வந்து எங்கள் நிலையைப் பார்த்துவிட்டு, பணம் செலுத்த எங்களுக்கு அவகாசம் கொடுத்தார். குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் முழுமையாக செலுத்தப்படவில்லை. அதற்கும் கால அவகாசம் கேட்டுள்ளோம். எரிவாயு சிலிண்டர் தீருகிறது. எங்கள் வீடு எப்படி இயங்கும், நம் குழந்தைகளை எப்படிக் கவனிப்போம்?”
அவர்களது இளைய மகனான எட்டு வயது அப்துல் சமத் மற்றும் இளைய மகளான 12 வயது அஃப்ஷா ஆகியோர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இணைய வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை (நான்கு குழந்தைகளும் அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்). பள்ளிகள் சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, "இப்போது வகுப்பில் என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை" என்று அஃப்ஷா கூறுகிறார்.
11 ஆம் வகுப்பில் படிக்கும் மூத்த மகளான 16 வயது டேனியா, உறவினர் மற்றும் நண்பரின் செல்பேசிகளைப் பயன்படுத்தி (அயன் செய்தது போல்) படிக்க முடிந்தது. தான் ஒரு அழகுக்கலை நிபுணராகப் பயிற்சி பெற விரும்புவதாகவும், மெஹந்தியைப் பயன்படுத்துவதில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், அதில் இருந்து கொஞ்சம் சம்பாதிக்கலாம் என்று நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.
ரஹ்மான் எல்லா நேரங்களிலும் தனது குடும்பத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டிருக்கிறார். “எனக்குப் பிறகு அவர்களுக்கு என்ன நடக்கும்? எனது இளைய மகனுக்கு வெறும் எட்டு வயது…” மற்றொரு தொடர் கவலையாக இருப்பது, அவர்களின் சேரிக் காலனி என்றாவது ஒரு மறுவடிவமைப்பு திட்டத்திற்காக இடிக்கப்படுமா என்பதுதான். அவரும் அவரது சகோதரர்களும் மூன்று அறைகளில் வசிக்கின்றனர். முழுக் குடும்பத்துக்கும் ஒரு அறையை மட்டும் ஒதுக்குவார்கள் என்று அவர் பயப்படுகிறார். “என் சகோதரர்கள் விற்றுவிட்டு செல்ல விரும்பினால் என்ன செய்வது? அவர்கள் என் குடும்பத்திற்கு 3-4 லட்சம் கொடுத்து விட்டு, காலி செய்யச் சொல்லலாம். என் குடும்பம் எங்கே போகும்?” என அவர் கேட்கிறார்.
"என் பாதத்திற்குப் பதிலாக உடலின் வேறு எந்தப் பகுதியிலும் இது நடந்திருந்தாலும், என் கை போயிருந்தாலும் கூட, என்னால் குறைந்தபட்சம் நடந்திருக்க முடியும். எங்காவது சென்றிருக்கலாம். இப்போது நான் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கிறேன் என்று தெரியவில்லை. என் குழந்தைகளுக்கான என் நம்பிக்கைகள் போய்வ்ட்டன, ஆனால் நான் இருக்கும் வரை, அவர்கள் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடன் வாங்கி எப்படியாவது சமாளித்து விடுவேன்” என்றார்.
பிப்ரவரி நடுப்பகுதியில், சியோன் மருத்துவமனைக்குத் திரும்பத் திரும்பச் சென்றபோது, ரஹ்மானின் சர்க்கரை அளவு அபாயகரமான அளவுக்கு அதிகமாக இருப்பதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தினார். அவர் அங்கு ஒரு மாதம் கழித்தார். மார்ச் 12 அன்று வீட்டிற்கு அனுப்பப்பட்டார். நீரிழிவு இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை, அவரது வலது காலில் எலும்பு மற்றும் தோல் மட்டுமே இருக்கிறது.
"வலது காலில் மீதமுள்ள தோல் மீண்டும் கருப்பு நிறமாக மாறுகிறது. மேலும் அது வலிக்கிறது," என்று அவர் கூறுகிறார். "மருத்துவர் முழு பாதத்தையும் துண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்."
மார்ச் 14ம் தேதி இரவு, வலி தாங்க முடியாததாகி விட்டது, "அழும் அளவிற்கு அதிகாமானது" என்கிறார் ரஹ்மான். மேலும் மருத்துவமனைக்குச் செல்ல அவரை மீண்டும் ஒரு டாக்ஸிக்கு நள்ளிரவில் நாற்காலியில் ஏற்றிச் செல்ல வேண்டியிருந்தது. பல சோதனைகள் தொடர்ந்து நடந்தன. ஊசி மற்றும் மருந்துகள் வலியை சற்று நேரத்துக்குக் குறைக்கின்றன. அவர் விரைவில் மற்றொரு ஸ்கேன் மற்றும் சோதனைகள் செய்ய மருத்துவமனைக்கு வர வேண்டும். ஒருவேளை மற்றொரு அறுவை சிகிச்சைக்காக செய்யப்படலாம்.
அவர் நாளுக்கு நாள் மிகவும் சோர்வும் சோகமும் அடைகிறார். இவை எல்லாமும் சரியாகிவிடும் என்று குடும்பத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனர். "இன்ஷாஅல்லாஹ்" என்கிறார் ரஹ்மான்பாய்.
அட்டைப் படம்: சந்தீப் மண்டல்
இந்தக் கட்டுரையில் பணிபுரியும்
போது உதவிய லக்ஷ்மி காம்ப்ளேவுக்கு நன்றி.
தமிழில் : ராஜசங்கீதன்