“வாங்க, எங்களை வந்து பாருங்க” என்கிறார் அவர். “நாங்களும் எல்லா விதிகளையும் கடைபிடிக்கிறோம். அனைவரும் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிந்து அமர்ந்திருக்கிறோம். இந்த ரேஷன் பொருட்கள் கிடைத்தது நல்லது தான், ஆனால் என் குடும்பத்திற்கு சில நாட்களுக்கு மட்டுமே இதை கொண்டு உணவளிக்க முடியும். பிறகு நாங்கள் என்ன செய்ய போகிறோம் என தெரியவில்லை.”
ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள சுஜன்கர் நகரத்தில் இருந்து 55 வயதான துர்கா தேவி என்பவர் எங்களுடன் தொலைபேசியில் பேசினார். ஷிபோரி கைவினை கலைஞராக தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர் திஷா ஷேகவாதியில் இலவச ரேஷன் பொருட்களை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த போது நம்மிடம் பேசினார். ஷிபோரி என்பது துணியை முறுக்கி சாயம் ஏற்றி டிசைன் செய்யும் நுட்பம். முற்றிலும் கைவினையைச் சேர்ந்தது. “எங்களுக்கு கரோனா எப்போது வரும் என்று தெரியாது, ஆனால் அதற்கு முன் நாங்கள் பசியால் இறந்துவிடுவோம்“ என்று தனது விதியை நொந்தபடி சிரித்து கொண்டே சொல்கிறார் துர்கா தேவி.
சில ஆண்டுகளுக்கு முன் துர்காதேவியின் கணவர் மது குடித்து உயிரிழந்த பிறகு, அவர் தான் குடும்பத்தில் வேலைக்கு செல்லும் ஒரே நபர். அவரே தனது ஒன்பது குழந்தைகளையும் தனி ஆளாக வளர்த்து வருகிறார். அவருக்கு தினக்கூலியாக ரூ. 200 கிடைக்கும். மாதத்தில் சுமார் 15 நாட்களுக்கு வேலை இருக்கும் என்கிறார் அவர்.
அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு தினக்கூலி கைவினைக் கலைஞரான 35 வயதாகும் பரமேஸ்வரியிடம் போனை கொடுத்தார்.. (தனது முதல் பெயரை சொல்லவே விரும்புகிறார்) பரமேஸ்வரி தனது கணவர் கட்டடத் தொழிலாளி எனவும், ஊரடங்கால் அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாகவும் கூறினார். எங்களுக்கு வேலையும் இல்லை, கையில் காசும் இல்லை என்கிறார். ரேஷனில் இலவசமாக கொடுக்கப்படும் ஐந்து கிலோ கோதுமை மாவு, ஒரு கிலோ பருப்பு, தலா 200 கிராம் மஞ்சள், மிளகாய், தனியா பொட்டலங்களைக் கொண்டு நான்கு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தை சில நாட்களுக்கு ஓட்டி விட முடியும் என துர்கா தேவியைப் போன்றே பரமேஸ்வரியும் நம்புகிறார்.
ரேஷனில் வழங்கப்படும் இலவச பொருட்களை வாங்க வரிசையில் நிற்கும் 65 வயதான சாந்தி தேவி ஷிபோரி வேலை எதுவும் செய்வதில்லை. “நான் சாப்பிட்டு 24 மணி நேரம் ஆகிவிட்டது. அதுவும் சோறுதான் சாப்பிட்டேன். வெறும் சோறு. எங்க பகுதியில் நேற்று உணவு கொடுக்கும் வேன் வந்தது. அந்த இடத்திற்கு நடந்து போவதற்குள் எல்லாம் தீர்ந்துவிட்டது. நான் இப்போது மிகவும் பசியில் இருக்கிறேன்” என்றார்.










