ஜாம்லோவுக்கு 12 வயது. பிப்ரவரி மாதத்தில் தெலங்கானாவின் மிளகாய் விவசாய நிலங்களில் வேலை பார்க்கச் சென்றார். ஊரடங்கு காலத்தில் வீடு திரும்பவென புலம்பெயர் தொழிலாளர்களுடன் நடக்கத் தொடங்கியவர் மூன்று நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 18ம் தேதி உயிரிழந்தார்.
“சொல்லாமல் கொள்ளாமல் அவளுடைய நண்பர்களுடனும் பிற கிராமவாசிகளுடனும் கிளம்பிவிட்டாள். அடுத்த நாள்தான் எங்களுக்கு தெரிய வந்தது,” என்கிறார் அவரின் தாய் சுக்மதி மட்கம். ஆதிவாசி சமூகமான முரியாவை சேர்ந்த குடும்பம்.
சட்டீஸ்கரின் பஸ்தர் பகுதியின் பிஜாப்பூர் மாவட்டத்திலிருக்கும் ஆதெத் கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார் 12 வயதே ஆன அச்சிறுமி. குழந்தைகளும் இருந்த 11 பேர் கொண்ட தொழிலாளர் குழுவுடன் சேர்ந்து தெலங்கானாவில் இருக்கும் முலுகு மாவட்டத்தின் கன்னைகுதெம் கிராமத்து நிலங்களில் வேலை செய்ய சென்றிருந்தார். (முகப்புப் படத்தில் இருப்பதும் மே 7ம் தேதி நடந்த இதே போன்ற குழுதான்.) அங்கே அவர்களுக்கு மிளகாய் பறிக்கும் வேலை. நாளொன்றுக்கு 200 ரூபாய் அல்லது மிளகாய் மூட்டைகள் சம்பளமாக கிடைக்கும். (பார்க்கவும் Children of the chilli fields)
“நண்பர்களுடனும் பிற கிராமவாசிகளுடனும் சேர்ந்து ஜாம்லோ வேலை பார்க்கச் சென்றுவிட்டாள். வேலை நிறுத்தப்பட்டதும், அவர்கள் திரும்பத் தொடங்கினார்கள். பெருரு கிராமத்தை (முலுகு மாவட்டத்தில் இருக்கிறது) விட்டு கிளம்பியதும் எனக்கு தொலைபேசியில் அழைத்தாள். அதற்குப் பிறகு எனக்கு வந்த அழைப்பு பிற கிராமவாசிகளிடமிருந்து. என் குழந்தையின் மரணத்தை சொல்ல அழைத்தார்கள்,” என்கிறாம் ஜம்லோவின் தந்தையான அந்தோராம். அவரும் சுக்மதியும் ஆதெத் கிராமத்தின் பிற ஆதிவாசி மக்களை போலவே காட்டில் விளைந்ததை கொண்டும், சிறு நிலங்களில் கொள்ளு, நெல் மற்றும் பிற தானியங்களை விதைத்தும் விவசாயக்கூலிகளாகவும் கிராமப்புற வேலைத்திட்டத்தின் (MNREGA) கீழ் வேலை பார்த்தும் வாழ்க்கை ஓட்டுகிறார்கள்.
“இரண்டு மாதங்களுக்கு முன் ஜாம்லோ தெலங்கானாவுக்கு தொழிலாளராக சென்றாள். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் வேலை நிறுத்தப்பட்டது. நம்பிக்கை இழந்த தொழிலாளர்கள் கிராமத்துக்கு திரும்ப விரும்பினார்கள். கைவசம் வைத்திருந்த சேமிப்பு தீர்ந்து போய் விட்டது. ஒப்பந்தக்காரரும் ஊர் திரும்பச் சொல்லிவிட்டார்,” என்கிறார் பத்திரிகையாளராக இருக்கும் உசெந்தி ரொகடே. பிஜாப்பூரை சேர்ந்த கோண்ட் ஆதிவாசி சமூகத்தவர், ஜக்டல்பூரில் இருக்கும் செய்தித்தாளுக்கு பணிபுரிகிறார்.






