“கோடை காலத்தை நாங்கள் இழந்து கொண்டிருக்கிறோம்! இந்த நேரத்தில்தான் மண் பானைகள் அதிகம் விற்கும். இப்போது எங்களால் விற்க முடியவில்லை,” என்கிறார் ரேகா கும்ப்கர். அடுப்பில் காய வைப்பதற்கு முன் பானைக்கு வண்ணம் பூசிக் கொண்டே பேசினார். ஊரடங்கு நேரத்தில் வீட்டுக்குள்ளிருந்து பானைகள் உருவாக்குகிறார். சில சமயங்களில் வெளியே அமர்ந்தும் வேலை பார்க்கிறார்.
சட்டீஸ்கரின் தம்தரி டவுனின் குயவர் காலனியான கும்ஹர்பராவெங்கும் வீடுகளுக்கு வெளியே செம்மண் பானைகள் பரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை சந்தையில் விற்கப்பட்டிருக்க வேண்டிய பானைகள் அவை. “காய்கறி வியாபாரிகள் 7 மணியிலிருந்து 12 மணி வரை சந்தையில் விற்பனைக்கு அனுமதிக்கப்படுவதுபோல், நாங்களும் பானைகள் விற்க அனுமதிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் சிரமத்துக்குள்ளாவோம்,” என்கிறார் ரேகா.
தலையில் காலி கூடையுடன் கும்ஹர்பராவுக்கு புபனேஸ்வரி கும்ப்கர் திரும்பினார். “மண் பானைகள் விற்பதற்காக காலையிலிருந்து டவுனின் பல காலனிகளுக்கு சென்று வருகிறேன். எட்டு பானைகள் விற்றுவிட்டேன். இன்னொரு எட்டுப் பானைகள் எடுத்துக் கொண்டு மீண்டும் தெருக்களுக்கு போக வேண்டும். ஆனால் நான் சீக்கிரமே திரும்பி விட்டேன். ஏனெனில் நண்பகலிலிருந்து மீண்டும் ஊரடங்கு தொடங்குகிறது. சந்தையில் விற்க அனுமதிக்கப்படாததால், நாங்கள் வியாபாரம் செய்ய முடியவில்லை. ஐநூறு ரூபாயும் அரசு கொடுக்கும் அரிசியும் மட்டும் வைத்துக் கொண்டு ஒரு குடும்பத்தால் எப்படி வாழ முடியும்?”
கும்ஹர்பராவில் உள்ள எல்லா குடும்பங்களும் கும்ஹர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். தாம் செய்யும் பானைகளை 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை விற்றிருக்கின்றனர். மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை விற்பனை உச்சத்தில் இருக்கும் காலத்தில் 200 முதல் 700 வரை பானைகளை ஒவ்வொரு குடும்பமும் உருவாக்கும். நீரை குளிர்ச்சியாக வைப்பதற்காக மக்கள் பானைகளை வாங்குவார்கள். குடும்பத்தினர் எவ்வளவு உதவுகிறார்கள் என்பதை பொறுத்து ஒவ்வொரு குடும்பம் உருவாக்கும் பானைகளின் எண்ணிக்கையும் மாறுகிறது. பிற மாதங்களில் விழாக்களுக்கு என சிறு சிலைகளையும் தீபாவளிக்கான விளக்குகளையும் திருமண நிகழ்வுகளுக்கான சிறிய பானைகளையும் செய்கிறார்கள்.
மழைக்காலங்களில் அவர்களின் வேலை நின்றுவிடும். ஜூன் மத்தியில் தொடங்கி செப்டம்பர் மாத இறுதி வரை மண் காயாது. வீட்டுக்கு வெளியே வைத்து வேலைகளையும் செய்ய முடியாது. இந்த காலத்தில், சில குயவர்கள் (எந்த குடும்பத்துக்கும் சொந்தமாக நிலம் கிடையாது) விவசாயக் கூலி வேலை பார்க்கச் செல்கிறார்கள். நாட்கூலியாக 150லிருந்து 200 ரூபாய் வரை கிடைக்கும்.




