”வீட்டு வாசலுக்கு வந்துவிடக்கூடாது என ஊர்க்காரர்கள் எங்களைப் பார்த்து கத்துகிறார்கள். ஏதோ பீமாரி (நோய்) வந்துவிட்டதெனச் சொல்கிறார்கள். அந்த பீமாரி என்பது என்ன என்று யாரும் எங்களிடம் சொல்லமாட்டேன் என்கிறார்கள். எனக்கு எந்த நோயும் இல்லை. ஏன் அவர்கள் என்னைத் தடுக்கிறார்கள்?”
பேன்ஸ் பர்தி பழங்குடியினரான கீத்தாபாய் காலேவுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் கடைசியாக உணவு கிடைத்தது. ஏனென்றால் 78 வயதான அவர், சாதாரணமான காலத்திலேயே பிச்சை எடுத்துதான் சாப்பிட்டு வந்தார். முடக்கம் காரணமாக அவரின் உணவு ஆதாரம் இல்லையென்று ஆகிவிட்டது. கோவிட்-19 என்றால் என்னவென்று அவருக்கு சிறிதுகூடத் தெரியவில்லை. ஆனால், அவரும் மற்ற பர்திகளும் அன்றாடம் காய்ந்த வயிற்றுடன் சரிவை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர்.
மார்ச் 25 அன்று சாப்பிட்ட பழைய சோள ரொட்டிதான், கடைசியாக அவருக்குக் கிடைத்த உணவு." எனக்குத் தெரியாத சில சிறுவர்கள், இட்வாரில் (மார்ச் 22, ஞாயிறு)வந்து எனக்கு நான்கு சோள ரொட்டிகளைக் கொடுத்தார்கள். அவற்றை நான்கு நாள்கள் வைத்திருந்து சாப்பிட்டேன். அன்றிலிருந்து அவர் பசியை அடக்கிக்கொண்டு இருக்கிறார். "அதன் பிறகு யாரும் இங்கு வரவில்லை. ஊரார் என்னை உள்ளேவிட மறுக்கிறார்கள்." என்கிறார் கீத்தாபாய்.
மகாராஷ்டிரத்தின் புனே மாவட்டம், சிரூரில் உள்ள முதன்மைச் சாலைக்கு அருகில் ஒரு தகரக் கொட்டகையில் தனியாக வசித்துவருகிறார், கீத்தாபாய். இங்கிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள சவான்வாடி கிராமத்துக்குப் போய் இரந்து சாப்பிடுகிறார். ” மக்கள் கொடுக்கும் மீத்த உணவு எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் வாங்கி சாப்பிடுவோம். அரசாங்கமே இலவசமாக உணவு தானியம் வழங்குவதாக சிலர் சொல்கிறார்கள். பங்கீட்டு ரேசன் அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் என்கிறார்கள்; என்னிடம் அட்டை இல்லை.” என ஆற்றாமையையும் வெளிப்படுத்துகிறார், கீத்தாபாய்.
பர்தி பழங்குடியினரிலேயே பேன்ஸ் பர்தி பட்டியல் பழங்குடியினரின் வாழ்நிலைதான் வறிய, பின்தங்கிய நிலையில் மிக மோசமாக இருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் காட்டுமிராண்டித்தனமான காலனியகால சட்டத்தையும் அதன் சுமையையும் பர்திகள் இன்னும் தாங்கிக்கொண்டு இருக்கின்றனர். காலனிய ஆதிக்கத்துக்கு சவாலாகவும் போர்க்குணத்தோடும் இருந்த பல்வேறு பழங்குடி இனத்தவரையும் அலைகுடி ஆயர் குழுக்களையும் தண்டிக்கும் நோக்கில் பிரித்தானிய அரசானது 1871-ல் குற்றப் பழங்குடியினர் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, பிறப்பின் அடிப்படையில் 200 சமூகங்கள் குற்றசமூகங்களாக ஆக்கப்பட்டன. இதன் விளைவாக அந்த சமூகங்கள் பெரும் அழிவைச் சந்தித்தன; மற்ற சமூகங்களிடமிருந்து அவர்களைத் தனிமைப்படுத்தவும் செய்தது.
சுதந்திர இந்தியாவில் 1952-ல் இந்த சட்டம் இரத்துசெய்யப்பட்டது. குற்றப்பழங்குடிப் பட்டியலில் இருந்த சமூகங்கள், சீர்மரபினர் என அறிவிக்கப்பட்டனர். ஆனாலும் மற்ற சமூகங்கள் இவர்கள் மீது தொடரும் பழைய களங்கம், தவறான எண்ணம், துயர் ஆகியவை உறுதிபடத் தொடர்கின்றன. இந்த சமூகங்களில் இன்னும் பலவற்றைச் சேர்ந்தவர்களுக்கு ஊரின் முதன்மைப் பகுதிக்குள் நுழைவதும் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுப்பதும் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. அந்த ஊர்களிலிருந்து இரண்டுமூன்று கிமீ தொலைவிலேயே இவர்கள் வசிக்கின்றனர். இவர்களால் வேலை பெறமுடியாது; கல்வி நிலைமையும் படுமோசமாக இருக்கிறது. நிறைய பேர் சிறு வழக்குகளில் சிறைப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் கணிசமானவர்களுக்கு உயிர்வாழ்வதற்கு இரந்து உண்பதைத் தவிர வேறு வழி இல்லை.
வேறு வழி இல்லாத அவர்களில் கீத்தாபாயும் ஒருவர். 75 வயதான சாந்தாபாயும் கராடே கிராமத்துக்கு வெளியில் ஒற்றை அறை வீட்டில் வாழ்கிறார். இந்த கிராமமும் சிரூர் வட்டத்தைச் சேர்ந்தது. பேன்ஸ் பர்தியான சாந்தாபாயின் வீடு, கீத்தாபாயின் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தள்ளி இருக்கிறது. கராடே கிராமத்திற்குள் இரந்து உண்பது மட்டுமே சாந்தாபாய்க்கும் அவரின் இணையர், அவர்களின் 44 வயது மகன் சந்தீப் மூவருக்கும் வாழ்வாதாரமாக இருந்துவருகிறது. 2010ஆம் ஆண்டில் நேர்ந்த ஒரு விபத்துக்குப் பிறகு சந்தீப் இயலாதவர் ஆகிவிட்டார்.
கீத்தாபாயின் மகன்களான சந்தோஷ்,45 மற்றும் மனோஜ்,50 இருவருமே துப்புரவுப் பணியாளர்களாக இருக்கின்றனர். அங்கிருந்து 77 கிமீ தொலைவில் உள்ள பிம்ப்ரிசின்சிவாட்டில் அவர்கள் வசிக்கின்றனர். அவர்களிடம் அவர் ஏதும் கேட்கவில்லை. ”என் மகன்கள் இன்னும் என்னைப் பார்க்க வரவில்லை. குறைந்தது மாதத்துக்கு ஒரு முறையாவது அவர்கள் இங்கு வருவார்கள். “ என்கிறார் கீத்தாபாய். மாநில அளவிலான ஊரடங்கு மார்ச் 23 அன்றும் பிறகு நாடளவிலான ஊரடங்கு மார்ச் 24 அன்று பிரதமர் மோடி அறிவித்தபடியும் நடைமுறைக்கு வந்தன. அவற்றால் உணவுக்கான கீத்தாபாயின் அனைத்து முயற்சிகளையும் தவிடுபொடி ஆகிப்போனது. பசி அவரை மார்ச் 28 அன்று மீண்டும் சாவன்வாடிக்குச் செல்ல விரட்டியது. ஆனால் அவர் அவ்வாறு போகவில்லை.
இதைப் போன்ற நிராகரிப்பை கராடேயில் சாந்தபாயும் எதிர்கொண்டார். மற்ற எத்தனையோ பர்தி குடும்பங்களும் இப்படியொரு நிலைமையில் சிக்கிக்கொண்டன. இரந்து வாழும் அவர்களின் வாழ்க்கைக்கு கோவிட் -19 ஆனது, ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என பேன்ஸ் பர்திஸ் மக்கள் உணர்ந்துள்ளனர்.
"ஊர்க்காரர்கள் எங்களை தங்கள் வீட்டுவாசலுக்கு வரக்கூடாதென கத்துகிறார்கள். குறைந்தது என் மகனுக்காவது சாப்பாடு தரவேண்டும். இரந்து உண்ணாவிட்டால் வேறு எப்படி நாங்கள் சாப்பிடமுடியும்? என் மகன் படுத்த படுக்கையாக இருக்கிறான்.” என தொலைபேசியில் என்னிடம் எதிர்க்கேள்வியாகக் கேட்கிறார், சாந்தாபாய் காலே. அவர்களின் மகன் சந்தீப்புக்கு இடுப்புக்குக் கீழே முடங்கிப் போய்விட்டது.
சாந்தாபாயும் அவரின் இணையர் துல்யாவும் (79), அவர்கள் மகனின் அன்றாட வேலைகளை எல்லாம் செய்து, அவரை கவனித்துக் கொள்கின்றனர். “ அவன் ஆந்த் அரசு மருத்துவமனையில் மூன்று ஆண்டுகள் இருந்தான். அவனுடைய மூளை நரம்புகள் சேதமாகிவிட்டதால் அவனால் தானாக இயங்கமுடியாதென அங்குள்ள மருத்துவர் கூறினார்.” என்று 2018 மார்ச்சில் தன் ஒற்றை அறை வீட்டில் சாந்தாபாய் என்னிடம் கூறினார். சந்தீப் நான்காம் வகுப்புவரை படித்தவர். விபத்துக்கு முன்னர், புனே நகரில் துப்புரவு, சாலை தோண்டுதல், சுமைவண்டிகளில் சரக்குகளை ஏற்றி இறக்குவது, உணவகங்களில் தட்டுகளைக் கழுவுவது என எந்த வேலையையும் வேறுபாடு பார்க்காமல் செய்துவந்துள்ளார்.
அவருக்கு கிடைக்கும் 6 -7 ஆயிரம் ரூபாய் மாத வருமானத்தைக் கொண்டு அந்தக் குடும்பம் சமாளித்துவந்தது. ” குழந்தைப் பருவத்திலிருந்து நாங்கள் பிச்சையெடுத்து வந்தோம். எங்கள் மகன் சம்பாதிக்கத் தொடங்கியதும் அது இல்லாமல் போனது. அவனுடைய விபத்துக்குப் பிறகு மீண்டும் நாங்கள் இரந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.” என்று 2018-ல் சாந்தாபாய் என்னிடம் கூறியிருந்தார். சாந்தாபாயின் வீட்டுக்கு வெளியில் அவர் பழைய ரொட்டிகளை உலரவைக்கிறார். கேழ்வரகு, கம்பு, சோளத்தால் ஆன அந்த ரொட்டிகள், கராடே கிராமத்தினர் தந்தவை. “ நல்ல வெயிலில் அவற்றை காயவைத்து, பிறகு கொதிநீரில் வேகவைத்து சாப்பிடுவோம். இதைத்தான் நாங்கள் சாப்பிடுகிறோம்; காலை, மதியம், இரவு மூன்று வேளைகளுக்கும் இதுதான் எங்கள் உணவு.” என பொருள்படப் பேசுகிறார் அவர்.
பழைய ரொட்டிகளுடன் சில நேரங்களில் அவருக்கு கொஞ்சம் அரிசியும் கிடைக்கும். இப்போதைக்கு அவரிடம் இரண்டு கிகி அரிசிதான் இருக்கிறது. அவரும் துல்யாவும் சந்தீப்பும் ஒரு நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிடுகிறார்கள். அரிசியை வேகவைத்து, கொஞ்சம் மிளகாயும் உப்பு சேர்த்து தாளித்து அப்படியே சாப்பிடுவோம். " மார்ச் 22 -ம் தேதியிலிருந்து எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை. பழைய ரொட்டிகூட இல்லை. இந்த அரிசி தீர்ந்துபோய்விட்டால் நாங்கள் பட்டினியாகத்தான் கிடக்கத்தான் வேண்டும்.” - வருத்தப்படுகிறார், சாந்தாபாய்.
இங்கே ஒவ்வொரு ஊரைச் சுற்றிலும் மரக் கிளைகளை வெட்டிவந்து தடுப்புபோல அமைத்து, ‘வைரசை’த் துரத்த மக்கள் முயற்சி செய்கின்ற நிலையில், சாந்தபாயும் துல்யாவும் ஊர்களுக்கு வெளியில்தான் போய்வர முடியும். ” ஏதாவது ரொட்டியையோ வேறு உணவையோ யாராவது தூக்கிப்போட்டிருக்கிறார்களா என பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.
இரந்து உண்ணவோ சாலை தோண்டும் வேலைக்காகவோ 66 கிமீ தொலைவில் உள்ள புனே நகரத்திற்குச் செல்லலாலாம் என துல்யா முயன்றார். ஆனால், “ நான் புனேவை நோக்கி நடந்து சென்றுகொண்டு இருந்தபோது சனிக்கிழமையன்று சிக்ராபூர் கிராமத்துக்கு அருகில் காவல்துறையினர் என்னைத் தடுத்து நிறுத்தினார்கள். ஏதோ வைரஸ் என்று கூறி, என் வாயை துணியால் மறைக்கும்படி சொன்னார்கள். நான் பயந்து, வீட்டுக்குத் திரும்பிவிட்டேன்.” என நடந்ததை விவரித்தார், துல்யா.
சாந்தாபாய் மட்டுமின்றி, அவரின் குடியிருப்புப் பகுதியில் உள்ள மேலும் 10 பர்தி குடும்பங்களும் பட்டினியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கிராமங்களுக்குள் நுழைய மறுக்கப்படுவதுதான் காரணம். சமூகரீதியாக களங்கப்படுத்தப்பட்ட இந்தக் குழுக்களுக்கு இரந்து உண்பது என்பது நெடுங்காலமாக ஒரு முக்கிய உயிராதாரமாக இருந்துவருகிறது. இது, எப்போதும் மற்ற சவால்களைக் கொண்டதாகும்.
மகாராஷ்டிரத்தில், பிச்சை எடுப்பதானது, ‘மும்பை பிச்சையெடுத்தல் தடுப்புச் சட்டம், 1959’ மூலம் குற்றமாக ஆக்கப்பட்டது. பிச்சை எடுப்பவர்களை பிடியாணை எதுவும் இல்லாமல் அது கைதுசெய்ய உரிய செயலாக்க அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. கைது செய்யப்பட்டவர்களை சான்றளிக்கப்பட்ட நிறுவனங்களில் 1 - 3 ஆண்டுகள் வைத்திருக்கவும் இச்சட்டம் வகைசெய்கிறது. பிச்சையெடுத்தல், கைவிடப்படுதல் தொடர்பாக ஒன்றிய அரசின் சட்டம் ஏதுமில்லாததால், இந்த சட்டத்தை பல மாநிலங்களும் கைக்கொண்டன அல்லது இதைப் போன்ற சட்டத்தை இயற்றிக்கொண்டன.
2018 ஆகஸ்ட்டில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்தச் சட்டத்தின் விதிகள் அரசியலமைப்பு ஆய்வில் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் செல்லாததாக ஆகிவிடும் என்றும் கூறியது. (அப்படி ஏதும் மகாராஷ்டிரத்தில் நிகழவில்லை).
"பிச்சை எடுப்பது என்பது ஒரு நோயின் அறிகுறி. சம்பந்தப்பட்ட நபர் சமூகரீதியாக உருவாக்கப்பட்ட வலைப்பின்னலின் மூலம் சரிவைச் சந்தித்துவிட்டார் என்பதே உண்மை. குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சமூக பாதுகாப்பை வழங்குவதும் அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிசெய்வதற்கும் அரசாங்கத்தின் கடப்பாடு ஆகும். பிச்சைக்காரர்கள் நாட்டில் இருப்பது என்பது அரசானது தன் குடிமக்கள் அனைவருக்கும் இந்த அடிப்படை வசதிகளை அளிக்காதநிலையில் இருக்கிறது என்பதற்கான சான்று." என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
(கோவிட் -19 நெருக்கடியை ஈடுகட்டுவதற்காக மார்ச் 26 அன்று) நிதி அமைச்சர் அறிவித்த ‘நிவாரணத் தொகுப்பில்’ இடம்பெற்ற பல அறிவிப்புகள், இந்த மக்களுக்கு பலன் அளிக்காதவை. இவர்களிடம் பங்கீட்டு ரேசன் அட்டைகள் இல்லை; வங்கிக் கணக்குகள் இல்லை; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் - எம்ஜிஎன்ஆர்இஜிஏ வேலை அட்டைகளும் இல்லை. இப்படி இருக்கையில், அந்த ஐந்து கிகி ‘இலவச உணவு தானியத்தை’ அவர்கள் எப்படி வாங்கமுடியும் அல்லது பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நேரடி பணப் பட்டுவாடாவை எப்படி பெறமுடியும்? இவற்றில் ஏதேனும் ஒன்று கீத்தாபாய்க்கும் சாந்தாபாய்க்கும் எப்படி கிடைக்கும்? இதுதவிர, இந்த சமூகங்களுக்கு கோவிட் -19 கொள்ளை நோயைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து கொஞ்சம்கூடத் தெரியாது.
“ மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். சாப்பிடுவதற்கு அவர்களிடம் உணவு இல்லை. எப்படி நீங்கள் அறிவித்த திட்டங்கள் எங்களை வந்தடையும்?” எனக் கேட்கிறார், புனேவைச் சேர்ந்த சமூகப் பணியாளரும் பேன்ஸ் பர்தியுமான சுனிதா போசலே.
ஆமாம், மெய்தான் என்கிற துல்யாவும், ”முடக்கம் ஒரு பக்கம் இருக்க, மற்ற சாதாரண நேரங்களில்கூட வேலையை அமைத்துக்கொள்வது எங்களுக்கு கடினம். நாங்கள் பர்திகள் என்பதால் மக்கள் எங்களைச் சந்தேகப்படுகிறார்கள். பிச்சையெடுப்பதும் நிறுத்தப்பட்டு விட்டால் நாங்கள் சாகத்தான் வேண்டும்.” என்கிறார்.
தமிழில்: தமிழ்கனல்