“என் இரண்டு பெண் குழந்தைகளுக்கு வேறு வித வாழ்க்கையளிக்க விரும்புகிறேன்,” என்கிறார் விசாலாட்சி, மீனின் தோலில் உப்பு போட குனிந்தபடி. 43 வயது நிறைந்த அவர் கடந்த 20 வருடங்களாக தமிழ்நாட்டின் கடலோரத்தில் இருக்கும் கடலூர் ஓல்ட டவுன் துறைமுகத்தில் மீன் உலர்த்தும் வேலை செய்கிறார்.
“நிலமற்ற தலித் குடும்பத்தில் நான் வளர்ந்தேன். நெல் விவசாயத் தொழிலாளர்களான என் பெற்றோருக்கு உதவி செய்தேன். அவர்கள் படித்ததில்லை,” என்கிறார் அவர். 15 வயதில் விசாலாட்சிக்கு சக்திவேலுடன் மணம் முடிக்கப்பட்டது. அவர்களின் முதல் மகளான ஷாலினி இரண்டு வருடங்கள் கழித்து, கடலூர் மாவட்டத்தின் குக்கிராமமான பிமா ராவ் நகரில் பிறந்தார்.
பிமா ராவ் நகரில் விவசாயக் கூலி வேலை கிடைக்காமல், விசாலாட்சி கடலூர் ஓல்ட் டவுன் துறைமுகத்துக்கு பிழைப்பு தேடி வந்தார். 17 வயதாக இருக்கும்போது அவர் கமலவேணியை சந்தித்தார். அவர்தான் மீன் உலர்த்தும் வணிகத்தை விசாலாட்சிக்கு அறிமுகப்படுத்தியவர். அந்த வணிகம் அவருடன் அப்படியே தங்கி விட்டது.
மீன் பதனப்படுத்தப்படும் செயல்முறையின் பழைய வடிவம்தான் திறந்த வெளியில் மீனை உலர்த்துதல். உப்பு தடவுதல், புகை போடுதல், ஊறுகாய் போடுதல் எனப் பல வகைகள் மீன் உலர்த்துதலில் இருக்கின்றன. கொச்சியின் மத்திய மீன்வள ஆய்வு நிறுவனத்தின் 2016ம் ஆண்டு கடல் மீன்வள கணக்கெடுப்பின்படி, கடலூரில் இயங்கிக் கொண்டிருக்கும் 5,000 மீனவப் பெண்களில் கிட்டத்தட்ட 10% பெண்கள் மீன் உலர்த்துதல், மீன் வெட்டுதல் போன்ற வேலைகளில் இருக்கின்றனர்
மாநிலத்தில் அந்த எண்ணிக்கை அதிகம். கடல் மீன்வள நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2020-21 வருடத்தில் 2.6 லட்சம் என்கிறது மீன்வளத்துறையின் மாநில இணையதளம்.

















