அவர்கள் தாளத்துக்கு ஏற்றவாறு வேகமாக அசைந்தனர் - " ரே ரேலா ரே ரேலா ரே ரேலா ரே" - கோண்டு சமூகத்தினரிடையே பிரபலமாக இருக்கும் ரேலா பாடல்களைப் பாடியபடி முழங்கால் நீளத்திற்கு வெள்ளை புடவை மற்றும் பளிச்சிடும் தலை கிரீடம் அணிந்த இளம் பெண்கள் கைகளைக் கோர்த்தபடி ஒரு நேரத்தில் மூன்று பேர் ஒன்றாக அசைந்தனர்.
விரைவில், வெள்ளை நிற ஆடை மற்றும் வண்ணமயமான இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகை அணிந்த இளைஞர்கள் குழு அவர்களுடன் சேர்ந்தது. அவர்கள் கால்களில் கட்டியிருந்த சலங்கை அவர்களது நடனத்திற்கு ஏற்றவாறு ஒருசேர இசைத்தது மேலும் ரேலா பாடல்களைப் பாடியபடி அவர்கள் கையில் வைத்திருந்த மந்திரி என்றழைக்கப்படும் சிறிய முரசினையும் இசைத்தனர். பெண்கள் தங்களது கைகளை கோர்த்து இளைஞர் குழுவினை சுற்றி ஒரு வளையம் அமைத்தனர். அவர்கள் அனைவரும் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருந்தனர்.
16 முதல் 30 வயது வரையிலான கோண்டு ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த 43 ஆண்கள் மற்றும் பெண்கள் கொண்ட குழு, சத்தீஸ்கரின் கொண்டகாவுன் மாவட்டத்தைச் சேர்ந்த கேஷ்கால் வட்டத்திலுள்ள பெத்மாமாரி கிராமத்தில் இருந்து வந்திருக்கின்றனர்.
மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ராய்ப்பூர் - ஜகதல்பூர் நெடுஞ்சாலைக்கு பஸ்தர் வட்டத்திற்கு அருகில் உள்ள இந்த இடத்தை அடைய அவர்கள் வேனில் 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்திருக்கின்றனர். சத்தீஸ்கரின் பலோதபஜார் - பத்தப்பாரா மாவட்டத்தைச் சேர்ந்த சோனாகான் பழங்குடி மன்னர் வீர் நாராயண சிங்கின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் 2015 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 10 முதல் 12ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கொண்டாடப்படும் வீர் மேளாவிற்கு மத்திய இந்தியாவின் ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்த மற்ற நடன கலைஞர்களும்
குறிப்பாக சத்தீஸ்கரை சேர்ந்த நடன கலைஞர்களும் வந்து சேர்ந்திருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்த இம்மன்னர் 1857 டிசம்பர் மாதம் காலனித்துவ ஆட்சியாளர்களால் ராய்ப்பூர் மாவட்டத்திலுள்ள ஜெய்ஸ்தம்பா சவுக்கில் சிறைபிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்ட பின்னர் பிரிட்டிஷாரால் அவரது உடல் வெடித்துச் சிதற விடப்பட்டதாக உள்ளூர் குறிப்புகள் கூறுகின்றனர்.
விழா நடைபெறுகின்ற இடம் - ராஜாராவ் பத்தர் - இது கோண்டு ஆதிவாசிகளின் மூதாதையர் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு தேவஸ்தானமாக கருதப்படுகிறது. மூன்று நாள் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் பாடல்கள் மட்டும் நடனங்களால் நிரம்பியுள்ளது.
" ரேலா (ரீலோ / ரேலோ) எங்கள் சமூகத்தை ஒன்றிணைக்கிறது", என்று சர்வ ஆதிவாசி ஜில்லா பிரகோஷ்தின் தலைவர் பிரேம்லால் கஞ்சம் கூறுகிறார். "மாலையில் இருக்கும் பூக்கள் நடனம் ஆடுவதைப் போல மக்கள் ஒவ்வொருவரும் கையை கோர்த்துக் கொண்டு ஆடுகின்றனர். இதில் ஒரு சக்தியும் ஆற்றலும் வருவதாக நம்மால் உணர முடிகிறது". ரேலா பாடல்களின் தாளமும் வரிகளும் கோண்டுவானா சமூகத்தின் (கோண்டு சமூகத்தின் மரபுகள்) கலாசாரத்தை பிரதிபலிக்கின்றது. " இந்தப் பாடல்களின் மூலம் எங்களது அடுத்த தலைமுறையினருக்கு கோண்டி கலாச்சாரத்தின் கூறுகளை பரப்புகின்றோம்", என்று கூறுகிறார் பிரேம்லால்.
"ரேலா என்பது கடவுளின் பாடல் வடிவம்", என்று பலோத் மாவட்டத்தைச் சேர்ந்த பலோத்ககன் கிராமத்தின் தௌலத் மண்டாவி கூறுகிறார். எங்கள் ஆதிவாசி பாரம்பரியத்தின் படி தெய்வங்களின் கவனத்தை ஈர்க்க இந்த பாடல்கள் பாடப்படுகின்றன. உங்களது உடலில் வலியோ பிரச்சனையோ இருந்தால் நீங்கள் ரேலா பாடல்களுக்கு நடனம் ஆடினால் அவை காணாமல் போகும். இந்த பாடல்கள் திருமணங்கள் மற்றும் பிற நிழச்சிகளிலும் பாடப்படும்".
டிசம்பரில் நடந்த வீர் மேளாவில் பங்கேற்றவர்களில் இளையவர்களில் ஒருவரான 8 ஆம் வகுப்பு மாணவி சுகியாரியன் காவ்தே, "நான் ரேலாவை நேசிக்கிறேன். இது எங்கள் கலாச்சாரத்தின் அங்கம்", என்று கூறுகிறார். அவர் இக்குழுவுடன் இணைந்திருப்பதில் உற்சாகமாக இருக்கிறார் ஏனென்றால் அவர் வெவ்வேறு இடங்களுக்கு பயணிப்பதற்கான வாய்ப்பை அது ஏற்படுத்திக் கொடுக்கிறது.
பெத்மாமாரி கிராமத்தைச் சேர்ந்த குழு ரேலா பாடலுடன் துவங்கி ஹல்கி மந்திரி மற்றும் கோலாங் நடனம் வரை சென்றது.
பாரம்பரியமாக மந்திரி ஹரேலியின் போது (காரீப் பருவத்தில் பயிர்கள் முளைக்க துவங்கி பசுமையாக இருக்கக்கூடிய காலத்திலிருந்து நிகழ்த்தப்படுகிறது மேலும் அது தீபாவளி வரை செல்லும்) என்று கூறுகிறார் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான திலீப் குரேதி. இந்த காலகட்டத்தில் ஆண்கள் பெரிய முரசுகளுடனும் பெண்கள் கையில் சிங்கிகளுடனும் ஒன்றாக நடனமாடுவர்.
பூச கோலாங் குளிர்காலத்தில் கொண்டாடப்படுகிறது, இது டிசம்பர் இறுதியில் தொடங்கி ஜனவரி நடுப்பகுதியில் வரை நடைபெறும் (சந்திர நாட்காட்டியின் பூச மாதம் வரை). கோண்டு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அண்டை கிராமங்களுக்குச் சென்று கோலாங் நடனத்தை ரேலாவின் தாளத்திற்கு ஏற்றவாறு ஆடுவர் - இது தவாய் மரத்தின் குச்சிகளை செதுக்கி விசேசமாக தயாரிக்கப்பட்ட குச்சிகளைக்க கொண்டு ஆடப்படும் ஆற்றல் மிக்க நடனம்.
பூச கோலாங் காலத்தில் எங்களுக்கான உணவுப் பொருட்களை (பிற கிராமங்களுக்கு) நாங்களே எடுத்துச் சென்று மதிய உணவினை தயாரித்து சாப்பிடுவோம், இரவு உணவு கிராமத்தினரால் வழங்கப்படும்", என்று பெத்மாமாரி கிராமத்தில் இருந்து வந்திருக்கும் குழுவின் மூத்த தலைவரான சோமாரு கோரம் கூறினார்.
பூச மாத பௌர்ணமிக்கு முன்னர் குழுக்கள் தங்களது கிராமங்களுக்கு திரும்புவதுடன் இவ்விழாவும் நடனமும் நிறைவுபெறுகிறது.
தமிழில்: சோனியா போஸ்