மூங்கில் குச்சியில் வைக்கோல் சுற்றியுள்ள வால் போன்ற அமைப்பை கையில் பிடித்துக்கொண்டு சாஸ்திரிஜி ரிக்ஷாவில் ஏறுகிறார். அவருடன், அவரது குழுவில் 19 ஆண்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மூன்று ஆட்டோரிக்ஷாக்களில் நெருக்கிப்பிடித்துக்கொண்டு ஏறி அமர்ந்து, அயோத்தியாவின் பல்வேறு இடங்களில் மேடைகளில் நிகழ்ச்சி நடத்துவதற்கு விரைந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். அனைவரும் முழு ஒப்பனை மற்றும் ஆடை, அலங்காரத்துடன் உள்ளனர். அவர்களுக்கு தெரியும் இந்த தசரா மாதத்தில்தான் அவர்கள் கொஞ்சம் சம்பாதித்துக்கொள்ள முடியும்.
விநாயக் சாஸ்திரி அனுமன் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அவர்தான் பாடல் குழுவின் இயக்குனர் மற்றும் மேலாளர். அவர் இதை 2002ம் ஆண்டு துவக்கினார். அவர் மேடையில் நிகழ்ச்சிகள் நடத்தாத காலத்தில், 60 வயதான சாஸ்திரி அயோத்தியா ஆரம்ப பள்ளியில் ஆசிரியர் பணி செய்வார். புறநகர் பகுதிகளில் அவர்கள் குடும்பத்தினருக்கு விவசாய நிலம் உள்ளது. அவருக்கு வயலில் இருந்து வரும் வருமானத்தில் பாடல் குழுவை நிர்வகிக்கிறார். தசரா மாதத்தில், இவரது குழுவினர் ஒவ்வொரு மாலையும் அயோத்தியாவில் குறைந்தபட்சம் மூன்று மேடைகளில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இவர்களின் நிகழ்ச்சி நடைபெறும். ஒவ்வொரு நிகழ்ச்சியும் இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் நடைபெறும். தசரா காலத்தில் சில வாரங்களுக்கு இது அவர்களுக்கு இரவுப்பணி. ஜனவரி மற்றும் பிப்ரவரி குளிர் காலங்களில் அவர்கள் வாரத்தில் மூன்று முறை இந்த நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். ஆண்டின் மற்ற நாட்களில் நிகழ்ச்சிகளே கிடையாது.
சங்கங்கள் அல்லது ஊர் குழுக்களிடம் இருந்து ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்ய சாஸ்திரி ரூ. 3 ஆயிரம் முன்பணமாக பெறுகிறார். மற்றுமொரு தொகையான ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500ஐ நிகழ்ச்சி முடிந்த பின்னர் வழங்குவார்கள். சில நேரங்களில் பேசிய மொத்த தொகையும் முன்னரே வழங்கப்படும். குழு உறுப்பினர்களுக்கு மூப்பு அடிப்படையில் ஓர் இரவுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை வழங்கப்படும். சாஸ்திரி சிறிது தொகையை பயணம், அலங்கார ஆடைகள் மற்றும் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள் வாங்க உபயோகிப்பார். இந்த ஆடை, ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும், நிகழ்ச்சி நடைபெறாத காலங்களில், பெரிய பெட்டிகளில் வைத்து மூடப்பட்டு, உள்ளூரில் உள்ள தர்மசத்திரத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
அயோத்தியாவின் ராமர் கதை நிகழ்ச்சி நடத்துபவர்கள், பாழடைந்த மற்றும் தூசிபடர்ந்த அரங்குகளில் எப்போதாவதுதான் நிகழ்ச்சி நடத்துவார்கள். அவர்கள் வழக்கமாக தெருமுனையில் தற்காலிக மேடை அமைத்தே, நிகழ்ச்சி நடத்துவார்கள். அதற்கு அவர்கள் திரைச்சீலைகள், பின்னணியில் மங்கலான நிலப்பரப்பு படங்கள் மற்றும் முகத்திற்கு பூசிக்கொள்ளும் பவுடரைக்கொண்டு புகை மூட்டம் ஏற்படுத்தியும் நிகழ்ச்சிக்கு தேவையான சூழலை உருவாக்கிக்கொள்வார்கள்.
ராமாயணத்தில் உள்ள அத்தியாயங்கள் மற்றும் கதைகளை அதன் வீரியத்துடனும், ஆடம்பர தோற்றத்துடனும் செய்து காட்டுவார்கள். அதுவே ராமர் கதை நிகழ்ச்சிகளின் சாரம் ஆகும். அயோத்தியா மாறிவிட்டதைப்போல், தற்போது நிகழ்ச்சியின் சாரங்களிலும் சில மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. அவரது நிகழ்ச்சி தற்போது பெரிய அரசியல் என்பது விநாயக் சாஸ்திரிக்கு நன்றாக தெரியும். “ராமரின் பெயர் தற்போது எல்லோரும் அழைக்கும் ஒன்றாக மாறிவிட்டது“ என்று அவர் கூறுகிறார்.
12 வயதான அக்ஷய் பதாக் என்பவர்தான் அந்த குழுவில் உள்ள இளையவர். அவர் தனது 10 வயது முதல் சீதாவின் கதாபாத்திரத்தை அரங்கேற்றி வருகிறார். அவர் 7ம் வகுப்பு படிக்கிறார். ஆனால், மூன்றாம் வகுப்பு மாணவர் போல் தோற்றமளிக்கிறார். அவரது ஒல்லியான உடல்வாகு மற்றும் உயரத்தை பார்த்த சாஸ்திரி, அவரது தந்தையை ஏற்கனவே அறிந்திருந்ததால், அக்ஷயை நடிப்பதற்கு அழைத்துக்கொண்டார். அக்ஷயின் தந்தை உத்திரபிரதேச மாநிலம் பைசாபாத் தாலுகாவில் உள்ள பெனிப்பூர் கிராமத்தில் மதகுருவாக உள்ளார். சீதா சிறிது பலகீனமானவராக இருக்கவேண்டும். சீதா, இறுதியில் நிலத்திற்குள் செல்ல அதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று சாஸ்திரி கருதுகிறார்.




















