கோவிட்-19 உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எட்டு நாட்களில் ராம்லிங் சனாப் உயிரிழந்தார். ஆனால் அவரைக் கொன்றது வைரஸ் அல்ல.
இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு 40 வயது ராம்லிங் மருத்துவமனையிலிருந்து தனது மனைவி ராஜூபாய்க்கு தொலைப்பேசியில் அழைத்துள்ளார். “அவரது சிகிச்சைக்கான செலவை கண்டதும் அவர் கண்ணீர் விட்டார்,” என்கிறார் அவரது உறவினரான 23 வயது ரவி மோரல். “மருத்துவமனையின் சிகிச்சை கட்டணத்தை செலுத்த தனது இரண்டு ஏக்கர் நிலத்தை விற்க வேண்டும் என அவர் எண்ணினார்.”
மகாராஷ்டிராவின் பீட் நகரில் உள்ள தீப் மருத்துவமனையில் மே 13ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ராம்லிங்கிற்கு ரூ.1.6 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக ராஜூபாயின் சகோதரர் பிரமோத் மோரல் கூறுகிறார். “நாங்கள் எப்படியோ சமாளித்து இரண்டு தவணைகளாக செலுத்திவிட்டோம். ஆனால் மருத்துவமனையின் சார்பில் மீண்டும் 2 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர்,” என்கிறார் அவர். “குடும்பத்தினரிடம் கேட்காமல் நோயாளியிடம் கூறியுள்ளனர். அவருக்கு பாரத்தை கொடுக்க வேண்டிய தேவை என்ன வந்தது?”
குடும்ப ஆண்டு வருமானத்தைவிட கிட்டதட்ட இருமடங்கு மருத்துவமனை கட்டணம் செலுத்த வேண்டியிருந்ததால் ராம்லிங் மனஉளைச்சல் அடைந்துள்ளார். மே 21ஆம் தேதி கோவிட் வார்டிலிருந்து வெளியேறிய அவர் மருத்துவமனை வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மே 20ஆம் தேதி இரவு தொலைப்பேசியில் கணவர் அழைத்தபோது அவரை 35 வயது ராஜூபாய் சமாதானப்படுத்த முயன்றார். அவர்களின் இருசக்கர வாகனத்தை விற்கலாம் அல்லது இருவரும் வேலை செய்யும் மேற்கு மகாராஷ்டிராவில் அவர்கள் வேலை செய்யும் கரும்பு தோட்டத்திலிருந்து கடன் வாங்கலாம் என அவர் கூறியிருந்தார். கணவர் உடல் நலன் தேறி வர வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றார் அவர். ஆனால் பணத்தை எப்படி திரட்டுவது என ராம்லிங் உறுதியின்றி இருந்திருக்க வேண்டும்.
ஆண்டுதோறும் ராம்லிங்கும், ராஜூபாயும் பீட் மாவட்டம் கைஜ் தாலுக்காவில் உள்ள தங்கள் குக்கிராமத்திலிருந்து மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள கரும்பு தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்வார்கள். நவம்பர் முதல் ஏப்ரல் வரை 180 நாட்கள் வேலை செய்து அவர்கள் ஒன்றாக ரூ.60,000 வரை ஈட்டுவார்கள். அவர்களின் 8 முதல் 16 வயதிலான மூன்று பிள்ளைகளும் ராம்லிங்கின் தந்தையின் பராமரிப்பில் விட்டுச் செல்லப்படுவார்கள்.











