சிவாஜி தோமருக்கு 13 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவரது நிலம் முழுவதும் உழவு செய்து பருத்தி, சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆகியவை பயிரிடுவதற்கு தயாராக வைத்துள்ளார். அதன் வழியாக நாம் நடந்து வரும்போது, அதில் சிறு பகுதியில், சப்பிப்போன எலுமிச்சை போன்ற பழங்கள் கீழே சிதறிக்கிடந்தன. “இவை சாத்துக்குடி பழங்கள்“ என்று ஒரு பழத்தை எடுத்த சிவாஜி கூறுகிறார். “இதற்கு நாளொன்றுக்கு, ஒரு மரத்திற்கு 60 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். “சாத்துக்குடி மரங்கள் மொத்தமும் காய்ந்துவிட்டன“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
தோமருக்கு 2 ஏக்கர் நிலத்தில் 400 சாத்துகுடி மரங்கள் இருந்தன. அதற்கு பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்து, பனிக்காலத்தில் போதிய நீர் கிடைத்தால், கோடை காலத்தில், நாளொன்றுக்கு 24 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். மற்ற பழங்களுக்கு குறைவான தண்ணீரே தேவைப்படும். எடுத்துக்காட்டாக, கோடை காலத்தில், மாதுளை ஒரு மரத்திற்கு, நாளொன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் மட்டுமே போதுமானது.
மராத்வாதாவில் உள்ள ஔரங்காபாதின் புறநகர் பகுதியில் உள்ள அவர்களின் கராஜ்கயான் கிராமத்தில் 2002ம் ஆண்டு தோமரின் தந்தை இந்த மரங்களை நட்டு வளர்த்தார். அந்த கிராமத்தில் 1,300 பேர் வசிக்கிறார்கள். சிவாஜிக்கு அப்போது 20 வயதுதான் ஆனது. “அப்போது தண்ணீர் பிரச்னை இல்லை“ என்பதை அவர் நினைவு கூறுகிறார். ஒப்பீட்டளவில் மழையும் நம்பகரமான அளவு இருந்தது. அவர்கள் குடும்பத்திற்கு சொந்தமான கிணற்றிலும் போதியளவு தண்ணீர் இருந்தது. “அப்போது சாத்துக்குடி பயிரிடுவது லாபகரமானதாகவும், புத்திசாலித்தனமான தேர்வாகவும் இருந்தது.“
ஔரங்காபாத் முதல் ஜால்னா வரை செல்லும் நெடுஞ்சாலையில், 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒவ்வொரு கிராமத்திலும் சாத்துக்குடி பழத்தோட்டம் நிறைந்திருக்கும். அவையனைத்து 2000ம் ஆண்டின் துவக்கத்தில் நடப்பட்டவையாகும். அனைத்து பழத்தோட்டங்களின் சொந்தக்காரர்களும் தற்போது அல்லல்படுகிறார்கள்.
இந்தப்பழத்தை பயிரிடுவது அவ்வளவு எளிதல்ல. சாத்துக்குடி பழங்கள் காய்க்க துவங்குவதற்கு 4 முதல் 5 ஆண்டுகள் முன்பிருந்தே, அவற்றை பராமரிக்கத் துவங்க வேண்டும். அதன் பின்னர், ஆண்டுக்கு இருமுறை, 25 முதல் 30 ஆண்டுகளுக்கு மகசூல் நிச்சயம். ஆனால், சிவாஜியின் பழத்தோட்டம் 2006 முதல் 2010ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்கு மட்டுமே கனி கொடுத்தது.




