கண்பதி பால் யாதவ் அஸ்தமனத்தை நோக்கி கடந்த வாரத்தில் சைக்கிள் ஓட்டிச் சென்று மறைந்துவிட்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். தலைமறைவு புரட்சியாளர்களுக்கு செய்தி சொல்லும் தூதுவராக இருந்தவர். தன்னுடைய நூற்றாண்டு காலத்தை நிறைவு செய்து 101ம் வயதில் நோயுற்று மறைந்தார். அவரின் இறுதிக்காலத்தில் கூட 5-லிருந்து 20 கிலோமீட்டர் வரை தினசரி சைக்கிள் ஓட்டியவர். தற்போது வானையும் கடந்து சென்றுவிட்டார்.
2018ம் ஆண்டில் நாங்கள் சந்தித்தபோது அவருக்கு வயது 97. எங்களை தேடி 30 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி வந்திருந்தார். ‘எங்கள்’ என குறிப்பிடும் பாரி குழுவாகிய நாங்கள் தாமதமாக சென்றிருந்தபோதும் அவரை சந்தித்து அவரின் அற்புதமான வாழ்க்கையை பதிவு செய்துவிட வேண்டுமென்கிற ஆவலில் இருந்தோம். அது மே மாதத்தின் நடுவே ஒரு நாள். அவர் பல மணி நேரங்களாக சாலையில் எங்களுக்காக அலைந்திருந்தார். அவரின் சைக்கிள் ஓர் அருங்காட்சியகப் பொருளை போல் தோற்றமளித்தது. ஆனால் அதைப் பற்றி அவருக்கு பிரச்சினை இல்லை. அந்த மனிதர் மறைந்துவிட்டார். ஆனால் அவரின் கதை இன்னும் இருக்கிறது: கணபதி யாதவின் அற்புதமான வாழ்க்கைப் பயணம்.
கண்பதி பால் யாதவ் 1920ம் ஆண்டு பிறந்தவர். விடுதலைப் போராட்டத்தில் இயங்கி, பிரிட்டிஷ் அதிகாரத்திலிருந்து விடுதலை என 1943-ல் அறிவித்த சதாராவின் நிழலுலக அரசின் டூஃபன் சேனா (சூறாவளி படை) என்னும் ஆயுதப்படையில் பதவி வகித்தவர். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். 1943ம் ஆண்டில் ஜி.டி.பாபு லாத் மற்றும் கேப்டன் பாவ் ஆகியோர் சத்தார் மாவட்டத்தின் ஷேனோலியில் நடத்திய பெரும் ரயில் கொள்ளையிலும் கண்ப தாதா ஒருவராக பங்கெடுத்திருக்கிறார்.
அவர் சொல்கையில், “எங்களின் தலைவர்களுக்கு உணவு கொண்டு சென்று (காட்டில் மறைந்திருந்தவர்கள்) கொடுக்கும் வேலையை தான் பெரும்பாலும் செய்தேன். இரவு நேரத்தில் செல்வேன். தலைவருடன் 10-20 பேர் இருப்பார்கள்,” என்றார். கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அவரோடு சேர்த்து 20 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும்.தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு தேவையான உணவை யாதவ் சைக்கிளில் கொண்டு சென்று கொடுத்தார். புரட்சிகர குழுக்களுக்கு இடையேயான முக்கியமான தகவல் பரிமாற்றத்துக்கும் அவர் உதவினார்.






