" எங்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாத காரணத்தால் நாங்கள் தில்லிக்கு வர வேண்டியதாயிற்று" என்கிறார் பாரதிபாய் கோடே. இவர் 2018 மார்ச்சில் நடந்த விவசாயிகளின் குறிப்பிடத்தக்க போராட்டமான நாசிக்கிலிருந்து மும்பை வரையிலான 180 கிமீ நடைபயணத்தில் பங்கெடுத்து நடந்தவர்.
விவசாயிகள் சங்கம் மற்றும் - தொழிற்சங்கங்களின் பேரணி நடந்த செப்டம்பர் 5 க்கு முந்தைய நாள் தில்லியின் மத்திய பகுதியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நான் பாரதிபாயை சந்தித்தேன். நாசிக் முதல் மும்பை வரை நடந்த நீண்ட பயணத்தில் பங்கேற்ற 40,000 முதல் 50,000 வரையிலான விவசாயிகளைப் போலவே மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தின் கல்வான் தாலூக்காவிற்கு உட்பட்ட அவரின் கிராமமான சப்டாஷ்ரங்ககாட் கிராமத்திலிருந்து அவருடன் மற்ற பலரும் தில்லிக்கு வந்திருந்தனர்.
நில உரிமைகள், நீர்ப்பாசன வசதி, கடன் தள்ளுபடி, விளை பொருள்களுக்கு கட்டுப்படியாகும் விலை நிர்ணயம், போன்ற பல கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இந்த முறை 26 மாநிலங்களிலிருந்து 300000 பேர் கலந்து கொண்டதில் அந்த எண்ணிக்கை அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கணக்கிட்டதை விட பல மடங்கு அதிகரித்திருந்தது. அதோடு தற்போது அந்த விவசாயிகளுடன் மற்ற பல தொழிலாளிகளும் கூட அங்கிருந்தனர். அவர்கள் அனைவரும் அகில இந்திய விவசாய சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளின் அறைகூவலின் பேரில் ஊர்வலத்தில் பங்கெடுப்பதற்காக தில்லிக்கு வந்திருந்தனர்.
பெரும்பாலான போராட்டகாரர்கள் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சிறிதளவு உணவு மற்றும் உடைகள் அடங்கிய சிறு பைகளைச் சுமந்து கொண்டு செப்டம்பர் 5 பேரணிக்கு முதல் நாளே ரயில் அல்லது பேருந்து மூலம் தில்லிக்கு வந்து விட்டனர். ராம்லீலா மைதானத்தில் அவர்கள் தங்கி படுத்துறங்க தேவையான கூடார வசதிகளும் ரூ 25க்கு உணவு கிடைக்கவும் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.







