"நூல் தீர்ந்துவிட்டது. பணமும் செலவாகிக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் தயார் செய்த புடவைகளை வியாபாரியிடமும் கொண்டு சேர்க்கவும் முடியாது" என்கிறார் புர்வாரி கிராமத்திலிருந்து சந்தேரி துணி நெய்யும் சுரேஷ் கோலி.
ஊரடங்கு ஆரம்பித்த ஒரு வாரத்துக்குள்ளேயே கைவசமிருந்த நூற்கண்டுகள் நெய்யப்பட்டு தீர்ந்து போய்விட்டன. சந்தேரி துணிகளை விற்கும் ப்ரான்பூர் கிராமத்தின் வியாபாரி ஆனந்தி லாலுக்காக நெய்யப்பட்ட மூன்று சேலைகள் காத்திருக்கின்றன.
துணி நெய்தவரின் ஊர், உத்தரப்பிரதேசத்தின் பெத்வா ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் ராஜ்காட் அணைக்கு அருகே இருக்கும் லலித்பூர் மாவட்டத்தில் இருக்கிறது. ஆற்றுக்கு அந்தப் பக்கம், மத்தியப் பிரதேச அஷோக் நகர் மாவட்டத்தில் சந்தேரி டவுன் இருக்கிறது. அதே பேரில் நெய்யப்படும் துணிகளுக்கான மையம் அது. வியாபாரியின் ப்ரான்பூர் கிராமம் இந்த டவுனுக்கு அருகே இருக்கிறது.
உத்தரப்பிரதேச - மத்தியப்பிரதேச எல்லையில் இருக்கும் புர்வாரையும் சந்தேரியையும் காவல்துறையின் தடுப்புகள் மறித்திருக்கின்றன. இரு ஊர்களில் இருக்கும் ஆனந்தி லாலையும் சுரேஷ்ஷையும் 32 கிலோமீட்டர் சாலை பிரித்திருக்கிறது. ”என்ன நடக்கிறது என எனக்கு புரியவில்லை. தில்லியிலிருந்து வீட்டுக்கு வருபவர்களை காவல்துறை பிடித்துச் செல்கிறது” என்கிறார் சுரேஷ். “எங்கள் கிராமத்துக்கெல்லாம் எப்படி நோய் வரும்? அரசாங்கம் எங்களின் மாவட்டத்தை முடக்கி வைத்திருக்கிறது. எங்களின் வாழ்க்கைகள் புரட்டிப் போடப்பட்டிருக்கின்றன”
முடித்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று புடவைகளுக்கு 5000 ரூபாயை அனுப்பி வைக்குமாறு ஆனந்திலாலை சுரேஷ் கேட்டிருக்கிறார். “சந்தை திறக்கும்வரை முழுப்பணம் கொடுக்க முடியாது என சொல்லி வெறும் 500 ரூபாய் மட்டும்தான் அனுப்பினார்.” என்கிறார்.
ஊரடங்குக்கு முன்பெல்லாம் வியாபாரி, சுரேஷ்ஷுக்கு நெய்யத் தேவையான பஞ்சு, பட்டு நூற்கண்டுகள், ஜரிகை நூலெல்லாம் கொடுத்து புடவைகள், துப்பட்டாக்கள், துணிகள், திரைச்சீலைகள் போன்றவற்றை நெய்யும் வேலைகள் கொடுப்பார். அதற்கான வடிவமைப்புகளையும் கொடுப்பார். வேலை கொடுக்கப்படும்போதே விலைகள் நிர்ணயிக்கப்படும். வேலை முடிந்து துணி எடுக்கும்போது பணம் கொடுக்கப்படும். எப்போதுமே ரொக்கமாக பணம் கொடுக்கப்பட்டது.








