ஒரு திங்கட்கிழமை காலை 11 மணியளவில், 41 வயது முனேஷ்வர் மஞ்சி, தனது பூச்சு போடப்படாத, பாழடைந்த வீட்டிற்கு வெளிப்புறத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். குடியிருப்புக்கு முன்னால் உள்ள அந்த திறந்தவெளியில், மூங்கில் கம்புகளால் பிடிக்கப்பட்ட ஒரு நீல நிற பாலிதீன் தாள் அவரை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது. ஆனால் இது ஈரப்பதத்திலிருந்து எந்த நிவாரணத்தையும் தருவதில்லை. பாட்னா நகரத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காகோ நகருக்கு அருகில் உள்ள முசாஹரி தோலாவில் வசிக்கும் முனேஷ்வர் கூறுகையில், “கடந்த 15 நாட்களாக எனக்கு வேலை இல்லை,” என்கிறார்.
முசாஹரி தோலாவில் - தலித் சமூகமான முசாஹரைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல் - 60 குடும்பங்கள் வசிக்கின்றன. முனேஷ்வர் மற்றும் அவரது தோலாவில் உள்ள மற்றவர்கள் அருகிலுள்ள விவசாய வயல்களில் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் தினசரி கூலியை நம்பியிருக்கிறார்கள். ஆனால் வேலை சீராக இல்லை என்கிறார் முனேஷ்வர். குறுவை மற்றும் சம்பா பயிர்களின் விதைப்பு மற்றும் அறுவடைக்காலத்தில் (வருடத்தில் 3-4 மாதங்களுக்கு) மட்டுமே வேலை கிடைக்கும்.
ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ஒரு நில உரிமையாளரான ‘பாபு சாஹிப்’ என்பவரின் பண்ணையில்தான் அவர் கடைசியாக வேலை பார்த்தார். “எட்டு மணி நேர வேலைக்கு எங்களுக்கு 150 ரூபாய் ரொக்கம் அல்லது 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார் விவசாயத் தொழிலாளர்கள் தினக்கூலியைப் பற்றி முனேஷ்வர். பணத்திற்கு பதிலாக 4-5 ரொட்டிகள் அல்லது அரிசி மற்றும் பருப்பு போன்ற மதிய உணவு இணைக்கப்பட்டுள்ளது. .
அவரது தாத்தா 1955-ல் பூமிதான இயக்கத்தின் போது மூன்று பிகா (கிட்டத்தட்ட இரண்டு ஏக்கர்) விவசாய நிலத்தைப் பெற்றிருந்தாலும் - நிலப்பிரபுக்கள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை நிலமற்றவர்களுக்கு மறுபங்கீடு செய்வதற்காக வழங்கியபோது - அதிகப் பயனில்லை. “நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நிலம் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நாம் பயிர்களை விதைக்கும் போதெல்லாம், விலங்குகள் அவற்றைத் தின்று நஷ்டம் அடைகிறோம்,” என்று விளக்குகிறார் முனேஷ்வர்.
பெரும்பாலான நாட்களில், முனேஷ்வரின் குடும்பத்தினரும் தோலாவில் உள்ள மற்றவர்களும் இலுப்பை மரத்தின் பூக்களில் மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வாழ்கின்றனர்.
ஆனால், இது ஆபத்தான வணிகமாகும். ஒரு கடுமையான மாநிலச் சட்டம் - பீகார் தடை மற்றும் கலால் சட்டம், 2016 - மதுபானம் அல்லது போதைப்பொருட்களின் உற்பத்தி, உடைமை, விற்பனை அல்லது நுகர்வு ஆகியவற்றை தடை செய்கிறது. மேலும் ' நாட்டுச் சரக்கு அல்லது பாரம்பரிய மதுபானம்' என வரையறுக்கப்பட்ட இலுப்பை பானமும் கூட சட்டத்தின் வரம்பிற்குள் வருகிறது.










