பெரிய புளியமரங்கள் சூழ்ந்த அவரது திறந்தவெளி பட்டறையில் அமர்ந்துகொண்டு, மணிராம் மண்டாவி உளியை வைத்து காற்றில் அசைக்கும் புல்லாங்குழலை தயாரித்துக்கொண்டிருக்கிறார். அது ஒரு இசைக்கருவி. அதனை காற்றில் ஆட்டும்போது அது ரம்மியமான இசையை வெளிப்படுத்தும். விலங்குகளை அச்சுறுத்துவதற்கான கருவியாகவும், அதனை பயன்படுத்தலாம். “எனது சிறுவயதில் காடுகளில் புலிகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் உள்ளிட்ட விலங்குகள் இருக்கும். நாம் இதை ஆட்டினால், அது எழுப்பும் ஒலியைக் கேட்டு, அவை உங்களிடம் இருந்து தள்ளி நிற்கும்“ என்று 42 வயதான மணிராம் கூறுகிறார்.
அவர் மூங்கிலால் செய்யப்படும் கருவியை, ‘காற்றில் ஆடும் புல்லாங்குழல்‘ என்கிறார். சட்டிஸ்கரில் உக்குட் பன்சுரி. அதற்கு வாய்ப்பகுதி கிடையாது. இரண்டு துவாரங்கள் மட்டுமே உள்ளன. காற்றில் அதை அசைக்கும்போது, அது இசையை கொடுக்கும்.
42 வயதான மணிராம் ஒரு நாளில் உளி மூலம் ஒரு புல்லாங்குழலை தயாரிப்பார். ஒவ்வொரு புல்லாங்குழலும் அருகில் உள்ள நகர சந்தை அல்லது கைவினைஞர்கள் கூட்டமைப்பில் விற்பதன் மூலம் அவருக்கு ரூ.50ஐ பெற்றுத்தரும். பின்னர் வாடிக்கையாளர்களுக்கு ரூ.300க்கு விற்கப்படும்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், சிறந்த புல்லாங்குழல் கருவி தயாரிக்கும் மந்தர் சிங் மந்தாவியை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததது, மணிராமை, பன்சுரி செய்யும் பணிக்கு கொண்டு வந்தது. “எனது 15 வயதில் ஒருமுறை காடுகளுக்கு விறகு சேகரிக்க சென்றபோது என்னை அழைத்த மந்தாவி, நீ பள்ளிக்குச் செல்வதில்லையா, எனில் நான் உனக்கு ஒன்றை கற்றுக்கொடுக்கிறேன் என்றார்“ என்று அவர் கூறுகிறார். அதனால், பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, மறைந்த புல்லாங்குழல் இசை கருவி தயாரிக்கும் அவருடன் பணி செய்ய துவங்கிவிட்டார்.
தற்போது மணிராம் வேலை செய்துவரும் புல்லாங்குழல் பட்டறை காத்பங்காளின் எல்லையில் உள்ளது. அவரது கோண்டு ஆதிவாசிகள் குடியிருப்பு, சட்டிஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மாட் வட்டாரத்தில் உள்ள காடுகளில் உள்ளது. எல்லா அளவுகளிலும் மூங்கில் குச்சிகள் சுற்றிலும் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. சிறிய தீயில் இருந்து வரும் புகை, தொங்கவிடப்பட்டிருக்கும் கருவிகளை பனிக்காலத்தில் சூடுபடுத்திக்கொள்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒருபுறத்தில் போடப்பட்டுள்ள கூடாரத்தில் செய்து முடிக்கப்பட்ட பல்வேறு அளவுகளில் உள்ள புல்லாங்குழல்கள், உளிகள் மற்றும் கத்திகள் வைக்கப்பட்டுள்ளன. மணிராம் இங்கு ஒரு நாளில் 8 மணி நேரம் வேலை செய்கிறார். மூங்கிலை அளவாக வெட்டி, மென்மையாக்கி, உளியால் செதுக்கி, சூடாக்கிய கருவியைப் பயன்படுத்தி, பூ மற்றும் பல வடிவங்கள் வரைகிறார். புல்லாங்குழலில், மெல்லிய மற்றும் ஆழமான வடிவங்கள் சூட்டைப்பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.
அவர் புல்லாங்குழல் தயாரிக்காத நாட்களில், வானம் பார்த்த பூமியான அவரது 2 ஏக்கர் நிலத்தில், அவரது 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான நெல் பயிரிட்டு வளர்ப்பதில் கவனம்செலுத்துகிறார். அவரது குடும்பத்தில் அவரது மனைவி மற்றும் வயதுவந்த 3 பிள்ளைகள் உள்ளனர். அவரது மகன்கள் வேறு சிறு வேலைகள் செய்கின்றனர். இந்த கைத்தொழிலை கற்றுக்கொள்வதை விரும்பவில்லை. (அவர்கள் சமூகத்தில் இந்த வேலையை ஆண்கள் மட்டுமே கற்றுக்கொள்கின்றனர்)
புல்லாங்குழலுக்குத் தேவையான மூங்கில்கள் நாராயண்பூர் நகரில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. அந்நகரம் இங்கிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ளது. “20 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிருந்த காடுகளில் இருந்து எளிதாக மூங்கில் கிடைத்தது. ஆனால் தற்போது, எது வேண்டுமானாலும் 10 கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டியுள்ளது. காடு அடர்வனமாகவும், தேக்கு, நாவல், பிளம் உள்ளிட்ட பெரிய பெரிய மரங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. இப்போது அதுபோன்ற பெரிய மரங்களே இல்லை. புல்லாங்குழல் செய்வதை தொடர்வது கடினமாகப்போகிறது“ என்று அவர் கூறுகிறார்.
நாங்கள் புளிய மர நிழலில் உள்ள பட்டறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, மணிராம் கடந்த காலம் நமக்கு மிகுதியாக வழங்கியிருந்த இயற்கையின் கொடையை நினைவு கூர்ந்தார். தற்போது அவை குறைவது குறித்து வருந்தியதுடன், அழுகையே அவருக்கு வந்துவிட்டது. அப்போதெல்லாம், மான், முயல், சில நேரங்களில் சிறு கொம்புடைய மான் ஆகியவை இருக்கும். கட்டுப்பன்றிகள் முற்றிலும் காணாமல் போய்விட்டது. ஏன் காட்டில் ஒன்றுமில்லை? மரங்களும், விலங்குகளும் காடுகளில் இருந்ததா? என்று எங்கள் குழந்தைகள் நாளை எங்களிடம் கேள்விகள் கேட்டால், எங்களிடம் அவர்களுக்கு பதில் இல்லை“ என்று அவர் கூறுகிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.