எல்லப்ப்பன் குழப்பமாகவும் கோபமாகவும் இருக்கிறார்.
“நாங்கள் கடலோர மீனவ சமூகம் கிடையாது. ஏன் எங்களை செம்பனந்த மறவராகவும் கோசாங்கியாகவும் அடையாளப்படுத்துகின்றனர்?”
“நாங்கள் சோளகர்கள்,” என்கிறார் 82 வயது நிரம்பிய அவர். “(அரசு) எங்களிடம் அடையாள ஆவணம் கேட்கிறது. நாங்கள் இங்கேயே இருந்து வாழ்கிறோம். அது போதுமான அடையாளம் இல்லையா? ஆதாரம், ஆதாரம்… அவர்கள் அதைத்தான் கேட்கிறார்கள்.”
தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட சாக்கிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் எல்லப்பன் சமூகத்தினர் சாட்டையடிக்கும் வேலை செய்பவர்கள். உள்ளூரில் சாட்டை சமூகம் என அழைக்கப்படுகின்றனர். ஆனால் கணக்கெடுப்பில் அவர்கள் செம்பனந்த மறவர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்குக் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கிறார்கள்.
“கணக்கெடுப்பவர்கள் எங்களை வந்து பார்ப்பார்கள். சில கேள்விகள் கேட்பார்கள். அவர்களுக்கு பிடித்த பட்டியலில் எங்களை போடுவார்கள்,” என்கிறார் அவர்.
நாட்டில் தவறாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் 15 கோடி இந்தியர்களில் எல்லப்பனும் ஒருவர். இத்தகைய சமூகங்கள் பெரும்பாலானவை காலனியாட்சியில் குற்றப் பழங்குடி சட்டத்தின் கீழ், குற்றப்பரம்பரை என அறிவிக்கப்பட்டவை. இச்சட்டம் 1952ம் ஆண்டில் திரும்பப் பெறப்பட்டு, இச்சமூகங்கள் சீர்மரபினர் அல்லது மேய்ச்சல் பழங்குடிகள் என அழைக்கப்பட்டன.
“முழுமையடையவும் இல்லை. போதுமான அளவுக்கும் கீழ் மோசமாக உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் சமூக அடுக்குமுறையில் கடைசியில்தான் இருக்கின்றனர். காலனியாட்சியின்போது உருவாக்கப்பட்ட பாரபட்சங்களை அவர்கள் இன்னும் எதிர்கொண்டு வருகின்றனர்,” என்கிறது 2017ம் ஆண்டின் தேசிய சீர்மரபினர் மேய்ச்சல் மற்றும் அரை நாடோடி பழங்குடி சமூகங்களுக்கான வாரிய அறிக்கை.

















