“தாஷ்ரா நடனம் ஆடப் போகிறோம்,” என்கிறார் நடனக் கலைஞரான இத்வாரி ராம் மச்சியா பைகா. “இந்த நடனம் தசராவின்போது தொடங்கி, மூன்று நான்கு மாதங்கள் தொடர்ந்து பிப்ரவரி, மார்ச் வரை நடக்கும். தசரா கொண்டாடியபிறகு, பிற பைகா கிராமங்களுக்கு சென்று இரவு முழுவதும் ஆடுவோம்,” என்கிறார் சட்டீஸ்கரின் பைகா சமாஜ தலைவர்.
அறுபது வயதுகளில் இருக்கும் நடனக் கலைஞரும் விவசாயியுமான அவர், கபீர்தம் மாவட்ட பண்டரியா ஒன்றிய அமானிய கிராமத்தில் வசிக்கிறார். ராய்ப்பூரில் மாநில அரசு ஒருங்கிணைக்கும் தேசிய பழங்குடி நடனத்தில் கலந்து கொள்ள குழுவின் பிற உறுப்பினர்களுடன் சேர்ந்து இத்வாரிஜி வந்திருக்கிறார்.
அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுவாக (PVTG) சட்டீஸ்கரில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் ஏழு சமூகங்களில் பைகா சமூகமும் ஒன்று. அவர்கள் மத்தியப் பிரதேசத்திலும் வாழ்கின்றனர்.
“வழக்கமாக 30 பேர் தாஷ்ரா நடனம் ஆடுவார்கள். எங்களிடம் இரு பாலின நடனக் கலைஞர்களும் இருக்கின்றனர். கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் இருக்கின்றனர்,” என்கிறார் இத்வாரிஜி. ஆண் நடனக்குழு கிராமத்துக்கு வந்தால், அவர்கள் பெண் நடனக்குழுவுடன் சேர்ந்து ஆடுவார்கள் என்கிறார். பதிலுக்கு அந்த கிராமத்தின் ஆண் நடனக் குழு, அவர்களின் கிராமத்துக்கு சென்று அங்கிருக்கும் பெண் நடனக் குழுவுடன் சேர்ந்து ஆடுவார்கள்.
“பாட்டும் ஆட்டமும் எங்களுக்கு மிகவும் பிடித்தமானவை,” என்கிறார் அம்மாவட்டத்தின் கவர்தா ஒன்றியத்தை சேர்ந்த அனிதா பண்ட்ரியா. இத்வாரிஜியின் குழுவை சேர்ந்த அவரும் நடன விழாவில் பங்கேற்கிறார்.
பாடலில் கேள்வி கேட்டு பதிலுறுவதும் நடனத்தில் இடம்பெறுகிறது.
பைகா கிராமங்களில் காணப்படும் பாரம்பரியம்தான் பைகா நடனம். சுற்றுலாவாசிகள் அதனால் ஈர்க்கப்படுகின்ற்னார். பிரபல சுற்றுலாத்தலங்களுக்கு வரும் முக்கியமான பிரமுகர்களுக்கு பொழுதுபோக்கவென நடனமாட குழுக்கள் அடிக்கடி அழைக்கப்படுவதுண்டு. ஆனால் போதுமான அளவுக்கான பணம் கொடுக்கப்படுவதில்லை என்கின்றனர் குழுவினர்.
முகப்புப் படம்: கோபிகிருஷ்ணா சோனி
தமிழில்: ராஜசங்கீதன்