மார்ச் 12ம் தேதி சட்டப் பேரவைக் கட்டிடமான விதான் சபாவை முற்றுகையிட தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்தில் குவிந்த 40000 விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். மார்ச் 6ம் தேதி நாசிக்கில் தொடங்கப்பட்டு ஒரு வாரகாலமாக அந்த பெருமக்கள் மேற்கொண்டிருந்த நடை பயணம், சட்டமன்ற கட்டட முற்றுகையோடு முடிவு பெற வேண்டியிருந்தது. ஆனால் நடை பயணத்திற்கு எழுந்த ஆதரவையும், அதன் உணர்வாழத்தையும் அறிந்திருந்த மஹாராஷ்ட்ர அரசு மார்ச் 12ம் தேதி பிற்பகலில் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது.
கொளுத்திய வெயிலின் தாக்கத்தால் விவசாயிகள் முழு ஆற்றலையும் இழந்திருந்தார்கள். கேமராக்களால் எரிச்சலைந்தார்கள் சிலர். (பார்க்க: மும்பையை நோக்கிய பெரு நடை பயணம் மற்றும் உடைந்த பாதங்கள் உடையாத உணர்வுகள்). அடுத்து என்ன நடக்கும் என்கிற கவலையிலும் இருந்தார்கள்.
நடை பயணத்தின் ஒருங்கிணைப்பாளர்களான அகில பாரதீய கிசான் சபா தலைவர்களும் மாநில அரசுப் பிரநிதிகளும் நடத்திய நான்கு மணி நேர பேச்சுவார்த்தையின் போது “என்ன நடக்கிறதென்று பார்ப்போம்” என்பதை பலரும் என்னிடம் சொன்னார்கள். மந்த்ராலயத்தில் இந்த கூட்டம் நடந்துகொண்டிருந்த 12.30 முதல் 4.30 வரையிலான நேரத்தில் விவசாயிகள் மிகப் பொறுமையோடு காத்திருந்தார்கள்.
கிசான் சபாவின் பொதுச் செயலாளர் அஜித் நவலே, கிசான் சபா தலைவர் அசோக் தாவ்லே, நாசிக் மாவட்டத்தின் சுர்குணா தாலுக்காவின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.பி. கவித் உட்பட 11 பேர், அரசுப் பிரதிநிதிகள் ஆறு பேரைத் தங்களது கோரிக்கைகளோடு சென்று சந்தித்தார்கள்.



