“மிகப் பெரிய பவளப்பாறையின் மீது தான் நம் தீவே உள்ளது என நான் சிறுவனாக இருந்தபோது சொல்லக் கேட்டிருக்கிறேன். பவளப்பாறை நீருக்கடியில் இருந்துகொண்டு தீவை பிடித்து வைத்துள்ளது. அதனைச் சுற்றியுள்ள கழிமுகம் கடல் உள்ளுக்குள் வந்துவிடாமல் நம்மை காக்கிறது,“ என்கிறார் பித்ரா தீவில் வசிக்கும் 60 வயதான பி. ஹைதர்.
“என் சிறுவயதில் அலைகள் குறைவாக இருக்கும்போது பவளப் பாறைகளை பார்க்க முடிந்தது,“ என்கிறார் பித்ராவைச் சேர்ந்த மற்றொரு மீனவரான 60 வயதாகும் அப்துல் காதர். “அவை அழகாக இருந்தன. இப்போது எதுவுமே இல்லை. பெரிய அலைகள் அண்டாமல் இருப்பதற்கு நமக்கு பவளப் பாறைகள் தேவை.“
லட்சத்தீவு கூட்டங்களின் சுற்றுச்சூழல், அங்குள்ள மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரங்கள், கற்பனைகள், கதைகள் என அனைத்தும் பவளப் பாறைகளைச் சுற்றியே பின்னியுள்ளன – அத்தகைய பவளப்பாறைகள் இப்போது பல மாற்றங்களால் மெல்ல மறைந்து வருவதாக அப்பகுதி மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
”இயற்கை மாறிவிட்டது. இதுவே யதார்த்தம்,” என விளக்குகிறார் அகாட்டி தீவில் 22 வயது முதல் மீன்பிடித் தொழில் செய்து வரும் 61 வயதான முனியாமின் கே.கே. “அப்போதெல்லாம் மழைக்காலம் சரியான நேரத்திற்கு [ஜூனில்] வந்துவிடும், இப்போதெல்லாம் எப்போது வரும் என்று சொல்ல முடிவதில்லை. மீன்களும் இப்போது குறைவாகவே கிடைக்கின்றன. மீன்பிடிக்க நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்காது. இப்போது அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது. இப்போதெல்லாம் மக்கள் சில வாரங்கள், நாட்கள் என மீன் தேடி செல்கின்றனர்.“
இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமாக, கேரளாவின் கடலோரம் அரேபியக் கடலில் அமைந்துள்ள லட்சத்தீவுகளின் திறன்மிக்க மீனவர்கள் சிலர் படகில் சென்றால் ஏழு மணி நேரப் பயணத் தொலைவில் உள்ள அகட்டி, பித்ராவில் வசிக்கின்றனர். மலையாளம், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் ‘லட்சத்தீவு‘ என்றால் நூறாயிரம் தீவுகள் என்றுப் பொருள். நம் காலத்தில் தற்போது வெறும் 36 தீவுகள் தான் உள்ளன. அவை தோராயமாக 32 சதுர கிலோமீட்டர் உள்ளன. தீவுக்கூட்டங்களில் 400,000 சதுர கிலோ மீட்டருக்கு நீர் பரவியுள்ளது. கடல்வாழ் உயிரினங்கள், வளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.
யூனியன் பிரதேசத்தின் இந்த ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஏழாவது நபரும் மீனவர் - 64,500 மக்கள்தொகை (மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011) கொண்ட இங்கு 9,000க்கும் அதிகமானோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர்.






