பழங்குடியினரான நாங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டவென எங்களுக்கேயுரிய வழிகளை வைத்திருக்கிறோம். ஆறுகள், காடுகள், நிலம், நாட்கள் அல்லது ஒரு தேதி அல்லது மூதாதையர் என பலவகை பெயர்கள் சூட்டுவோம். ஆனால் காலப்போக்கில் எங்களின் விருப்பத்துக்கு பெயர் சூட்டும் உரிமை எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. நிறுவனமயப்பட்ட மதம் மற்றும் மதமாற்றங்கள் அந்த உரிமையைப் பறித்து விட்டது. எங்களின் பெயர்கள் மாறிக் கொண்டே இருந்தன. நாங்கள் மாற்றி மாற்றி வகைப்படுத்தப் பட்டோம். பழங்குடிக் குழந்தைகள் நகரத்திலுள்ள பள்ளிகளுக்கு சென்றபோது நிறுவனமயப்படுத்தப்பட்ட மதம் எங்களின் பெயர்களை மாற்றியது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ்கள் எங்கள் மீது திணிக்கப்பட்ட பெயர்களைக் கொண்டிருந்தன. இப்படித்தான் எங்களின் மொழிகளும் எங்களின் பெயர்களும் எங்களின் கலாசாரமும் வரலாறுகளும் பலியெடுக்கப்பட்டன. பெயர்சூட்டலில் சர்ச்சை இருக்கிறது. எங்களின் வேர்களுடனும் வரலாறுகளுடனும் இணைவில் இருந்த நிலத்தை தற்போது நாங்கள் தேடுகிறோம். எங்களின் இருப்பை அடையாளப்படுத்திய அந்த நாட்களையும் தேதிகளையும் நாங்கள் தேடுகிறோம்.
யாருடைய பெயர் இது?
நான் திங்கட்கிழமை பிறந்தேன்
எனவே என்னை திங்கா என்றழைத்தார்கள்
நான் செவ்வாய்க்கிழமை பிறந்தேன்
எனவே நான் செவ்வா அல்லது செவ்வாயன்
நான் வியாழக்கிழமை பிறந்தேன்
எனவே என்னை வியாழன் என அழைக்கிறார்கள்
வாரத்தின் நாட்களைப் போல்
காலத்தின் மார்பில் நான் நின்றேன்
ஆனால் அவர்கள் வந்து என் பெயரை மாற்றினார்கள்
என் இருப்பைக் குறித்த
அந்தத் தேதிகளையும் நாட்களையும் அவர்கள் அழித்தார்கள்
இப்போது நான் ரமேஷாகவோ நரேஷாகவோ மகேஷாகவோ
ஆல்பெர்ட்டாகவோ கில்பெர்ட்டாகவோ ஆல்ஃப்ரெடாகவோ இருக்கிறேன்
என்னை உருவாக்கிய மண் அல்லாத மண் கொண்ட
என் வரலாறல்லாத வரலாறு கொண்ட
எல்லா நிலங்களில் வழங்கப்படும் பெயர்களையும் கொண்டிருக்கிறேன்
அவர்களின் வரலாறுகளில் என் வரலாறை தேடுகையில்
ஒரு முக்கியமான விஷயத்தை உணர்ந்தேன்
உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு இடத்திலும்
கொல்லப்படுவது நான்தான்
ஒவ்வொரு கொலைக்கும் ஓர் அழகியப் பெயர் இருக்கிறது
தமிழில் : ராஜசங்கீதன்