வெள்ள நீர் உயரத் துவங்கியபோது, பார்வதி வாசுதியோ தனது வீட்டை விட்டு வெளியேறும்போது தன் கணவரின் பாரம்பரிய தலைப்பாகையை தன்னுடன் எடுத்துக்கொண்டார். "நாங்கள் இதையும் சிப்பிலியையும் (ஒரு இசைக் கருவி) மட்டுமே எங்களுடன் கொண்டு வந்தோம். நடப்பது எதுவாக இருந்தாலும், இந்த தலைப்பாகை எங்களால் ஒருபோதும் விட்டு விட முடியாது", என்கிறார் அவர். அந்த தலைப்பாகை மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அவரது கணவர் கோபால் வாசுதியோ இறை பாடல்களைப் பாடும்போது அதை அணிந்து கொள்கிறார்.
ஆகஸ்ட் 9 அன்று எழுபதுகளின் பிற்பகுதியில் இருக்கும் கோபால் ஒரு பள்ளியின் அறையில் ஒரு மூலையில் விரக்தியுடன் அமர்ந்திருந்தார். "எனது மூன்று ஆடுகள் இறந்து விட்டன, எங்களால் மீட்கப்பட்ட ஒரு ஆடும் நோய்வாய் பட்டிருப்பதால் இறக்கக்கூடும்", என்று அவர் கூறினார். கோபால், வாசுதியோ சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார், இச்சமூகத்தினர் பகவான் கிருஷ்ணனை வணங்குபவர்கள். இவர்கள் வீடு வீடாகச் சென்று பக்திப் பாடல்களைப் பாடி யாசகம் பெறுவர். பருவமழைக்கால மாதங்களில் கோல்ஹாபூர் மாவட்டத்தின் ஹட்கானங்கள் தாலுகாவில் உள்ள தனது கிராமமான பெந்தவாடேயில் விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார் அவர். "கடந்த ஒரு மாதமாக, கனமழை காரணமாக வயல்களில் எந்த வேலையும் நடைபெறவில்லை, இப்போது வெள்ளம் வேறு மீண்டும் வந்துவிட்டது", என்று அவர் கிட்டத்தட்ட கண்களில் கண்ணீருடன் கூறினார்.
பெந்தவாடே விவசாயிகள் மழையின் தாமதமான வருகை காரணமாக தங்களது மானாவரி பயிர்களின் விதைப்பை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்தனர் - இங்கு பொதுவாக முதல் மழை ஜூன் மாதத்தின் துவக்கத்திலேயே துவங்கிவிடும். ஆனால் இப்போது மழை பெய்தபோது, சோயாபீன், நிலக்கடலை மற்றும் கரும்பு ஆகிய பயிர்களை மூழ்கடிக்க அதற்கு வெறும் ஒரு மாதம் மட்டுமே தேவைப்பட்டது.
திருமண புகைப்படங்கள் எடுப்பதற்காக தான் பயன்படுத்தும் ட்ரோன் - மக்களை மீட்க உதவும் - என்பதை ஆசிப் சற்றும் எதிர்பார்க்கவில்லை: 'நாங்கள் எந்த நபரையும் உயிர் இழக்க விடமாட்டோம். விலங்குகளையும் காப்பாற்றப் போகிறோம்' என்று கூறினார்.


















