அன்றைய தினம் முகாமில் இருந்த பெண்களும், ஆண்களும் தத்தம் செல்லிடப்பேசிகளில் சில குறுந்தகவல்களையும், மேப்களையும் சில புகைப்படங்களையும் ஆராய்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் ஏதோ நம்பிக்கை துளிர்விட்டிருந்தது. அதேவேளையில் பதற்றமும் தெரிந்தது.
ஏனென்றால், அன்றைய தினம் காலையில் ஒரு குழு வனத்துக்கு அருகாமையில் புதிதாகப் புலித்தடங்கள் சிலவற்றைக் கண்டறிந்திருந்தது.
இன்னொரு குழு வனத்தில் பொருத்தப்பட்டிருந்த 90 கேமராக்களில் ஏதோ ஒரு கேமராவில் பதிவாகியிருந்த புலியின் மங்கலான புகைப்படத்தைக் கொண்டு வந்தது. அடர்ந்த இலையுதிர் புதர் வனத்தினுள் ஆங்காங்கே உள்ள பருத்திக் காடுகள், நீர் நிலைகளின் ஊடே 50 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்தப் படத்தைப் பார்த்த ஓர் இளம் வனவர், இந்தப் புலியின் வரிகளைப் பார்க்கும்போது "இது ஒரு பெண் புலியாகவே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது" என்று பதற்றமான குரலில் கூறினார். அவருடைய உயர் அதிகாரி "படம் தெளிவாக இல்லை. நமக்கு இன்னும் தெளிவான துல்லியமான தகவல் வேண்டும்" என்றார்.
அது அந்தப் பெண் புலியாக இருக்குமோ? அது அங்கே மறைந்திருக்குமோ?
வனப் பாதுகாவலர்கள் குழுக்கள், விலங்குகளைக் கண்காணிக்கும் குழுவினர், துப்பாக்கி ஏந்திய வேட்டைக்காரர்கள் என பலரும் பல்வேறு திசைகளில் தங்கள் பயணத்தைத் தீர்மானித்தனர். இரண்டு வருடங்களாக தனது இரு குட்டிகளுடன் அகப்படாமல் சுற்றித் திரியும் அந்தப் பெண் புலியை எப்படியாவது பிடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் பயணத்தைத் தொடங்கியிருந்தனர்.
அந்த குறிப்பிட்ட கிராமத்தில் குறைந்தது 13 பேராவது புலியால் தாக்கப்பட்டிருந்தனர். அத்தனை சம்பவங்களிலும் அந்த ஒரே பெண் புலி மீது தான் சந்தேகம் இருந்தது.
இரண்டு மாதங்களாக அந்தப் பெண் புலியை எப்படியாவது உயிருடனோ அல்லது கொன்றோ பிடிக்கும் முயற்சியில் வனத்துறை ஆப்பரேஷன் பெரியளவில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த இரண்டுமே அவர்களுக்கு எளிதானதாக அமையவில்லை. 2018 ஆகஸ்ட் 28 வரை அந்தப் பெண்புலியைப் பற்றி எந்த ஒரு குறிப்பிடத்தக்க தகவலும் இல்லை. எப்போதாவது கேமராவில் கேட்கும் பீப் ஒளியும், ஆங்காங்கே தெரியும் புலித் தடங்களும் அந்தப் புலியைப் பிடித்து விடலாம் என்ற சிறு நம்பிக்கையை மட்டும் தந்து செல்வதாக இருந்தது.











