பிரபல கார்பா பாடலின் ராகத்தில் பாடப்படும் இப்பாடல் விடுதலை, எதிர்ப்பு மற்றும் உறுதி ஆகியவற்றுக்கான பாடல். வம்சாவளியாக வரும் அமைப்புகளையும் கேள்வியின்றி கட்டுபடச் சொல்லும் பண்பாட்டு உத்தரவுகளையும் ஏற்க மறுக்கும் கிராமப்புற பெண்களின் உண்மையான குரலை இப்பாடல் எதிரொலிக்கிறது.
கட்ச்சில் பேசப்படும் பல மொழிகளில் ஒன்றான குஜராத்தியில் எழுதப்பட்டிருக்கும் இப்பாடல், பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த கட்ச் மகிளா விகாஸ் சங்காதன் (KMVS) ஒருங்கிணைத்த பயிற்சிப் பட்டறையில் கிராமப் பெண்கள் சேர்ந்து எழுதியப் பாடல் ஆகும்.
இப்பாடல் எந்த வருடம் எழுதப்பட்டது என்பதையும் யார் எழுதினார்கள் என்பதையும் அறுதியிட்டு சொல்வது கஷ்டம். ஆனால் சம சொத்துரிமை கோரும் ஒரு பெண்ணின் உறுதியான குரலை சந்தேகமே இல்லாமல் பாடலில் கேட்க முடியும்.
பாடல் தயாரிக்கப்பட்ட பின்னணி நமக்கு சரியாக தெரியவில்லை என்றாலும் நிலவுரிமை மற்றும் பெண்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து குஜராத் முழுக்க நடத்தப்பட்ட, குறிப்பாக கட்ச்சில் 2003ம் ஆண்டையொட்டி நடத்தப்பட்ட பயிற்சிகள் மற்றும் உரையாடல்கள் பற்றிய ஆவணங்கள் இருக்கின்றன. பெண்களின் உரிமைக்கான விழிப்புணர்வு பிரசாரம், விவசாய உற்பத்தியில் இருக்கும் பெண்களின் பங்களிப்புக்கும் நிலத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் உரிமைக்கும் இடையே உள்ள இடைவெளியைப் பேசின.
ஆனால் அப்பாடல் அதற்குப் பிறகு, அப்பகுதி முழுக்க பயணித்து பின் தாண்டியும் சென்றது. பயணத்தினூடாக எல்லா நாட்டுப்புற பாட்டுக்கும் நேர்வதுபோல வரிகள் சேர்க்கப்பட்டன. குறைக்கப்பட்டது. பார்வையாளர்களுக்கு ஏற்ப பாடகர்களால் மாற்றப்பட்டன. இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாடலை நகத்ரா தாலுகாவை சேர்ந்த நந்துபா ஜடேஜா வழங்கியிருக்கிறார்.
குழு நடத்தும் ரேடியோவான சூர்வாணியால் பதிவு செய்யப்பட்ட 341 பாடல்களில் இதுவும் ஒன்று. KMVS-ன் மூலமாக பாரிக்கு கிடைத்த இப்பாடல் தொகுப்பு, அப்பகுதியில் இருக்கும் பலதரப்பட்ட பண்பாடு மற்றும் இசை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இத்தொகுப்பு, கட்ச்சின் சரிந்து வரும் இசை பாரம்பரியத்தை பாதுகாக்க உதவுகிறது. அதன் ஒலிகள் பாலை மணலில் தொலைந்து கொண்டிருக்கின்றன.



