அன்றைய நாளில் அவரது வியாபாரத்தை தொடங்கும் நேரம் அது. ஷிவ்புரா கிராமத்தின் அடிகுழாயிடம் நிற்கும் 9-10 பெண்களருகே மோட்டார் சைக்கிளை நிறுத்துகிறார் பச்சு. “அக்கா… இந்த டிசைனைப் பாருங்கள்,” என்கிறார் அவர். “சிதி மார்க்கெட்டில் இருக்கும் பெரியக் கடைகளில் கூட இந்த மாதிரியான புடவைகள் உங்களுக்குக் கிடைக்காது. உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் வாங்காதீர்கள்.”
நாளின் முதல் விற்பனையை உறுதிபடுத்தும் நோக்கில் பெரும் அளவில் பணத்தை குறைக்கிறார் பச்சு: “ஒவ்வொரு புடவையின் விலையும் 700 ரூபாய். உங்களுக்கு நான் வெறும் 400 ரூபாய்க்கு தருகிறேன்…”
அடுக்கி வைக்கப்பட்டிருந்த 15-20 நைலான் புடவைகளை அப்பெண்கள் எடுத்துப் பார்க்கின்றனர். 150 ரூபாய் கொடுப்பதாக ஒருவர் சொல்கிறார். புடவையின் அசல் விலையே 250 ரூபாய் எனக் கோபமாக முணுமுணுத்தபடி புடவைகளை எடுத்து மீண்டும் கட்டுகிறார் பச்சு. அந்த நாளின் முதல் வாடிக்கையாளராக மாறியிருக்கக் கூடிய பெண் மீண்டும் அடிகுழாய் பக்கம் திரும்புகிறார்.
அதிருப்தியுடன் அடுத்த ஊரான மத்வாவுக்கு மோட்டார் சைக்கிளில் கிளம்புகிறார் பச்சு. “சில நேரங்களில் மக்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். எதையும் வாங்க மாட்டார்கள்,” என்கிறார் அவர் உள்ளூர் பகேலி மொழியில். “எங்களின் நேரம் புடவையை விரித்துக் காட்டுவதிலும் மடித்து வைப்பதிலுமே அதிகம் கழிகிறது.”
மூன்று கிலோமீட்டர் தூரம் கடந்து மத்வாவின் அடிகுழாயருகே நீர் குடிக்க வண்டியை நிறுத்துகிறார். “நான் கிளம்பி நான்கு மணி நேரங்கள் ஆகிவிட்டது,” என்கிறார் அவர். “இன்னும் முதல் ‘போனி’ (முதல் விற்பனை) கூட ஆகவில்லை. 150 ரூபாய் பெட்ரோலுக்குக் காலையில் செலவழித்தேன். அதை கூட திரும்ப ஈட்ட முடியவில்லை.”
சிதி டவுனிலிருந்து காலை 10 மணிக்கு பச்சு ஜெய்ஸ்வால் கிளம்பினார். உத்தரப்பிரதேச எல்லையில் இருக்கும் மத்தியப்பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் இருக்கும் டவுன் அது. அவரும் பிற வியாபாரிகளும் கிராமங்களில் வீடுவீடாகச் சென்று புடவைகளும் போர்வைகளும் படுக்கைகளும் ஷூக்களும் குறைந்த விலைக்கு விற்கின்றனர். இப்பொருட்களை அவர்கள் 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கத்னி மாவட்டத்திலுள்ள பெரியச் சந்தைகளில் மொத்தமாக வாங்கி விடுகிறார்கள். பெரிய சந்தைகளுக்குச் செல்லும் வாய்ப்பற்ற பெண்கள்தான் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள்.
அவர்களில் ஒருவர் மது மிஷ்ரா. சிதி டவுனிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சத்லா கிராமத்தைச் சேர்ந்த 32 வயது விவசாயி. “பைக்கில் வந்து விற்பவர்களிடமிருந்து வாங்குவது எனக்கு வசதியாக இருக்கிறது. ஏனெனில் விவசாயத்தை விட்டுவிட்டு நான் சந்தைக்கு செல்ல நேரம் கிடைப்பதில்லை. வருடத்துக்கு 3-4 புடவைகளும், 4-5 போர்வைகளும் வாங்குவேன்,” என்கிறார் அவர். “நல்லப் புடவையை பச்சு எனக்கு 200 ரூபாய்க்கு கொடுப்பார். போர்வைக்கு ரூ.100. ஆனால் இப்போது அவர் ஒரு புடவைக்கு 250 ரூபாய் கேட்கிறார். போர்வைக்கு ரூ.150. அந்தளவுக்கு பணம் என்னிடம் கிடையாது.”
இதைத் தவிர்க்க முடியாது என்கிறார் பச்சு. தொடர் பெட்ரோல் விலை உயர்வு அவரைப் போன்ற சிறு வணிகர்களை நசுக்குவதாகச் சொல்கிறார்.
செப்டம்பர் 2019-ல் மத்தியப்பிரதேசத்தில் 78 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை செப்டம்பர் 29, 2021-ல் 110 ரூபாயாக உயர்ந்திருக்கிறது (நவம்பர் 3-ல் 120 ரூபாயை எட்டி பிறகு சற்றுக் குறைந்தது). வெளியே கிளம்புகையில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பழக்கம் பச்சுவுக்கு இருந்தது. விலை உயர்ந்த பிறகு அவருக்குக் கிடைக்கும் பெட்ரோலின் அளவு குறைந்துவிட்டது. இதனால் ஒவ்வொரு நாளும் அவர் செல்லும் கிராமங்களும் தூரமும் கூட குறைந்துவிட்டது.
இருபது வருடங்கள் விற்பனையாளனாக வேலை செய்ததில் குடும்பக் கடன், உடல்நலக்குறைவு, ஊரடங்குக்காலம் என எல்லாவற்றையும் தாண்டி பச்சுவால் பிழைப்பை ஓட்ட முடிந்தது. ஆனால் உயரும் பெட்ரோல் விலை அவருக்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறது. கடந்த சில வருடங்களில் உயரும் பெட்ரோல் விலையாலும் சரியும் விற்பனையாலும் பலர் விற்பனை செய்யும் வேலையை நிறுத்தி விட்டதாக சொல்கிறார் அவர். தினக்கூலியாக அவர்கள் வேலை பார்க்கின்றனர். அல்லது வேலையின்றி இருக்கின்றனர். அவர்களுக்கென அரசு பலன்கள் எதுவும் கூட இல்லை. அவர்களுக்கென உரிமம் எதுவும் கிடையாது. விற்பனையாளர் அங்கீகாரமும் கிடையாது. (இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் காணொளியில் சிதி மாவட்டத்தின் திகாத் கலான் கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு விற்பனையாளர் ஜக்யாநாராயண் ஜெய்ஸ்வால் இதே பிரச்சினைகளைக் குறித்துப் பேசுகிறார்.)
கடந்த சில வருடங்களில் உயரும் பெட்ரோல் விலையாலும் சரியும் விற்பனையாலும் பலர் விற்பனை செய்யும் வேலையை நிறுத்தி விட்டு, தினக்கூலியாக வேலை பார்க்கின்றனர். அல்லது வேலையின்றி இருக்கின்றனர்
ஆனால் தலைமுறைகளைக் கடந்து நடத்தப்படும் இந்த வணிகம் கடந்த காலத்தில் லாபகரமாக இருந்ததாகச் சொல்கிறார் 45 வயது பச்சு. “முதல் ஆறு வருடங்களுக்கு துணிகளை தலையில் வைத்து நடந்து சென்றேன்,” என 1995ம் ஆண்டில் விற்பனையை தொடங்கிய நிலையை நினைவுகூர்கிறார் அவர். துணிக்கட்டு 10 கிலோ கனம் இருக்கும் என்கிறார். “ஒவ்வொரு நாளும் 7-8 கிலோமீட்டர்கள் நடந்து 50லிருந்து 100 ரூபாய் வரை சம்பாதிப்பேன்.”
2001ம் ஆண்டில் பச்சு ஒரு சைக்கிள் வாங்கினார். “பிறகு நான் 15-20 கிலோமீட்டர் தினமும் செல்லத் தொடங்கினேன். நடப்பதை விட அது வசதியாக இருந்தது,” என்கிறார் அவர். “500லிருந்து 700 ரூபாய் வரை விற்பனை செய்வேன். 100லிருந்து 200 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.”
2015ம் ஆண்டில் பச்சு அடுத்தக் கட்டத்துக்குச் சென்றார். இரண்டாம் பயன்பாட்டுக்கான ஹீரோ ஹோண்டா இருச் சக்கர வாகனத்தை நண்பரிடமிருந்து 15,000 ரூபாய் விலைக்கு வாங்கினார். “அதற்குப் பிறகு மோட்டார் சைக்கிளில் 30லிருந்து 40 கிலோமீட்டர்கள் பயணிக்க முடிந்தது. ஒருநாளில் 500லிருந்து 700 ரூபாய் வரை சம்பாதித்தேன்.” 9லிருந்து 10 கிராமங்களுக்கு அவர் செல்வார். 50, 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களுக்கும் செல்வதுண்டு.
அப்போதும் இப்போதும் குளிர் மற்றும் கோடை மாதங்களான நவம்பர் முதல் மே வரை மட்டும்தான் பச்சு விற்பனை செய்ய வெளியே செல்கிறார். “மழைக்காலத்தில் (ஜூன் மத்தியிலிருந்து செப்டம்பர் வரை) செல்வதைத் தவிர்க்கிறோம். ஏனெனில் துணிக்கட்டு நனைந்து பாதிக்கப்பட்டுவிடும். கிராமத்துச் சாலைகளும் சகதியாக இருக்கும்.
கோடைகால விற்பனைப் பயணங்களும் கடினமானவைதான். “பல மணி நேரங்களாக கொடும் வெப்பத்தில், 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுவது மிகவும் கஷ்டம்,” என்கிறார் அவர். “எனினும் மழைக்காலத்தையும் ஈடுகட்டவென கோடைகாலத்தில் பயணித்து நாங்கள் வருமானம் ஈட்டவே முயலுகிறோம்.”
ஊரடங்கு காலத்தை சேமிப்பும் விவசாய நிலமும் கொண்டு பச்சுவால் சமாளிக்க முடிந்தது. சிதி டவுனிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குப்ரியில் அரை ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். சம்பாப் பருவத்தில் நெல்லும் குறுவைப் பருவத்தில் கோதுமையும் விளைவிக்கிறார். நிலத்தில் வேலை பார்க்கவென ஒவ்வொரு மாதமும் பல முறை வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொள்வார். “ஒவ்வொரு வருடமும் 300 கிலோ கோதுமையும் 400 கிலோ நெல்லும் (குடும்பப் பயன்பாட்டுக்கு) எங்களுக்குக் கிடைக்கும். பருப்பு மற்றும் பிற தானியங்களைச் சந்தையில் வாங்கிக் கொள்வோம்,” என்கிறார் அவர்.
மார்ச் 2021-ல் கோவிட் இரண்டாம் அலை தொடங்கியபோது பச்சுவுக்கு தொற்று உறுதியானது. “இரண்டு மாதங்களுக்கு படுக்கையிலிருந்தேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 25,000 ரூபாய் செலவானது,” என்கிறார் அவர்.
“இந்த மாதங்களில் வருமானமே இல்லை,” என்கிறார் பச்சுவின் 43 வயது மனைவி பிரமிளா ஜெய்ஸ்வால். “அச்சமயத்தில் என் தந்தை (ஒரு விவசாயி) நான்கு மாடுகளை அன்பளிப்பாகக் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் ஐந்து கிலோ பால் கிடைக்கிறது. அருகே இருக்கும் காலனியில் அதை விற்று 3,000லிருந்து 4,000 ரூபாய் வரை மாதந்தோறும் ஈட்டுகிறேன்.”
பிற்பகல்களில் சிதி டவுனுக்கு வெளியே இருக்கும் புல்வெளிகளில் நடந்து மாட்டுக்கு தீவனம் சேகரிப்பார் பிரமிளா. மாட்டுக் கொட்டகையை சுத்தப்படுத்தவும் விலங்குகளுக்கு உணவு கொடுக்கவும் மாலை 6 மணிக்கு மேல் வீடு திரும்பிய பிறகு அவருக்கு பச்சு உதவுவார்.
முதல் ஊரடங்குக்கு முன், பிரமிளா காய்கறிகள் விற்றுக் கொண்டிருந்தார். “அருகே இருக்கும் காலனிகளில் 2010லிருந்து விற்கத் தொடங்கினேன். தலையில் கூடை வைத்து விற்றேன்,” என்கிறார் அவர். “ஒவ்வொரு நாளும் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து காய்கறி மண்டியில் காய்கறி வாங்குவேன். அங்குதான் விலை குறைவாக இருக்கும். ஒருநாளுக்கு 100லிருந்து 150 ரூபாய் வரை சம்பாதிப்பேன்.” இளைய மகளான 22 வயது பூஜாவுக்கு பிப்ரவரி 2020-ல் திருமணமான பிறகு, காய்கறி விற்பனையை அவர் நிறுத்தி விட்டார். “காய்கறி விற்க நான் சென்ற பிறகு அவள் சமைத்து வைப்பாள். அவளுக்கு திருமணம் முடிந்த பிறகு நான்தான் சமைக்க வேண்டியிருக்கிறது,” என்கிறார் அவர்.
பிரமிளாவுக்கும் பச்சுவுக்கும் மேலும் ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர். 26 வயது சங்கீதாவுக்கு 2013ம் ஆண்டில் திருமணமானது. 18 வயது புஸ்ப்ராஜ், சிதியிலுள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.
“எங்களுக்கு வசதி இல்லை என்றாலும் எல்லாக் குழந்தைகளையும் தனியார் பள்ளியில் சேர்த்திருக்கிறோம்,” என்கிறார் பிரமிளா. திருமணச் செலவுகளும் பூஜாவுக்கான வரதட்சணையும் இன்னும் அதிகக் கடனில் அவர்களைத் தள்ளியது. 1 லட்ச ரூபாய் கடன் இன்னும் இருக்கிறது. “இந்தக் கடன்களை எப்படி அடைக்கப் போகிறேனெனத் தெரியவில்லை,” என்கிறார் அவர்.
உள்ளூர் பால் பண்ணையில் உதவியாளராக பணிபுரிந்து நாளொன்றுக்கு 150 ரூபாய் சம்பாதிக்கிறார் புஸ்ப்ராஜ். அந்தப் பணத்தில் அவர் கல்லூரிக் கட்டணத்தைக் கட்டிக் கொள்கிறார். “பயிற்சி வகுப்புகள் படிப்பதற்கு தேவைப்படும் பணத்துக்காக (போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி) நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் அவர். “பண்ணையில் வாடிக்கையாளர்கள் இல்லாதபோது படிக்க எனக்கு அனுமதி உண்டு.”
பெட்ரோல் விலை உயர்வு அக்குடும்பத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. “ஊரடங்குக்கு (மார்ச் 2020) முன், பெட்ரோல் விலை 70-80 ரூபாயாக இருந்தபோது, 7000லிருந்து 8000 ரூபாய் வரை மாதந்தோறும் சம்பாதித்தேன். கிராமங்களில் எங்களின் பொருட்களுக்கான தேவை அதிகம். எங்களிடமிருந்து துணிகள் வாங்கவென பல வாடிக்கையாளர்கள் காத்திருப்பார்கள்,” என்கிறார் பச்சு.
“ஆனால் தற்போதைய பெட்ரோல் விலை உயர்விலும் கூட பழைய விலைக்கே புடவைகள் வேண்டுமென மக்கள் கேட்கிறார்கள். இல்லையென்றால் வாங்க மறுத்து விடுகிறார்கள்,” என்கிறார் அவர். “எங்களின் லாபங்கள் வீழ்ந்துவிட்டன. காலை முதல் மாலை வரை வேலை பார்த்தாலும் 200 ரூபாய் கூட கிடைப்பதில்லை. பெட்ரோல் விலைகளால் எங்களின் வணிகம் அழிக்கப்பட்டுவிட்டது.”
தமிழில் : ராஜசங்கீதன்