"எங்கள் மண்ணில் நாங்கள் எந்த விதமான ரசாயனங்களையும் பயன்படுத்துவதில்லை. பூச்சிகளைக் கொல்வதற்கு விஷம் தேவையில்லை. மண்ணின் வளம் நன்றாக இருக்கும்பட்சத்தில் மற்ற எல்லாவற்றையும் அதுவே கவனித்துக் கொள்ளும்", என்று மகேந்திர நௌரி கூறுகிறார், அவருடைய வயல் நியாம்கிரி மலையில் இருந்து கிழக்கே ஒன்றறை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. உங்களுக்கு தேவையானது எல்லாம் வயல் வரப்பில் இலுப்பை மரமோ அல்லது ஒரு மருத மரமோ தான் பறவைகள், பல்லிகள் மற்றும் தவளைகளுக்கு அது அடைக்கலம் கொடுக்கும். அவை எங்கள் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் கவனித்துக் கொள்ளும்".
தென்மேற்கு ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் பிஷாமகடக் வட்டடத்தில் சுமார் 100 பேர் வசிக்கும் கிராமமான கேரண்டிகுடாவில் மகேந்திராவின் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. நௌரி குடும்பம் டோரா சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இக்கிராமத்திலுள்ள பெரும்பாலான குடும்பங்கள் கோண்டு ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர்களே.
அவர்களது நிலத்தில் 30 வயதாகும் மகேந்திரா மற்றும் அவரது 62 வயதாகும் தந்தை லோகநாத் ஆகியோர் 34 வகையான பயிர்களை பயிரிட்டு வருகின்றனர் நம்பமுடியாத அளவிற்கு 72 உப வகைகளை அது உள்ளடக்கியுள்ளது. அவர்கள் தங்களது நிலத்தில் சுழற்சி முறையில் வெவ்வேறு இடங்களில் விதைத்து அறுவடை செய்கின்றனர் மேலும் அவர்களது அறுவடையில் சிறுதானியங்கள் (சாமை மற்றும் தினை), பருப்பு வகைகள் (துவரை மற்றும் பச்சை பயறு), எண்ணெய் வித்துக்கள் (ஆளி, சூரியகாந்தி மற்றும் நிலக்கடலை) கிழங்குகள், மஞ்சள், இஞ்சி, பச்சை காய்கறிகள், தக்காளி, கத்தரிக்காய் மற்றும் பல வகைகள் அடங்கும். "நாங்கள் உணவுக்காக ஒரு போதும் சந்தையை சார்ந்து இருந்ததில்லை", என்று மகேந்திரா கூறுகிறார்.
நியாம்கிரி மலையில் இருந்து ஓடும் ஓடைகளில் இருந்து வரும் நீரை கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். அவர்கள் தங்கள் வயல்களுக்கு தண்ணீரைத் திருப்ப கற்களை கொண்டு வரப்புகள் அமைக்கின்றனர். "கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கு பருவநிலை மிகவும் மோசமடைந்து வருகிறது, ஆனால் எங்களது பயிர்கள் எல்லா நெருக்கடியையும் தாங்கி வளர்ந்தது. நான் இதுவரை யாரிடமும் கடன் வாங்கியதில்லை. அதற்குக் காரணம் எங்களது பாரம்பரிய விவசாய முறை மட்டுமே", என்று கூறுகிறார் லோகநாத். இவர்களது குடும்பம் அவர்களது அறுவடையினை பயன்படுத்தியே வாழ்ந்து வருகின்றது, மேலும் அவர்கள் தங்களது உபரி விளைபொருட்களை தான் முனிகுடா மற்றும் பிஷாமகட்டக்கிலுள்ள வாராந்திர சந்தைகளில் விற்று வருகின்றனர்.





