“அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்த மக்கள் நடமாட்டம் இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணி வரை தடை செய்யப்படுகிறது.”
–உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை (மே 17ம் தேதி இந்தியா டுடேவில் குறிப்பிட்டிருந்தபடி)
‘மாநிலங்களுக்கு இடையே பேருந்துகளையும் வாகனங்களையும் அனுமதித்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணம்’ (அதுவும் இரண்டு மாநிலங்களும் ஒப்புக் கொண்டால் மட்டும்தான்) வழங்கியிருந்தது சுற்றறிக்கை. நெடுஞ்சாலைகளில் நடந்து கொண்டிருந்த தொழிலாளர்களை பற்றி ஒரு வார்த்தை இடம்பெறவில்லை.
இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணி வரை நடமாட்டம் தடை செய்யப்பட்டதால் தொழிலாளர்கள் 47 டிகிரி செல்சியஸ் கோடை வெயிலில் நடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
தெலங்கானாவின் மிளகாய் விவசாய நிலங்களில் வேலை பார்த்த ஜம்லோ மட்கம் என்கிற 12 வயது ஆதிவாசி சிறுமி ஒரு மாதத்துக்கு முன் ஊரடங்கு உத்தரவு வேலையையும் வருமானத்தையும் நிறுத்தியபின் சட்டீஸ்கரில் இருக்கும் தன் ஊருக்கு கிளம்பினார். மூன்று நாட்களில் 140 கிலோமீட்டர்கள் நடந்தவர், சோர்வாலும் நீரில்லாமலும் வீட்டுக்கு 60 கிலோமீட்டர் தொலைவே இருந்த நிலையில் விழுந்து இறந்தார். இன்னும் எத்தனை ஜம்லோக்களை இத்தகைய ஊரடங்கு உத்தரவுகள் உருவாக்கும்?
130 கோடி மக்களை நான்கு மணி நேரங்களில் வீடுகளில் முடங்க சொன்ன பிரதமரின் மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு, பதற்றத்தை உருவாக்கியது. எல்லா இடங்களிலும் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வீடுகளை நோக்கி நடக்கத் தொடங்கினர். அடித்து துவைத்து நகரச்சிறைகளுக்குள்ளேயே காவலர்களால் முடக்க முடியாதவர்களை மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தினோம். பூச்சிக்கொல்லி மருந்தை மக்கள் மீது அடித்தோம். நிவாரணம் கிடைக்காத இடங்களுக்கு ‘நிவாரண முகாம்’ என்ற பெயர்சூட்டி அவர்களை அனுப்பி வைத்தோம்.
சாதாரணப் பொழுதில் கூட இருந்திராத அளவுக்கு மும்பை – நாசிக் நெடுஞ்சாலை ஊரடங்கு நேரத்தில் பரபரப்பாக இருந்தது. மக்கள் விரும்பிய திசைகளில் நடந்தார்கள். பிம்லேஷ் ஜெய்வால் சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் ஒரு காலை இழந்தவர். ஒரு ஸ்கூட்டரில் மனைவியையும் மூன்று வயது மகளையும் ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிராவின் பன்வெலிலிருந்து மத்தியப்பிரதேசத்தின் ரெவா வரை 1200 கிலோமீட்டர் சென்றிருக்கிறார். “நான்கு மணி நேர அவகாசத்தை மட்டும் கொடுத்து ஒரு நாட்டையே யாராவது முடக்குவார்களா?” எனக் கேட்கிறார் அவர். அட பிம்லேஷ், அக்கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரியாதா?










