” நான்கு குழந்தைகளுடன் எல்லா இரவுகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாரே அவர்தான் என்னை பொறுத்தவரை துர்க்கை.” ரின்து தாஸ் என்கிற கலைஞர்தான் துர்க்கை கடவுளை புலம்பெயர் தொழிலாளராக வரைந்திருக்கிறார். தென்மேற்கு கொல்கத்தாவில் இருக்கும் பெஹெலாவின் பரிஷா சங்கத்தின் துர்கா பூஜை பந்தலில் அந்த சிலைதான் தனித்து தெரிந்தது. சரஸ்வதி, லஷ்மி, பிள்ளையார் போன்ற பிற கடவுளரை துணை புலம்பெயர் தொழிலாளர்களாக துர்க்கை கொண்டிருந்தாள். மொத்த கண்காட்சியும் புலம்பெயர் தொழிலாளர்கள் கொரொனா தொற்றுக் காலத்தில் பட்ட துயரத்திற்கு அஞ்சலி செலுத்த அமைக்கப்பட்டிருந்தது.
46 வயதாகும் ரின்து தாஸை பொறுத்தவரை ஊரடங்கு காலம் என்பது, “ஆறு மாத வீட்டுக் காவலாக” இருந்திருக்கிறது. அவர் சொல்கையில், “தொலைக்காட்சியை போட்டதுமே நான் இறப்பைதான் பார்த்தேன். பலர் பாதிக்கப்பட்டிருந்தனர். பலர் இரவு பகல் பாராமல் நடந்து கொண்டிருக்கிறார்கள். பல நேரங்களில் அவர்களில் சிறு அளவு உணவோ குடிநீரோ கூட கிடைப்பதில்லை. தாய்கள், பெண்கள் என எல்லாரும் நடக்கிறார்கள். அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. இந்த வருடத்தை நான் வணங்க நினைத்தால், மக்களைதான் வணங்குவேன். அந்த தாய்களுக்கு நான் மரியாதை செலுத்துவேன்.” ஆகவேதான் துர்க்கை புலம்பெயர் தொழிலாளியானாள்.
ரின்து தாஸின் யோசனையை சிலையாய் வடித்தவர் 41 வயதான பல்லப் போமிக். மேற்கு வங்கத்தின் நதியா மாவட்டத்திலிருந்து அவர் பேசுகையில், “ஆரம்பத்தில் வேறு யோசனைகள் இருந்தன,” என்கிறார். 2019 ஆண்டின் துர்கா பூஜை ஆரவாரம் முடியும் முன்னரே, “பரிஷா சங்க ஒருங்கிணைப்பாளர்கள் இந்த வருட பூஜைக்கான தயாரிப்பு வேலைகளை தொடங்கி விட்டனர். ஆனால் பிறகு நேர்ந்த கோவிட் 19 தொற்று 2020ம் வருடம் மிக வித்தியாசமாக இருக்கப் போகிறது என்பதை உணர்த்தியது. ஆகவே பழையத் திட்டங்களை சங்கம் கைவிட வேண்டி வந்தது.” புதிய திட்டங்கள் ஊரடங்கையும் தொழிலாளர் துயரங்களையும் சார்ந்து உருவாக்கப்பட்டன.
போமிக் சொல்கையில், “துர்க்கை சிலையை அவளின் குழந்தைகள் மற்றும் மகிஷாசுராவுடன் நான் உருவாக்கியபோது, பிற கலைஞர்கள் பந்தலின் மற்ற அம்சங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர். பரிஷா சங்கத்தின் கலை இயக்குநரான ரின்து தாஸ் கண்காட்சியை மேற்பார்வையிட்டார்,” எனக் கூறினார். நாட்டின் பொருளாதாரச் சூழல் சீரழிந்து கொண்டிருந்ததால், பூஜை கமிட்டிகளும் பாதிப்புக்குள்ளாயின. “பரிஷா சங்கம் அதன் நிதியை பாதியாக குறைக்க வேண்டியிருந்தது. ஆரம்பக்கட்டத் திட்டங்களை செய்ய முடியாமல் போனதால், துர்க்கையை புலம்பெயர் தாயாக சித்தரிக்கும் யோசனையுடன் ரின்து வந்தார். அதை ஆலோசித்தபிறகு நான் சிலை வடிக்கத் தொடங்கிவிட்டேன். இந்த மொத்த பந்தலும் கூட்டுழைப்பின் விளைவு என சொல்லலாம்,” என்றார்.
தொடர்ந்து போமிக், “பசியால் தவிக்கும் குழந்தைகளுடன் சிரமப்படும் துர்க்கையை உருவாக்கினேன்,” என்றார். தாஸை போல் அவரும் பலவித, “தாய்கள் மற்றும் குழந்தைகள் படங்களை” பார்த்திருந்தார். கிராமங்களில் இருந்த வீடுகளை நோக்கிய நீண்ட நடைகளையும் பார்த்திருந்தார். கிராமத்து டவுனில் இருக்கும் ஓவியராக அவராலும், அவரைச் சுற்றியிருந்த தாய்களின் துயரங்களை மறக்க முடியவில்லை. “நதியா மாவட்டத்தில் இருக்கும் என் சொந்த ஊரான கிருஷ்ணா நகரில் வைத்து என் வேலையை முடிக்க மூன்று மாதங்களானது. அங்கிருந்து பரிஷா சங்கத்துக்கு சிலை கொண்டு செல்லப்பட்டது,” என்கிறார் போமிக். கொல்கத்தாவின் அரசு கலைக் கல்லூரியில் படித்தபோது பிரபல ஓவியரான பிகாஷ் பட்டாசார்ஜியின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். அவரின் துர்க்கை சிலைக்கு பிகாஷ் பட்டாசார்ஜியின் ஓவியமான தர்பமாயிதான் தூண்டுதலாக இருந்தது.
பந்தலின் கருப்பொருள் வெகுமக்களிடம் அதிக பாராட்டை பெற்றது. “இந்த பந்தல் எங்களை பற்றியது,” என ஒரு தொழிலாளர் என்னிடம் குறிப்பிட்டார். துர்க்கையை புலம்பெயர் தொழிலாளியாக காண்பித்ததற்கு கண்டனம் தெரிவித்து இணையத்தில் பல விமர்சனங்கள் வந்தன. ஒருங்கிணைப்பு கமிட்டியை சேர்ந்த ஒருவர் சொல்கையில், “இந்த கடவுள் எல்லாருக்குமான தாய்,” என்றார்.
விமர்சகர்களை பற்றி பல்லப் போமிக் சொல்கையில், “வங்கத்தை சேர்ந்த சிற்பிகளும் ஓவியர்களும் கலைஞர்களும் துர்க்கையை எப்போதும் அவர்களை சுற்றி இருக்கும் பெண்களின் பிரதிபலிப்பாகவே பார்க்கின்றனர்,” என்றார்.
கட்டுரைக்கு உதவிய ஸ்மிதா கடோருக்கும் சிஞ்சிதா மஜிக்கும் நன்றி.
தமிழில்: ராஜசங்கீதன்