அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. எனது வீட்டிற்கு வெளியே கருப்பு நிறக் குடையைப் பிடித்தபடி சின்னா பீடி புகைத்து கொண்டிருந்தார். குடையிலிருந்து மழை அருவியைப் போல தரையில் கொட்டியது. அவரது முகம் தெளிவாகத் தெரியவில்லை.
“வாங்க சின்னா, ஏன் மழையில் நிற்கிறீர்கள்?”
அவர் வேகமாக மூன்று இழு இழுத்துவிட்டு பீடியை கீழே போட்டார். எனது வீட்டு முற்றத்தில் அமர்ந்து கொண்டு குடையை மடக்கினார். அவரது கண்கள் சிவந்திருந்தன. புகைப்பதால் ஏற்பட்டிருக்கலாம். இருமியபடி என் கண்களைப் பார்த்து கேட்டார், “மக்களை வீட்டிற்கு திரும்பிச் செல்ல அவர்கள் அனுமதிக்கிறார்களா?“
“இல்லை சின்னா, திரும்பிச் செல்ல மாவட்ட ஆட்சியரிடம் நாம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.”
“அப்படியா?” என்று இருமியபடி கேட்டார்.
“ஆமாம், ஏற்கனவே ஒருமுறை ரயில் மோதி 16 புலம் பெயர் தொழிலாளர்கள் இறந்துவிட்டனர்.”
நான் எதுவும் பேசாதபோதும் ஏதோ சொன்னதுபோல, சின்னா என் கண்களை உற்று நோக்கினார்.
கீழே குனிந்தபடி அவர் சொன்னார், “வேலை தேடி 65 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு என் தந்தையுடன் என் பாட்டி வந்த கதை நினைவிற்கு வருகிறது.”
“அவள் கிராமத்தைவிட்டு வெளியே செல்லவே அச்சப்படுவாள், ஆனால் அனைத்தையும் கடந்து வந்தாள். அவள் எங்களிடம் மகிழ்ச்சியான கதைகள், நகைப்பான சம்பவங்களை மட்டுமே கூறுவாள். அவள் எவ்வளவு சிரமங்களை சந்தித்திருப்பாள் என்பதை இப்போதுதான் உணர முடிகிறது. அவள் எப்போதும் என் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கவே விரும்புவாள்.”
மழை இன்னும் தீவிரமடைந்தது. வெள்ளம் பெருக்கெடுத்த சாலைகளில் ஆம்புலன்ஸ் சீறி பாய்ந்தது. “அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும்” என்றார் சின்னா.



