இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும் , புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
புலப்படும்
வேலை, புலப்படாத பெண்கள்
அந்தப்பெண் ஒரு மலைச்சரிவுகளில் ஏறியிறங்கி கஷ்டப்பட்டு நடந்து வருகிறார். ஒரு பெருஞ்சுமை அவரது முகத்தை மறைக்கிறது. வெளியில் தெரிவது வேலை மட்டுமே, அதற்கு உள்ளே இருக்கும் பெண்களின் முகம் யாருக்கும் தெரிவதில்லை. மற்றொரு நாளின் தொழிலாளர் கண்காணிப்பு பயணத்தில் இந்த நிலமற்ற பெண்ணை ஒரிசாவின் மால்கன்கிரியில் சந்தித்தபோது கிடைத்த அனுபவங்கள். தண்ணீர் எடுப்பது, விறகு சேகரிப்பது மற்றும் கால்நடை தீவணங்கள் எடுத்து வருவது என்ற 3 வேலைக்கே பெண்கள் தங்கள் வாழ்நாளின் மூன்றில் ஒரு பகுதியை செலவிடுகிறார்கள். நாட்டின் பல இடங்களில் பெண்கள் நாளொன்றுக்கு 7 மணி நேரம் தங்கள் குடும்பத்தினருக்கு தண்ணீர் எடுத்துவரவும், விறகுகள் சேகரிக்கவும் செலவிடுகிறார்கள். கால்நடை தீவணங்களும் சேகரிப்பதற்கு நீண்ட நேரம் செலவாகும். கிராமப்புற இந்தியாவில் உள்ள பல மில்லியன் பெண்கள் இந்த மூன்றையும் சேகரிப்பதற்கு ஒவ்வொரு நாளும் பல கிலோ மீட்டர் தொலைவுகள் அலைந்து திரிகிறார்கள்.
அவை பெருஞ்சுமையாக உள்ளன. அந்த ஆதிவாசி பெண்மணியும் மால்கன்கிரியின் சறுக்கல்களில் கிட்டத்தட்ட 30 கிலோ விறகை அவரது தலையில் சுமந்து மெதுவாக நடந்து வருகிறார். அவர் தனது குடியிருப்பை அடைவதற்கு இன்னும் 3 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. பெரும்பாலான பெண்கள் இதே அளவோ அல்லது இதைவிட அதிகளவு தொலைவோ தினமும் களைப்புடன் தங்கள் தண்ணீர் உள்ளிட்ட பிற தேவைகளுக்காக நடந்து செல்கிறார்கள்.
மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபுவாவில் அடுக்கி வைக்கப்பட்ட மரக்கட்டைகளுக்கு மேலே நின்றுகொண்டிருக்கும் பெண்மணி சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் இருந்து நீர் இறைப்பதற்கு முயற்சி செய்கிறார். அந்த மரக்கட்டைகள் கிணற்றின் மேலே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மண் மற்றும் குப்பைகள் கிணற்றுக்குள் சென்றுவிடாத வண்ணம் பாதுகாப்பதற்காக அவ்வாறு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவர் தடுமாறி விழுந்தால், 20 அடி கிணற்றுக்குள் விழ வேண்டும். பக்கவாட்டில் விழுந்தால் அடுக்கிவைக்கப்பட்ட மரக்கட்டைகள் அவரது காலை காயப்படுத்தும்.
காடுகள் அழிக்கப்பட்ட இடங்கள் அல்லது தண்ணீர் பற்றாக்குறையான இடங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் நடக்க வேண்டிய தொலைவு மிக நீண்டதாக உள்ளது. எனவே பெண்கள் ஒரே நடையில் அதிக சுமையை சுமக்க முயற்சிக்கின்றனர்.
இவையெல்லாம் மிகக்கடினமான வேலைகள். பல மில்லியன் மக்கள் கிராமப்பொது இடங்களை பயன்படுத்துவதை இழந்துள்ளார்கள். அங்கெல்லாம் பிரச்னைகள் இன்னும் மோசமாக உள்ளது. நாடு முழுவதும் கிராமத்தின் பொது இடங்கள் அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டன. இதனால், ஏழை மக்கள் குறிப்பாக விவசாயத் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல காலமாக பொது நிலங்களே அவர்கள் பயன்படுத்தும் அனைத்துக்கும் பெரும் பங்களித்தன. பொது இடங்களை இழப்பதென்பது மற்ற எல்லாவற்றையும்விட, குளங்கள், நடைபாதை, மேய்ச்சல் நிலம், கால்நடை தீவணம் விளையும் நிலம் மற்றும் கால்நடைகளுக்கான தண்ணீர் வசதி ஆகியவற்றை இழப்பதாகும். மரம், செடி, கொடிகளை இழப்பது. அதிலிருந்துதான் அவர்களுக்கு பலன் கிடைத்து வந்தது.
பொதுத்துறைகளை தனியார்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்குவது ஏழை ஆண், பெண் இருவரையும் ஒரே மாதிரியாக பாதிக்கிறது. ஆனால், முக்கியமாக பெண்கள்தான் பொதுப்பயன்பாட்டில் இருந்து தேவையான பொருட்களை சேகரிக்கிறார்கள். தலித்கள் (ஜாதிய முறையில் தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்) மற்றும் ஒடுக்கப்பட்ட குழுக்களின் நிலமற்ற தொழிலாளர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஹரியானா போன்ற மாநிலங்களில் உயர்சாதியினர் ஆளும் ஊராட்சிகளில், பொது இடங்களை தொழிற்சாலைகளுக்கும், உணவகங்களுக்கும், தண்ணீர் நிறுவனங்களுக்கும், சொகுசு பண்ணை இல்லங்களுக்கும், காலனி வீடுகள் கட்டுவதற்கு குத்தகைக்கு விட்டுவிடுகிறார்கள்.
டிராக்டர்கள் மட்டுமின்றி அறுவடை இயந்திரங்களின் பயன்பாடும் அதிகரித்துவிட்ட நிலையில், நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு குறைந்தளவே தொழிலாளர்களே தேவைப்படுகிறார்கள். எனவே ஏழை தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த நிலங்களை விற்க வேண்டும் என எண்ணுகிறார்கள். ஏழை மக்கள் அவற்றை விற்பதை எதிர்க்கும்போது, நிலத்தின் சொந்தக்காரர்கள் ஜாதி மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படையில் புறக்கணிக்கின்றனர். பொதுப்பயன்பாட்டிற்கான நிலம் குறைவது மற்றும் புறக்கணிப்பதன் அர்த்தம் பல இடங்களில் பெண்கள் திறந்தவெளி கழிப்பிட வசதிகள் கூட குறைந்துவிட்டது. இது தற்போது பெரும்பாலான பெண்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.
விறகு, கால்நடை தீவணம் மற்றும் தண்ணீர் ஆகியவை எடுத்துவருவதே மில்லியன் கணக்கான வீடுகளின் அன்றாட பணியாக உள்ளது. ஆனால், அதற்காக அவர்கள் ஆரோக்கியத்தை இழக்க நேரிடுகிறது..
தமிழில்: பிரியதர்சினி. R.