சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் காலையில் வெர்சோவா படகுத்துறையில் கழிமுகத்தின் விளிம்பில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்திருந்த ராம்ஜிபாயிடம் அவர் என்ன செய்கிறார் என்று நான் கேட்டேன். "கால விரயம்" என்று அவர் பதில் கூறினார். "இதை நான் வீட்டுக்கு எடுத்துச் சென்று சாப்பிடுவேன்", என்று அவர் பிடித்து வைத்திருந்த ஒரு வகையான கெளுத்தி மீனை காண்பித்துக் கூறினார். மற்ற மீனவர்கள் முந்தைய நாள் இரவில் அவர்கள் கழிமுகத்தின் கரையில் வீசிச் சென்றிருந்த கரைவலைகளை சுத்தம் செய்து கொண்டிருப்பதை நான் கண்டேன் - அவர்கள் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்களை பிடித்திருந்தனர், ஆனால் அதில் மீன்களே இல்லை.

வடக்கு மும்பையின் கே மேற்கு வார்டில் உள்ள மீன்பிடி கிராமமான வெர்சோவா கோலிவாடாவில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பகவான் நாம்தேவ் பான்ஜி, "இன்று, காதியில் (கழிமுகத்தில்) மீன் பிடித்தல் என்பது சாத்தியமில்லை", என்று கூறுகிறார். "நாங்கள் இளமையாக இருந்த போது, இங்குள்ள கடற்கரை மொரீசியஸ் கடற்கரையை போன்று இருந்தது. நீங்கள் ஒரு நாணயத்தை கடலுக்குள் தூக்கி எறிந்தால் அதை நீங்கள் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும்... தண்ணீர் எவ்வளவு சுத்தமாக இருந்தது", என்று கூறுகிறார்.

பகவானின் அண்டை வீட்டில் இருப்பவர்களின் வலைகளில் சில மீன்கள் சிக்கின - ஆனால் அவை மிகச் சிறியதாக இருந்தன - இப்போதெல்லாம் கடலில் வலைகள் மிகுந்த ஆழத்தில் வீசப்படுகின்றன. "முன்னர் எல்லாம், நாங்கள் பெரிய வாவல் மீன்களை பெற்றோம், ஆனால் இப்போது நாங்கள் சிறிய மீன்களை தான் பெறுகிறோம். இது எங்களது வியாபாரத்தில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது", என்று பகவானின் மருமகளான மற்றும் கடந்த 25 வருடங்களாக மீன் விற்று வருபவருமான, 48 வயதாகும் பிரியா பான்ஜி கூறுகிறார்.

கிட்டத்தட்ட இங்கு உள்ள அனைவருமே - கோலிவாடாவில் 1072 குடும்பங்கள் அல்லது 4,943 பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர் (2010 ஆம் ஆண்டு கடல் மீன் வள கணக்கெடுப்பின்படி) - இவர்கள் அனைவரிடமுமே அழிந்த அல்லது குறைந்து வரும் மீன் வரத்தினைப் பற்றி கூறுவதற்கான கதைகள் இருக்கின்றன. மேலும் அவர்கள் கூறும் காரணங்கள் உள்ளூரின் மாசுபாட்டில் இருந்து உலக அளவிலான வெப்பமயமாதல் வரை பரந்து விரிந்திருக்கிறது. இவை இரண்டும் இணைந்து பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை இந்நகரின் கரையில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

Bhagwan Bhanji in a yard where trawlers are repaired, at the southern end of Versova Koliwada
PHOTO • Subuhi Jiwani

வெர்சோவா கோலிவாடாவின் தெற்கு முனையில் உள்ள இழுவை படகினை பழுது பார்க்கும் ஒரு படகு நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறார் பகவான் பான்ஜி

கடற்கரைக்கு அருகில் மலாடு கழிமுகத்தில் (அது வெர்சோவாவின் கடலில் சென்று சேர்கிறது) மன்னா, செவ்வா மற்றும் பல மீன்கள் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், இந்த கோலிவாடாவில் வசிக்கும் மக்களால் பிடிக்கப்பட்டது ஆனால் இன்றோ அவை மனிதர்களின் தலையீட்டால் அழிக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.

வெர்சோவா மற்றும் மலாடின் மேற்கில் உள்ள இரண்டு மாநகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்தும், தொழிற்சாலைகளிலிருந்து வரும் கசடுகள் மற்றும் கழிவுகள் மற்றும் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள இடங்களிலிருந்தும் பாயும் சுமார் 12 நலாக்கள் (திறந்த வெளி சாக்கடைகள்), பகவானின் நினைவுகளில் சுத்தமாக இருக்கும் கழிமுகத்தில் கலக்கின்றன. "இப்போது இக்கழிமுகத்தில் ஒரு சில கடல் வாழ் உயிரினங்கள் கூட இல்லை. இந்த மாசுபாடுகள் கடல் எல்லையில் இருந்து 20 நாட்டிக்கல் மைல் தூரம் வரை மாசுபாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. எல்லோருடைய கழிவுநீர், அழுக்குகள் மற்றும் குப்பைகள் கடலில் கலப்பதன் காரணமாக, ஒரு காலத்தில் தெளிவாக இருந்த கழிமுகம் இப்போது சாக்கடையாக மாறி இருக்கிறது", என்று பகவான் கூறுகிறார் மேலும் அவர் கோலிகளின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் உள்ளூர் அரசியல் பற்றிய அவருடைய அறிவுக்காக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் நன்கு அறியப்படுகிறார். சில வருடங்களுக்கு முன்பு வரை அவர் கடற்கரையில் சில பணிகளை நிர்வகித்து வந்தார் - மீன்களை உலர்த்துதல், வலைகள் தயாரித்தல், அவரது மறைந்த சகோதரரின் இரண்டு மீன்பிடி படகுகளுக்கு பழுதுபார்ப்பினை மேற்பார்வை செய்தல் ஆகிய பணிகளை செய்து வந்தார்.

இந்த கலங்கலான நீர் என்பது கழிமுகம் மற்றும் கரையோரத்தில் குறைந்த அளவிலான கரைந்த ஆக்ஸிஜன் இருப்பதையே குறிக்கிறது - மேலும் இத்துடன் அதிக எண்ணிக்கையிலான மல பாக்டீரியாவும் இருக்கிறது - அதனால் இதில் மீன்களால் உயிர் வாழ முடியவில்லை. தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NEERI) விஞ்ஞானிகள் 2010 ஆம் ஆண்டு எழுதிய ஒரு ஆய்வறிக்கை, "கீழ் ஓத காலங்களில் கழிமுகத்தில் கரைந்த ஆக்ஸிஜன் இல்லை என்பதால் மலாடு கழிமுகத்தின் நிலை மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது... உயர் ஓத காலங்களில் ஒப்பீட்டளவில் அந்நிலை சற்று மேம்பட்டு இருக்கிறது...", என்று தெரிவிக்கிறது.

சமுத்திரத்தின் மாசுபாடு பருவநிலை மாற்றத்துடன் ஒருங்கிணைந்து நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. அதிகரித்து வரும் வளர்ச்சி நடவடிக்கைகள், கடலோர மற்றும் கடல் மாசுபாடு (அதில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை நிலத்தை அடிப்படையாகக் கொண்ட மூலங்களிலிருந்து உருவாகின்றன) மற்றும் கடல் நீரோட்டங்களில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவை கடலில் இறந்த மண்டலங்கள் கரைந்த ஆக்ஸிஜன் இல்லாத பகுதிகள் உருவாவதை துரிதப்படுத்தும் என்று ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் 2008 ஆம் ஆண்டு உயிரற்ற நீர்: பருவநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு ஆகியவை ஒன்றிணைதல், உலக மீன்பிடி தளங்களில் அதிக அளவில் அறுவடை மற்றும் அதிகளவிலான ஆக்கிரமிப்பு, என்ற தலைப்பில் வெளியிட்ட புத்தகம், "விரைவான கட்டுமானங்களுக்காக கடற்கரைை ஓரங்களில் சதுப்பு நில காடுகள் மற்றும் பிற வாழ்விடங்களைை அழிப்பது மாசுபாட்டின் தாக்கத்தை மேலும் அதிகப்படுத்துகிறது...", என்று கூறுகிறது.

Left: Struggling against a changing tide – fishermen at work at the koliwada. Right: With the fish all but gone from Malad creek and the nearby shorelines, the fishermen of Versova Koliwada have been forced to go deeper into the sea
PHOTO • Subuhi Jiwani
Left: Struggling against a changing tide – fishermen at work at the koliwada. Right: With the fish all but gone from Malad creek and the nearby shorelines, the fishermen of Versova Koliwada have been forced to go deeper into the sea
PHOTO • Subuhi Jiwani

இடது: மாறி வரும் ஓதத்திற்கு எதிராக போராடும் கோலிவாடாவில் பணியாற்றி வரும் மீனவர்கள். வலது: மலாடு கழிமுகம் மற்றும் அதன் அருகில் உள்ள கடற்கரையில் இருந்த மீன்கள் அழிந்துவிட்டதால் வெர்சோவா கோலிவாடாவின் மீனவர்கள் ஆழமான கடலுக்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்

கடந்த பல ஆண்டுகளாக, மும்பையிலும், சாலைகள், கட்டிடங்கள் மற்றும் பிற திட்டங்களுக்காக பரந்து விரிந்திருந்த சதுப்புநிலக் காடுகள் அகற்றப்பட்டுவிட்டன. சதுப்புநிலக் காடுகள் மீன்களுக்கு மிக முக்கியமான முட்டையிடும் களமாகும். இந்திய கடல்சார் அறிவியல் இதழில் 2005 ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு கட்டுரை, "சதுப்புநிலக் காடுகள் கடலோர மற்றும் கடல் உயிரினங்களை ஆதரிப்பது மட்டுமல்லாமல், கடற்கரையை அரிப்புகளில் இருந்தும் பாதுகாக்கின்றன, மேலும் கழிமுகம் மற்றும் கடல் உயிரினங்களின் இனப்பெருக்க மண்டலமாகவும், உணவு மற்றும் நாற்றாங்கால் மைதானமாகவும் செயல்படுகின்றன", என்று தெரிவிக்கிறது. 1990 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை உள்ள 11 வருடங்களில் மும்பை புறநகர் பகுதியில் இருந்த மொத்தம் 36.54 சதுர கிலோமீட்டர் சதுப்பு நில காடுகள் அழிந்துவிட்டன என்றும் அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.

"மீன்கள் (சதுப்புநிலக் காடுகளில்) முட்டை இடுவதற்காக கடற்கரைக்கு வரும், ஆனால் இப்போது அது நடக்க சாத்தியம் இல்லை", என்று பகவான் கூறுகிறார். "நம்மால் எவ்வளவு சதுப்பு நிலங்களை அழிக்க முடியுமோ அவ்வளவு சதுப்பு நிலங்களை அழித்து விட்டோம். எஞ்சியிருப்பது ஒரு சில சதுப்புநிலக் காடுகளே. லோகந்துவாலா மற்றும் ஆதர்ஷ் நகர் போன்ற கடற்கரையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் இன்று கட்டிடங்களாக இருக்கும் இடங்கள் அனைத்தும் முன்பு சதுப்புநிலக் காடுகளாக இருந்தவை", என்று அவர் கூறுகிறார்.

இதன் விளைவாக, காலப் போக்கில், மலாடு கழிமுகம் மற்றும் அதன் அருகில் உள்ள கடற்கரையில் இருந்த மீன்கள் அழிந்துவிட்டதால், வெர்சோவா கோலிவாடாவின் மீனவர்கள் ஆழமான கடலுக்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ஆனால், ஆழ்கடலிலும் அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை, சூறாவளிப் புயல் மற்றும் இழுவை படகினை கொண்டு அதிக அளவில் மீன்பிடித்தல் ஆகியவை தங்கள் வணிகத்தை பாதிக்கின்றன என்று தெரிவிக்கிறார்.

"முன்பெல்லாம், கடலோர சூழலியல் மிகவும் வளமாக இருந்ததால் (கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல்) ஆழ்கடலில் மீன்பிடிக்க அவர்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை", என்று வெர்சோவா கோலிவாடாவில், கடலோர மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை ஆய்வு செய்யும் கட்டடக் கலைஞரின் குழுவான பம்பாய் 61 ஐச் சேர்ந்த கெட்டாகி பத்கோன்கர் கூறுகிறார். "ஆழ்கடல் மீன் பிடித்தல் என்பது மீன் பிடித்தலை பொருளாதார ரீதியாக சாத்தியமற்றதாக ஆக்கியுள்ளது ஏனெனில் அதற்கு பெரிய படகுகள், ஒரு குழு மற்றும் பலவற்றில் அதிக முதலீடு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. மேலும் மீனவர்கள் ஒரு நல்ல மீன்பிடிப்புடன்  தான் திரும்பி வருவார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது", என்று கூறுகிறார்.

Photos taken by Dinesh Dhanga, a Versova Koliwada fisherman, on August 3, 2019, when boats were thrashed by big waves. The yellow-ish sand is the silt from the creek that fishermen dredge out during the monsoon months, so that boats can move more easily towards the sea. The silt settles on the creek floor because of the waste flowing into it from nallahs and sewage treatment facilities
PHOTO • Dinesh Dhanga
Photos taken by Dinesh Dhanga, a Versova Koliwada fisherman, on August 3, 2019, when boats were thrashed by big waves. The yellow-ish sand is the silt from the creek that fishermen dredge out during the monsoon months, so that boats can move more easily towards the sea. The silt settles on the creek floor because of the waste flowing into it from nallahs and sewage treatment facilities
PHOTO • Dinesh Dhanga

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி அன்று, பெரிய அலைகளால் படகுகள் தூக்கி வீசப்பட்ட போது, வெர்சோவா கோலிவாடாவினைச் சேர்ந்த மீனவர் தினேஷ் தங்கா எடுத்த புகைப்படங்கள். அந்த மஞ்சள் நிற மணல் மழைக்காலங்களில் மீனவர்கள் கழிமுகத்தில் இருந்து வெளியேறும் போது வரும் வணடல் மண், இதனால் படகுகள் கடலை நோக்கி எளிதாக செல்ல முடியும் திறந்த வெளி சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வரும் கழிவுகள் அதனுள் பாய்வதால், கழிமுகத்திலேயே அந்த வண்டல் மண் இருந்து விடுகிறது

அரபிக்கடல் வெப்பமயமாவதன் காரணமாகவும் ஆழ்கடல் மீன்பிடித்தல் நிச்சயமற்றதாக இருக்கிறது - அக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 1992 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்டுக்கு இடையில் உள்ள ஒரு தசாப்தத்திற்கு சராசரியாக 0.13 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது என்று புவியியல் ஆய்வு கட்டுரை இதழில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது. இது கடல்வாழ் உயிரினங்களை பாதித்துள்ளது, என்று மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (CMFRI) மும்பை மையத்தில் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் டாக்டர். வினய் தேஷ்முக் கூறுகிறார். "(இந்தியாவின்) தெற்கு பகுதியில் உள்ள முக்கிய மீன்களில் ஒன்றான மத்தி மீன் வடக்கு கடற்கரையோரம் நகரத் துவங்கி இருக்கிறது. மேலும் தெற்கில் இருக்கும் மற்றொரு மீனான, கானாங்கெளுத்தி மீன் (20 மீட்டருக்கும் கீழே) ஆழமான நீருக்குள் செல்லத் துவங்கி இருக்கிறது". வடக்கு அரேபியக் கடல் நீரும் ஆழ்கடல் நீரும் ஒப்பீட்டளவில் குளிர்ச்சியாக இருக்கின்றன.

மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் கடல் நீரை வெப்பமயமாக்குவது என்பது ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட உலகளாவிய பாங்கின் ஒரு பகுதியாகும் - 1971 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகப் பெருங்கடல்களின் மேற்பகுதியில் 75 மீட்டர் வரை, சராசரியாக ஒரு தசாப்தத்திற்கு 0.09 முதல் 0.13 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது என்று, 2014 ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசு குழு (IPCC) மதிப்பிட்டுள்ளது.

இந்த உயரும் கடல் வெப்பநிலை சில மீன்களின் உயிரியலையே மாற்றியுள்ளது - இது ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் "மாற்ற முடியாத மாற்றம்" என்று டாக்டர் தேஷ்முக் கூறுகிறார். "நீர் ஒப்பீட்டளவில் குளிர்ச்சியாகவும், வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்த போது மீன்கள் தாமதமாக முதிர்ச்சி அடைந்தன. நீர் வெப்பம் அடைவதால் மீன்கள் ஆரம்ப காலத்திலேயே முதிர்ச்சி அடைய ஆரம்பித்தன. அதாவது, அதன் முட்டைகள் மற்றும் விந்தணுக்கள் இளமைக் காலத்திலேயே உற்பத்தியாக ஆரம்பித்துவிட்டது. சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், முதிர்ச்சி அடைந்த வாவல் மீன் சுமார் 350 முதல் 500 கிராம் எடை வரை இருந்தது, ஆனால் இன்று அது வெறும் 200 முதல் 250 கிராம் அளவிற்கே இருக்கிறது - இப்படி அளவு சுருங்கி வருவதற்கு காரணம் வெப்பமயமாதல் மற்றும் பிற சக்திகளே என்று  டாக்டர் தேஷ்முக் மற்றும் உள்ளூர் மீனவர்கள் கணிக்கின்றனர்.

வெப்பமயமாதலால், 350 முதல் 500 கிராம் எடை வரை கிடைத்த வாவல் மீன், இன்று வெறும் 200 முதல் 250 கிராம் அளவு தான் கிடைக்கிறது

காணொலியில் காண்க: கழிவுகளால் நிறைந்திருக்கும் கழிமுகத்தில் நடைபெறும் மீன் பிடித்தல்

ஆனால், டாக்டர் தேஷ்முக்கின் பார்வையில், அதிகப்படியான மீன்பிடித்தலே, இவற்றில் பெரிய குற்றவாளியாக இருக்கிறது. படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது மற்றும் இழுவைப் படகுகள் (சில கோலிவாடாவில் இருக்கும் மக்களுக்கு சொந்தமானது) மற்றும் பிற பெரிய படகுகள் கடலில் செலவழிக்கும் நேரமும் அதிகரித்து இருக்கிறது. 2000 ஆம் ஆண்டில் இந்தப் படகுகள் 6 முதல் 8 நாட்கள் கடலில் கழித்தது; அது 10 முதல் 15 நாட்கள் ஆக உயர்ந்தது, இப்போது அது 16 முதல் 20 நாட்களாக இருக்கிறது, என்று அவர் குறிப்பிடுகிறார். இது கடலில் உள்ள மீன்களின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகமாகிவிட்டது. மேலும் இழுவைப்படகுகளைப் பயன்படுத்துவது கடல் தளத்தின் சூழலியலை சீரழித்துவிட்டது, அது தரையை (கடல் தளத்தை) சுரண்டுகிறது, தாவரங்களை வேருடன் பிடுங்குறது மற்றும் உயிரினங்களை இயற்கையாக வளரவும் அவை அனுமதிப்பதில்லை", என்று அவர் கூறுகிறார்.

2003 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் மொத்த மீன்பிடிப்பு 4.5 லட்சம் டன்னாக இருந்தது இதுவே 1950 முதல் ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றில் மிக அதிகமான அளவு என்று டாக்டர் தேஷ்முக் கூறுகிறார். அதிகப்படியான மீன்பிடித்தலால் அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் மீன்பிடிப்பு குறைந்து கொண்டே வந்தது - 2017 ஆம் ஆண்டில் அது 3.81 லட்சம் டன்னாக இருந்தது.

அதிக அறுவடை மற்றும் கீழ் இழுவை ஆகியவை மீன்களின் வாழ்விடங்களை அழித்து மற்றும் கடல் உயிரினப் பன்மை வள மையத்தின் முழு உற்பத்தியையும் அச்சுறுத்துகிறது இதன் மூலம் அவை பருவநிலை மாற்றத்தால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவையாக மாற்றப்படுகிறது", என்று உயிரற்ற நீர் புத்தகம் கூறுகிறது. மேலும் அவை மனித நடவடிக்கைகளின் தாக்கத்தை (மாசுபாடு மற்றும் சதுப்பு நிலக் காடுகளின் அழிவு உட்பட), கடல் மட்ட உயர்வு மற்றும் அதிகமாக புயல்கள் உருவாதல் மற்றும் புயல்களின் தீவிரத்தன்மை அதிகரித்தல் ஆகியவை இத்தாக்கத்தை மேலும் அதிகப்படுத்தும் என்றும் கூறுகிறது.

இந்த இரண்டு நிலைகளுமே அரேபியக் கடலில் நிலவுகின்றன - மேலும் இதன் மூலம் வெர்சோவா கோலிவாடாவிலும் இந்நிலை நீடிக்கிறது. "...அரேபியக் கடலில் ஏற்படும் தாமதமான பருவகால மிகக் கடுமையான சூறாவளி புயல்கள் (ECSC's) மானுடவியல் காரணங்களால் கட்டாயமாக்கப்பட்டு வருக்கிறது என்று 2017 ஆம் ஆண்டு இயற்கை பருவநிலை மாற்றம் என்ற இதழில் வெளியான கட்டுரை ஒன்று கூறுகிறது.

Extensive land reclamation and construction along the shore have decimated mangroves, altered water patterns and severely impacted Mumbai's fishing communities
PHOTO • Subuhi Jiwani

கரையில் இருக்கும் அதிகப்படியான நில ஆக்கிரமிப்பு மற்றும் கட்டுமானங்கள், சதுப்பு நிலக் காடுகளை அழித்ததால், நீர் வழித்தடங்கள் மாறி மேலும் மும்பையின் மீன்பிடி சமூகங்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது

இந்தப் புயல்கள் மீன்பிடி சமூகங்களையே மிகவும் அதிகமாக பாதிக்கின்றது என்று பம்பாயின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பருவநிலை பற்றிய ஆய்வுகள் துறையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் D. பார்த்தசாரதி கூறுகிறார். மீன் பிடி வரத்து குறைந்து வருவதால், மீனவர்கள் ஆழ் ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் அவர்களின் படகுகள் (சில)  மிகவும் சிறியவை, அவை ஆழ்கடலுக்கு பொருத்தமானவை அல்ல. எனவே புயல்கள் மற்றும் சூறாவளிகள் வரும் போது, அவை அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றன. மீன் பிடித்தல் மிகவும் நிச்சயமற்றதாகவும் மற்றும் மிகவும் ஆபத்தானதாகும் மாறி வருகிறது", என்றும் கூறினார்.

இதனோடு இணைந்திருக்கும் மற்றொரு பிரச்சனை கடல் நீர் மட்டம் உயர்வது. இந்திய கடற்கரையில் கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் சுமார் 8.5 சென்டி மீட்டர் உயர்ந்துள்ளது அல்லது ஆண்டுக்கு சுமார் 1.7 மில்லி மீட்டர் உயர்ந்து வருகிறது (2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாநிலங்களவையில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அரசாங்கம் அளித்த பதிலின் படி). இதைவிட அதிகமாக கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டுக்கும் 3 முதல் 3.5 மில்லிமீட்டர் வரை உலக அளவில் கடல் மட்டங்கள் உயர்ந்து வருகின்றன என்று IPCC யின் தரவு மற்றும் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தேசிய அறிவியல் கழகத்தின் நடைமுறை (USA) என்ற தலைப்பில் வந்த ஒரு இதழ் ஆகியவையும் இதைக் கூறுகின்றன. இதே விகிதத்தில் சென்றால் உலக அளவில் கடல் நீர் மட்டம் 2100 ஆம் ஆண்டில் 65 சென்டிமீட்டர் அளவிற்கு உயரும் -  ஓதம், ஈர்ப்பு மற்றும் பூமியின் சுழற்சி மற்றும் பல ஆகியவற்றின் சிக்கலான தொடர்புகளைப் பொறுத்து இந்த அளவு பிராந்திய அளவில் மாறுபடும்.

கடல் நீர் மட்டம் உயர்வது, "வெர்சோவாவைப் பொறுத்தவரை அது மிகவும் ஆபத்தானது ஏனெனில் இது கழிமுகத்தின் வாயிலில் அமைந்திருக்கிறது மேலும் மீனவர்கள் தங்களது படகுகளை எங்கு நிறுத்தி இருந்தாலும் புயல் வரும் காலங்களில் அது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்", என்று டாக்டர் தேஷ்முக் எச்சரிக்கைை செய்கிறார்.

வெர்சோவா கோலிவாடா விலுள்ள பலர் இந்த உயரும் கடல் நீர்மட்டத்தை பற்றி அறிந்திருக்கின்றனர். 30 ஆண்டுகளாக மீன் விற்பனை செய்து வரும் ஹர்ஷா ராஜ்ஹான்ஸ் தாப்கே, மீன் பிடிப்பு குறைவாகி விட்டதால் மக்கள் (கட்டுமானக்காரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள்) நாங்கள் வழக்கமாக மீன்களை உலர்த்தும் நிலத்தை ஆக்கிரமித்து அங்கு (மணலின் மீது) வீடுகளைக் கட்டத் துவங்கிவிட்டனர்... இந்த ஆக்கிரமிப்பின் மூலம் கழிமுகத்தின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது மேலும் இதே நிலையை கரை முழுவதிலும் நாம் காணலாம்", என்று கூறுகிறார்.

Harsha Tapke (left), who has been selling fish for 30 years, speaks of the changes she has seen. With her is helper Yashoda Dhangar, from Kurnool district of Andhra Pradesh
PHOTO • Subuhi Jiwani

30 ஆண்டுகளாக மீன் விற்பனை செய்து வரும் ஹர்ஷா தாப்கே (இடது), தான் கண்ட மாற்றங்களைப் பற்றி பேசுகிறார். அவருடன் அவரது உதவியாளரான ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த யசோதா தங்கரும் இருக்கிறார்

மேலும் மிக அதிக கன மழை நகரத்தில் பெய்யும் போது, அழிந்த சதுப்புநிலக் காடுகள், கட்டுமானங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்ட நிலம், கடல் நீர் மட்டம் உயர்தல் மற்றும் பல -  காரணங்களின் ஒருங்கிணைந்த விளைவு  மீன்பிடி சமூகத்தின் மீது மிகப் பெரியதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் அன்று மும்பையில் 204 மில்லிமீட்டர் மழை பெய்தது, ஒரு தசாப்தத்தில் ஆகஸ்ட் மாதத்தில், 24 மணி நேரத்திற்குள் அதிகபட்சமாக பெய்த மழையில் இது மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது - மற்றும் 4.9 மீட்டர் (சுமார் 16 அடி) உயர் ஓதமும் அன்று ஏற்பட்டது. அன்று வெர்சோவா கோழி வாழ்வில் இருந்த பல சிறிய படகுகளை பல தலைகள் சேதப்படுத்தியது மேலும் இந்த மீன்பிடி சமூகம் பெருத்த இழப்பைச் சந்தித்தது.

கோலிவாடாவின் அந்தப் பகுதி (படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடம்) ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறது ஆனால் கடந்த 7 வருடங்களில் கடல் நீர்மட்டம் அந்த நாள் உயர்ந்த அளவிற்கு எப்போதும் உயர்ந்தது இல்லை என்று வெர்சோவா மசேமாரி லாகு நௌகா சங்காதனா என்ற 148 சிறிய படகில் வேலை செய்யும் 250 மீனவர்களை உறுப்பினராகக் கொண்ட அமைப்பின் தலைவரான தினேஷ் தங்கா கூறுகிறார். "புயல் உயர் ஓதத்தின் போது ஏற்பட்டது எனவே கடல் நீர்மட்டம் 2 மடங்கு உயர்ந்தது. சில படகுகள் மூழ்கிவிட்டன, சில படகுகள் உடைந்துவிட்டன. மீனவர்கள் தங்களது வலைகளை இழந்துவிட்டனர் மேலும் சில படகுகளில் என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது". ஒவ்வொரு படகும் 45,000 ரூபாய் பெறுமானம் உள்ளது. ஒவ்வொரு வலையும் 2,500 ரூபாய் பெறுமானம் உள்ளது, என்று தினேஷ் கூறுகிறார்.

இவை அனைத்தும் வெர்சோவாவின் மீன்பிடி சமூகத்தின் வாழ்வாதாரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, "மீன்பிடிப்பில் 65 - 70 சதவீத வித்தியாசத்தை நாங்கள் பார்த்திருக்கிறோம்", என்று கூறுகிறார் பிரியா பான்ஜி. நாங்கள் இப்போது 10 டேக்ரிக்களில் (கூடைகளில்) மீன்களை சந்தைக்கு எடுத்துக் கொண்டு சென்றோம் என்றால், (சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர்) அது 20 கூடைகளாக இருந்தது. இது ஒரு மிகப்பெரிய வித்தியாசம்", என்று அவர் கூறுகிறார்.

மீன்பிடி வரத்தின் அளவு குறைந்து விட்ட நிலையில், மீன்பிடி துறைக்கு அருகில் உள்ள மொத்த சந்தையில் பெண்கள் மீனை வாங்கும் விலை அதிகரித்து இருக்கிறது - அதனால் அவர்களது லாபம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. "முன்னரெல்லாம், நாங்கள் எங்களது மிகப் பெரிய, சுமார் ஒரு அடி நீளம் இருக்கும் வாவல் மீனை 500 ரூபாய்க்கு விற்று வந்தோம். இப்போதெல்லாம் அந்த விலைக்கு நாங்கள் ஆறு அங்குல வாவல் மீன்களையே விற்பனை செய்கிறோம். வாவல் மீனின் அளவு சிறியதாகிக் கொண்டே வருகிறது மேலும் அதன் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது", என்று வாரத்தில் மூன்று நாட்களுக்கு மீன் விற்று நாளொன்றுக்கு 500 - 600 ரூபாய் சம்பாதிக்கும் பிரியா கூறுகிறார்.

Left: Dinesh Dhanga (on the right right) heads an organisation of around 250 fishermen operating small boats; its members include Sunil Kapatil (left) and Rakesh Sukacha (centre). Dinesh and Sunil now have a Ganapati idol-making workshop to supplement their dwindling income from fishing
PHOTO • Subuhi Jiwani
Left: Dinesh Dhanga (on the right right) heads an organisation of around 250 fishermen operating small boats; its members include Sunil Kapatil (left) and Rakesh Sukacha (centre). Dinesh and Sunil now have a Ganapati idol-making workshop to supplement their dwindling income from fishing
PHOTO • Subuhi Jiwani

இடது: தினேஷ் தங்கா (வலதுபுறம் இருப்பவர்) சிறிய படகுகளை இயக்கும் சுமார் 250 மீனவர்களைக் கொண்ட ஒரு அமைப்பின் தலைவராக இருக்கிறார்; அதன் உறுப்பினர்களில் சுனில் கபாதில் (இடது) மற்றும் ராகேஷ் சுக்காசா (நடுவில் இருப்பவர்) ஆகியோரும் அடங்குவர். தினேஷ் மற்றும் சுனில் ஆகியோர் இப்போது மீன்பிடி வருமானம் குறைந்து கொண்டே வருவதால் கூடுதலாக வருமானத்திற்காக கணபதி சிலைகள் தயாரிக்கும் பட்டறை ஒன்றை நடத்தி வருகின்றனர்

குறைந்து வரும் வருமானத்தை சமாளிப்பதற்காக, பல மீன்பிடிக் குடும்பங்கள் பிற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிரியாவின் கணவர் வித்யுத் (அவர் விருப்ப ஓய்வு பெறும் வரை) மத்திய அரசு அலுவலகத்தில் கணக்குத் துறையில் பணியாற்றினார்; பிரியாவின் சகோதரர் கௌதம் ஏர் இந்தியா நிறுவனத்தில் கடை மேலாளராக பணிபுரிந்து வருகிறார், அதே வேளையில் அவரது மனைவி அந்தேரி சந்தையில் மீன்களை விற்று வருகிறார். "இப்போது அவர்கள் அலுவலக வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் (ஏனெனில் மீன் பிடித்தல் இனி சாத்தியமில்லை)", என்று பிரியா கூறுகிறார். "ஆனால் என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது ஏனெனில் நான் இதற்கே பழகியிருக்கிறேன்", என்று கூறுகிறார்.

43 வயதாகும், சுனில் கபாதில், குடும்பத்திற்கு சொந்தமாக ஒரு சிறிய படகு இருக்கிறது, மேலும் அவர் வருமானம் ஈட்ட பிற வழிகளை நாடியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவரது நண்பர் தினேஷ் தங்களுடன் சேர்ந்து கணபதி சிலைகளை தயாரிக்கும் தொழிலைத் துவங்கி இருக்கிறார். "முன்னரெல்லாம், நாங்கள்அருகில் உள்ள பகுதிகளுக்கு  மீன் பிடிப்பதற்காக ஒரு மணி நேரம் பயணம் செய்வோம். ஆனால் இப்போது நாங்கள் 2 - 3 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. நாங்கள் ஒரு நாளுக்கு 2 - 3 பெட்டிகள் மீன் கொண்டு வருவது வழக்கம். ஆனால் இப்போது ஒரு பெட்டியில் மீன் கொண்டு வருவதற்கு கூட மிகவும் சிரமமானதாக இருக்கிறது...", என்று சுனில் கூறுகிறார். சில நேரங்களில் நாங்கள் 1,000 ரூபாய் வரை சம்பாதிப்போம் சில நேரங்களில் 50 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது", என்று கூறுகிறார்.

இன்னும், வெர்சோவா கோலிவாடாவில் பலர் முழு நேர மீனவர்களாகவும், மீன் விற்பனையாளர்களாகவும் இருக்கின்றனர், அவர்கள் உயர்ந்து வரும் கடல் நீர் மட்டம், வெப்பநிலை உயர்வு, அதிகப்படியான மீன்பிடித்தல், மாசுபாடு மற்றும் அழிந்து வரும் சதுப்புநிலக் காடுகள் மற்றும் பலவற்றை எதிர்த்துப் போராடி வருகின்றனர் - இத்துடன் அவர்கள் குறைந்து வரும் மீன் வரத்து மற்றும் சிறிய மீன்கள் ஆகியவற்றையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. 28 வயதாகும் ராகேஷ் சுக்காசா, அவர் தனது குடும்ப வருமானத்திற்கு உதவுவதற்காக பள்ளியில் இருந்து எட்டாம் வகுப்பிலேயே இடை நின்று விட்டார், அவர் இன்னமும் மீன்பிடி தொழிலை மட்டுமே தொடர்ந்து செய்து வரும் நபர்களுள் ஒருவர். எங்களது தாத்தா எங்களிடம் ஒரு கதையைச் சொல்வார்: நீ காட்டில் ஒரு சிங்கத்தை சந்திக்க நேர்ந்தால், அதை நீ எதிர்கொள்ள வேண்டும். நீ ஓடினால் அது உன்னை விழுங்கிவிடும். நீ அதை (எதிர்த்து நின்று) ஜெயித்தால், நீ தான் வலிமையானவன். அதே போல, அவர் சமுத்திரத்தையும் சந்திக்கக் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்", என்று கூறுகிறார்.

இந்தக் கதைக்கு உதவிய நாராயண் கோலி, ஜெய் பட்கவுன்கர், நிகில் ஆனந்த், ஸ்டாலின் தயானந், கிரீஷ் ஜாதர் ஆகியோருக்கு ஆசிரியர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார்.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தால் ஆதரிக்கப்பட்ட, பருவநிலை மாற்றம் பற்றிய நாடு தழுவிய பாரியின் இந்த தகவல் அறிக்கை, சாதாரன மக்களின் குரல்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் அதை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும்.

இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய விருப்பமா? namita@ruralindiaonline.org என்ற முகவரிக்கு CCயுடன் zahra@ruralindiaonline.org என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

தமிழில்: சோனியா போஸ்

Reporter : Subuhi Jiwani

ସୁବୁହି ଜିୱାନି ପିପୁଲ୍ସ ଆର୍କାଇଭ ଅଫ୍ ରୁରାଲ ଇଣ୍ଡିଆରେ ଜଣେ କପି ଏଡିଟର ଭାବେ କାମ କରୁଛନ୍ତି ।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ ସୁବୁହି ଜିୱାନୀ
Editor : Sharmila Joshi

ଶର୍ମିଳା ଯୋଶୀ ପିପୁଲ୍ସ ଆର୍କାଇଭ୍‌ ଅଫ୍‌ ରୁରାଲ ଇଣ୍ଡିଆର ପୂର୍ବତନ କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ସମ୍ପାଦିକା ଏବଂ ଜଣେ ଲେଖିକା ଓ ସାମୟିକ ଶିକ୍ଷୟିତ୍ରୀ

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ ଶର୍ମିଲା ଯୋଶୀ
Series Editors : P. Sainath
psainath@gmail.com

ପି. ସାଇନାଥ, ପିପୁଲ୍ସ ଆର୍କାଇଭ୍ ଅଫ୍ ରୁରାଲ ଇଣ୍ଡିଆର ପ୍ରତିଷ୍ଠାତା ସମ୍ପାଦକ । ସେ ବହୁ ଦଶନ୍ଧି ଧରି ଗ୍ରାମୀଣ ରିପୋର୍ଟର ଭାବେ କାର୍ଯ୍ୟ କରିଛନ୍ତି ଏବଂ ସେ ‘ଏଭ୍ରିବଡି ଲଭସ୍ ଏ ଗୁଡ୍ ଡ୍ରଟ୍’ ଏବଂ ‘ଦ ଲାଷ୍ଟ ହିରୋଜ୍: ଫୁଟ୍ ସୋଲଜର୍ସ ଅଫ୍ ଇଣ୍ଡିଆନ୍ ଫ୍ରିଡମ୍’ ପୁସ୍ତକର ଲେଖକ।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ ପି.ସାଇନାଥ
Series Editors : Sharmila Joshi

ଶର୍ମିଳା ଯୋଶୀ ପିପୁଲ୍ସ ଆର୍କାଇଭ୍‌ ଅଫ୍‌ ରୁରାଲ ଇଣ୍ଡିଆର ପୂର୍ବତନ କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ସମ୍ପାଦିକା ଏବଂ ଜଣେ ଲେଖିକା ଓ ସାମୟିକ ଶିକ୍ଷୟିତ୍ରୀ

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ ଶର୍ମିଲା ଯୋଶୀ
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Soniya Bose