"வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் உங்கள் கணவர் பைத்யநாத் 13 மாதங்கள் சிறையில் இருந்தபோது உங்களுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்குமல்லவா?" என நான் புருலியாவில் பபானி மஹதோவிடம் கேட்கிறேன். "இவ்வளவு பெரிய கூட்டுக் குடும்பத்தை நடத்துவது சிரமமாக இருந்திருக்குமே…!"
"அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது மிகவும் மோசமாக இருந்தது," என அமைதியாக ஆனால் உறுதியாக சொல்கிறார். "அவர் தனது நண்பர்களை அழைத்து வருவார் அல்லது நான் அவர்களுக்கு சமைக்க வேண்டும் என்று அர்த்தம். அவர்கள் வந்து உணவை எடுத்துக்கொள்வார்கள். சில நேரங்களில் 5, 10, 20 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களாக இருப்பார்கள். எனக்கு ஒரு நிமிடமும் ஓய்வு இருந்ததில்லை."
"ஆனால் நிச்சயமாக, வெள்ளையனே வெளியேறு இயக்கத்துடனான உங்களின் தொடர்பு....."
"அதில் செய்ய எனக்கு என்ன இருக்கிறது, அல்லது அதுபோன்ற எதிலும் எனக்கு செய்ய என்ன இருக்கிறது?" என அவர் கேட்கிறார். “எனக்கும் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் கணவர் பைத்யநாத் மஹதோ அதில் பங்குபெற்றார். நான் ஒரு பெரியக் குடும்பத்தை கவனிப்பதில் மும்முரமாக இருந்தேன். அந்த மக்கள் அனைவருக்கும் சமைக்க வேண்டும். நான் எவ்வளவு சமையல் செய்ய வேண்டியிருந்தது தெரியுமா?- ஒவ்வொரு நாளும் சமையல் வேலை அதிகரித்தது!” என்கிறார் பபானி. "நான் விவசாயத்தையும் பார்த்துக் கொண்டேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்."
நாங்கள் திகைத்துப் போய் நின்றோம். எங்கள் முகத்தில் ஏமாற்றம் தெரிகிறது. இன்னும் உயிருடன் இருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தேடி மேற்கு வங்கத்தின் தொலைதூரப் பகுதிக்கு வந்திருந்தோம். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த வரலாற்றுப் போராட்டத்தில் பெரும்பங்காற்றியவர் அப்போராட்டத்துடன் எந்தத் தொடர்பையும் இல்லையென மறுப்பவர் மன்பஜார் I ஒன்றியத்தின் செபுவா கிராமத்தில் இருக்கிறார்.
பபானி மஹதோவுக்கு 101 முதல் 104க்குள் வயது இருக்கலாம். ஆனால் மிகத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் பேசுகிறார். தொலைதூர கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளின் வயதை ஆவணப்படுத்துவது பல நேரங்களில் சிரமமாக உள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, அவர் பிறந்தபோது, வயதை ஆவணப்படுத்தும் முறை இல்லை. ஆனால், பபானியின் வயது குறித்த ஓரளவு மதிப்பீட்டிற்கு அவரது மறைந்த கணவரின் பதிவுகள் மற்றும் 70 வயதுகளில் ஒரு மகன் உட்பட அவரது பெரியக் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமங்களிலுள்ள சற்றே இளைய சமகாலத்தவர்களிடமிருந்து வருகிறோம்.
எப்படியிருந்தாலும், செயல்படாத ஆதார் அட்டை அமைப்பு மூலம் அவரின் தலைமுறை மக்களுக்கு வழங்கப்பட்ட தன்னிச்சையான வயதைக் காட்டிலும் மிகவும் நம்பகமான கணக்கீடு இது ஆகும். அங்கு, பபானிக்கு 1925 ஆம் ஆண்டு பிறந்த ஆண்டாக ஒதுக்கப்பட்டது. அதன்படி அவருக்கு 97 வயது.
அவருக்கு 104 வயது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
"எங்களுக்கு ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் இருந்தது," என்று அவர் கூறுகிறார். "எல்லா பொறுப்புகளும் என்னுடையது. நான் எல்லா வேலைகளையும் செய்தேன். எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டேன். எல்லாவற்றையும். குடும்பத்தை நடத்தினேன். 1942-43-ல் அந்தச் சம்பவங்கள் நடந்தபோது அனைவரையும் நான் கவனித்துக்கொண்டேன். பபானி ‘சம்பவங்களுக்கு’ பெயரிடவில்லை. ஆனால் அவற்றில் வெள்ளையனே வெளியேறு போராட்டங்கள் அடங்கும். செப்டம்பர் 30, 1942 அன்று வங்காளத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் 12 காவல் நிலையங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றிச் செல்ல சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேற்கொண்ட முயற்சியும் அவற்றுக் ஒன்று.
இன்றும், மூன்றில் ஒரு பங்குக் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மாவட்டம் அது. மேற்கு வங்காளத்தில் மிக உயர்ந்த அளவிலான வறுமையை கொண்டிருக்கும் மாவட்டமும் அதுதான். பபானியின் பெரிய குடும்பம் சில ஏக்கர் நிலத்தை வைத்திருந்தது - இன்னும் உள்ளது. இது பலரை விட ஒப்பீட்டளவில் அவர்களுக்கு நல்லவொரு வாழ்வை அளித்திருந்தது..
அவரது கணவர் பைத்யநாத் மஹதோ உள்ளூர் தலைவராக இருந்தார். அவர் பிரிட்டிஷ் ஆட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். புருலியாவில் இன்னும் உயிருடன் இருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களான தேலு மஹதோ மற்றும் 'லோகி' மஹதோ, எங்களிடம் சொல்வது போல், தொலைதூரப் பகுதிகளுக்கு எந்த வகையான செய்தியும் சென்றடைய நீண்ட நேரம் பிடித்தது. "இங்கே, வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்கான அழைப்பை நாங்கள் தெரிந்து கொண்டது, அது விடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகுதான்," என்கிறார் தேலு மஹதோ.
செப்டம்பர் 30, 1942 அன்று திட்டமிட்டபடி செயல் நடந்தது. ஆகஸ்ட் 8, 1942 அன்று மும்பையில் உள்ள கோவாலியா டேங்க் மைதானத்தில் மகாத்மா காந்தி ஆங்கிலேயர்களை 'வெள்ளையனே வெளியேறு' என அறிவிப்பு விடுத்த 53 நாட்களுக்குப் பிறகு, பைத்யநாத் அடக்குமுறையில் கைது செய்யப்பட்டு அவதிப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு அவர் பள்ளி ஆசிரியராகும் திட்டத்தில் அவர் இருந்தார். அப்போது ஆசிரியர்கள் அரசியல் அணிதிரட்டலில் முக்கியப் பங்கு வகித்தனர். சில பத்தாண்டுகளுக்கு சுதந்திர இந்தியா வரை கொண்டு செல்லப்படவிருந்த பங்கு.
*****
காவல் நிலையங்களை ஆக்கிரமித்து கொடி ஏற்றும் முயற்சியில் பல்வேறு படைகள் ஈடுபட்டன. ஆங்கிலேயர்களின் சுரண்டல் ஆட்சியால் வெறுத்துப்போன மக்கள் தரப்பு ஒன்று இருந்தது. பலதரப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள் இருந்தனர். இடதுசாரி புரட்சியாளர்களும் காந்தியவாதிகளும் இருந்தனர். மேலும் விருப்பத்தால் இடதுசாரிகளாகவும் பண்புகளால் காந்தியவாதிகளாகவும் நாம் உணர்ந்த தேலு மற்றும் 'லோகி' மஹதோ போன்றவர்கள் கூட இருந்தனர்.
அவர்களின் அரசியலும் உணர்வும் இடதுசாரிகளுடன் இருந்தது. அவர்களின் ஒழுக்க நெறிகள் மற்றும் வாழ்க்கை முறை காந்தியால் வழிநடத்தப்பட்டது. இந்த இரண்டு பாதைகளுக்கு இடையில் அவர்கள் அடிக்கடி அலைபாய்ந்தனர். அவர்கள் அஹிம்சையில் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் சில சமயங்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வன்முறையில் பதிலடி கொடுத்தனர். அவர்கள் சொல்கிறார்கள்: “பாருங்கள், அவர்கள் எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். தங்கள் நண்பர்களையோ, குடும்பத்தினரையோ அல்லது தோழர்களையோ தங்கள் கண் முன்னே சுட்டுக் கொன்றதைக் கண்டால் நிச்சயமாக மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.” தேலு மற்றும் 'லோகி' இருவரும் குர்மிகள்.
பபானியின் குடும்பமும் குர்மிகள்தான். மேற்கு வங்கத்தின் ஜனகல்மஹால் பகுதியில் உள்ள மிகப்பெரிய சமூகம்.
பிரிட்டிஷ் ராஜ் அவர்களை 1913-ல் பட்டியல் பழங்குடியினராகப் பட்டியலிட்டது. இருப்பினும் 1931ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் அந்தக் குழுவிலிருந்து அவர்களை நீக்கியது. 1950-ம் ஆண்டு இந்தியாவில் அவர்கள், விந்தையாக, இதர பிற்படுத்தப்பட்ட சாதியாக பட்டியலிடப்பட்டனர். பழங்குடி அந்தஸ்தை மீட்டெடுப்பது இந்த மாநிலத்தில் உள்ள குர்மிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
இங்கு சுதந்திரப் போராட்டத்திலும் குர்மிகள் முன்னணியில் இருந்தனர். செப்டம்பர் 1942-ன் கடைசி இரண்டு நாட்களில் 12 காவல் நிலையங்கள் நோக்கிய அணிவகுப்பில் அவர்களில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
"பைத்யநாத் அடுத்த 13 மாதங்கள் சிறையில் கழித்தார்," என்று 70 வயதுகளில் இருக்கும் மகன் ஷியாம் சுந்தர் மஹதோ கூறுகிறார். "அவர் பாகல்பூர் முகாம் சிறையில் அடைக்கப்பட்டார்." பபானியின் சிறைவாசம் அவருக்கு கடினமாக இருந்ததைப் பற்றி நாங்கள் கேட்ட கேள்விக்கான பதில் அது. அவர் வீட்டிற்கு திரும்பிய பிறகு நிலைமை மிகவும் மோசமாக இருந்தது என்று அவரின் பதில் குழப்பத்தைக் கொடுத்தது.
"அதிகமான மக்கள் வரத் தொடங்கி விடுவார்கள்.உணவளிக்க வேண்டும். கவனித்துக் கொள்ள வேண்டும். அவர் திரும்பி வந்ததும் நான் அழுதேன். அவரது வீரம் எல்லாமும் என் உழைப்பின் மேலும், அவரது குடும்பத்தின் தியாகத்திலும் நடக்கிறது என என் கோபத்தை வெளிப்படுத்தினேன். அவர் திரும்பியவுடன், என் வேலை அதிகரித்தது.”
நாங்கள் பபானியின் மீது கவனம் செலுத்தினோம். அவரது சிந்தனையில் காந்தியின் தாக்கம் இருந்ததா? சத்தியாகிரகம் மற்றும் அஹிம்சை பற்றி அவர் எப்படி உணர்ந்தார்?
அமைதியாக இருந்தாலும், பபானி வெளிப்படையாகவும் இருக்கிறார். அவர் சொல்வதை புரிந்து கொள்ள முடியாத சிறு குழந்தைகளைப் பார்ப்பதைப் போல் எங்களைப் பார்த்தார்.
"காந்தியா... என்ன சொல்கிறாய்?" என அவர் கேட்கிறார். “என்ன சொல்கிறாய்? நான் உட்கார்ந்து அதைப் பற்றி சிந்திக்கப் போகிறேன் என்று நினைக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் நான் உணவளிக்க, பரிமாற, கவனித்து, சமைக்க வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது,” என்று எங்களை நோக்கி கையை அசைத்துச் சொல்கிறார்.
"தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், எனக்கு திருமணமானபோது எனக்கு ஒன்பது வயது. இவ்வளவு பெரிய விஷயங்களைப் பற்றி நான் எங்கே நினைத்துக் கொண்டிருந்தேன்? அதன்பிறகு பல பத்தாண்டுகளாக ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தை தனியாளாக கவனித்துக் கொண்டிருந்தேன். நான் விவசாயத்தையும் பார்த்துக் கொண்டேன் என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். மண்ணைத் தயாரிப்பதில் இருந்து, விதைப்பது வரை, தொழிலாளர்களை வேலை வாங்குவது,, களையெடுப்பது, அறுவடை செய்வது வரை…” பின்னர் அவர் விவசாயத் தொழிலாளர்களுக்கு சமைத்த உணவை வழங்கினார்.
பின்னர் அவர் காடுகளின் ஓரத்தில் இருந்த வயல்களில் இருந்து பொருட்களை தன் வீட்டிற்குக் கொண்டு சென்றார்.
அவர் இயந்திர சாதனங்கள் இல்லாத ஒரு காலக்கட்டத்தில் அதையெல்லாம் செய்திருக்கிறார். அந்த நேரத்தில் மின்சாரம் கேள்விப்படாத விஷயம்.. வயல்களில் அவர் செய்த அனைத்து உடல் உழைப்பும் நம்பமுடியாத பழையக் கருவிகளைக் கொண்டு செய்யப்பட்டவை. பெரிய, ஆண் கைகளுக்காக வடிவமைக்கப்பட்டக் கருவிகள் அவை. இதை, மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்டு, சமத்துவமின்மை மற்றும் பசியில் மூழ்கியிருந்தப் பகுதியில் அவர் செய்து கொண்டிருந்தார்..
அவரைத் திருமணம் செய்து கொண்ட முப்பதாண்டுகளுக்குப் பிறகு, பைத்யநாத் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இந்த முறை அவர் பபானியின் சொந்த சகோதரி ஊர்மிளாவை மணந்தார். 20 வயது இளையவர். ஒரு பெரிய குடும்ப நெருக்கடியால் அச்சம்பவம் நேர்ந்ததாக அவர்களின் உறவினர்கள் சொல்கின்றனர். ஒவ்வொரு சகோதரியும் மூன்று குழந்தைகளைப் பெற்றனர்.
உண்மை மெதுவாக உறைக்கத் தொடங்குகிறது. பபானி மஹதோ விளைவித்து, அறுவடை செய்து, தன் குடும்பத்திற்காகவும் பலருக்கும் சமைத்த உணவை எடுத்துச் சென்றிருக்கிறார். 1920-களின் பிற்பகுதியிலும் 1930களிலும் அவர் அதைச் செய்து கொண்டிருந்தார். மற்றும் 1940 களிலும் கூட தொடர்ந்தார்.
அவர் எத்தனை ஏக்கரில் வேலை செய்தார் என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை. அந்தக் குடும்பம் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் பயிரிட்டது. ஆனால் அதற்கான உரிமைப் பத்திரம் எதுவும் இல்லை. அவர்கள் ஜமீன்தாரின் விருப்பப்படி அதில் வேலை செய்தனர். 20-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அவரது பெரிய குடும்பம், ஜன்ராவில் வசித்த பபானியின் சொந்தக் குடும்பம் மற்றும் செபுவாவில் உள்ள அவரது மாமனார் குடும்பம் ஆகியோரின் நிலங்களை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்தனர். இரண்டு கிராமங்களிலும் கிட்டத்தட்ட 30 ஏக்கர் நிலம்.
அவள் மீது விழுந்த வேலைகளின் கொடூரமான சுமை அதிகாலையில் அவர் எழும் நேரத்தின் ஒவ்வொரு மணி நேரத்தையும் விழுங்கியது.
அப்படியானால் அவர் அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிட்டாரா? "அதற்கும் முன்பே," கேலி செய்யும் தொனியுடன், "அதற்கும் முன்பே," என்கிறார். அதிகாலை 2 மணிக்கு எழுந்திருப்பது போல் தெரிகிறது. ”பத்து மணிக்கு தூங்கும் வாய்ப்பை நான் பெற்றதே இல்லை. அதற்கும் தாமதமாக தூங்குவதே வழக்கம்.”
அவரது முதல் குழந்தை வயிற்றுப்போக்கால் இறந்தது. “கவிராஜ் என்ற ஃபக்கீரிடம் கொண்டுச் சென்றோம். ஆனால் அது உதவவில்லை. அவள் இறக்கும் போது அவளுக்கு ஒரு வயது”.
காந்தியைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் அவரிடம் மீண்டும் கேட்க முயற்சிக்கிறேன். "நான் ஒரு தாயான பிறகு, ராட்டை இயக்குவதற்கும், நான் செய்து கொண்டிருந்த எல்லா வகையான காரியங்களுக்கும் எனக்கு நேரம் கிடைக்கவில்லை" என்று அவர் கூறுகிறார். அவர் மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவூட்டுகிறார் - "எனக்கு திருமணமானபோது எனக்கு 9 வயது."
ஆனால் அதன்பிறகு, அவர் வாழ்ந்த காலங்கள், அவர் அனுபவித்த கஷ்டங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அந்த காலக்கட்டத்தில் அவர் சந்தித்த மூன்று பெரும் அனுபவங்களைப் பற்றி பபானி நம்மிடம் பேச முடியுமா?
“ஒவ்வொரு கணமும் அதிக வேலைகளுடனே இருந்தேன். என் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் உட்கார்ந்து வாழ்க்கையைப் பற்றி யோசிக்கப் போகிறேன் என்றா? இந்தப் பெரிய குடும்பத்தை எப்படி நிர்வகிப்பது, எப்படி நடத்துவது என்றுதான் பார்த்துக்கொண்டிருந்தேன். பைத்யநாத் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான் அனைவருக்கும் உணவளித்தேன்.”
சுமையும் அழுத்தமும் அவருக்கு வந்தபோது அவர் என்ன செய்தார்? “நான் என் அம்மாவுடன் உட்கார்ந்து அழுதேன். பைத்யநாத் தன்னுடன் அழைத்து வந்தோருக்கு மேலும் மேலும் நான் சமைக்க வேண்டியிருக்கும் போது- எனக்கு எரிச்சல் ஏற்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் அழ விரும்பினேன்.”.
அவர் அந்த வார்த்தைகளை மீண்டும் சொல்கிறார். நாங்கள் அவரை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார் - "நான் எரிச்சலடையவில்லை, நான் அழ விரும்பினேன்."
*****
1940-களில், பெரும் வங்காளப் பஞ்சத்தின்போதும் அவரது சுமை அதிகமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் எதிர்கொண்டக் கஷ்டங்கள் கற்பனையை மிஞ்சக் கூடியவை
நாங்கள் வெளியேறுவதற்கு நாற்காலியில் இருந்து எழும்பும்போது, பைத்யநாத்தைப் போலவே ஆசிரியராக இருந்த அவரது பேரன் பார்த்த சாரதி மஹதோ, எங்களை உட்காரும்படி கேட்டுக்கொள்கிறார். 'பார்த்தா' நம்மிடம் சொல்ல சில வார்த்தைகள் மட்டுமே உள்ளன.
விஷயம் வெளிப்பட்டது.
அவருடைய பெரியக் குடும்பத்தைத் தவிர வேறு யாருக்காக அவர் சமைத்தார்? பைத்யநாத் சில சமயங்களில் அழைத்து வந்த ஐந்து-பத்து-இருபது பேர் எல்லாம் யார்?
"அவர் அந்த உணவுகளை புரட்சியாளர்களுக்காக சமைத்தார்" என்கிறார் பார்த்தா. "தலைமறைவு வாழ்க்கையில் இருந்தவர்களும் பெரும்பாலும் ஓடி அல்லது காட்டில் ஒளிந்து கொண்டவர்களும்."
சில கணங்கள் அமைதியாக அமர்ந்திருந்தோம். 9 வயதிலிருந்து கிட்டத்தட்ட தன் வாழ்நாள் முழுவதும் தனக்காக, தனக்காக ஒரு கணமும் இல்லாத இந்தப் பெண்ணின் முழுமையான தியாகத்தால் உணர்ச்சிவயப்பட்டோம்..
1930-கள் மற்றும் 40-களில் அவர் செய்தது சுதந்திரப் போராட்டத்தின் பங்கு இல்லையென்றால் பின் என்ன அது?
அவருடைய மகனும் மற்றவர்களும் எங்களைப் பார்க்கிறார்கள். நாங்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை என்று ஆச்சரியப்பட்டனர். எங்களுக்குத் புரிந்து விடும் என்றே அவர்கள் நினைத்திருந்தார்கள்.
என்ன செய்கிறோம், யாருக்காக செய்கிறோம் என்று பபானிக்குத் தெரியுமா?
ஆம், உண்மையில், தெரியும். அவருக்கு அவர்களின் பெயர்கள் தெரியாது அல்லது அவர்களை தனி நபர்களாக அவருக்குத் தெரியாது. பைத்யநாத்தும் அவரது சகக் கிளர்ச்சியாளர்களும் கிராமப் பெண்களால் சமைத்த உணவை ஓடிப்போனவர்களுக்கும் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தவர்களுக்கும் கொடுக்கும் வேலையைச் செய்தனர். இரு தரப்பையும் தங்களால் இயன்றவரை பாதுகாக்கும் நோக்கில் அதைச் செய்தனர்.
அன்றையப் புருலியாவின் நிலைமையை ஆராய்ந்த பார்த்தா, பின்னர் நமக்கு விளக்கினார்: “கிராமத்தில் உள்ள சில வசதியானக் குடும்பங்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட நாளில் எவ்வளவு செயற்பாட்டாளர்கள் மறைந்திருந்தாலும் அவர்களுக்கு உணவு தயார் செய்ய வேண்டும். மேலும் இதைச் செய்யும் பெண்கள் சமைத்த உணவை தங்கள் சமையலறைகளில் அப்படியே வைத்து விட வேண்டும்.
“ யார் வந்து உணவை எடுத்தார்கள், அவர்கள் யாருக்காக சமைத்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. கிராமத்தைச் சேர்ந்த மக்களைப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தியதில்லை. ஆங்கிலேயர்களுக்கு கிராமத்தில் உளவாளிகளும், தகவல் தருபவர்களும் இருந்தனர். அவர்களுக்கு ஒத்துழைத்த நிலப்பிரபுத்துவ ஜமீன்தார்களும் இருந்தனர்.. இந்த உளவாளிகள் காட்டிற்கு சுமைகளை ஏற்றிச் செல்லும் உள்ளூர்வாசிகளை அடையாளம் கண்டுகொள்வார்கள். அது பெண்களுக்கும் தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும். உணவைச் சேகரிக்க அவர்கள் அனுப்பிய நபர்களை யாராலும் அடையாளம் காண முடியவில்லை. யார் சாப்பாட்டை இரவில் எடுத்துச் செல்கிறார்கள் என்று பெண்கள் பார்த்ததே இல்லை.
"அந்த வழியில், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது தவிர்க்கப்பட்டது. ஆனால் என்ன நடக்கிறது என்பது பெண்களுக்குத் தெரியும். பெரும்பாலான கிராமத்துப் பெண்கள் ஒவ்வொரு காலையிலும் குளங்கள் மற்றும் ஓடைகள் ஆகியவற்றில் கூடுவார்கள். சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் அனுபவங்களையும் பரிமாறிக் கொள்வர். அவர்கள் ஏன், எதற்காக செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் குறிப்பாக யாருக்காக செய்கிறார்கள் என்பது மட்டும்தான் தெரியாது.
*****
'பெண்கள்' என்பது பதின்ம வயது பெண்களையும் உள்ளடக்கிய வார்த்தைதான். அவர்கள் அனைவருமே மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வேலைகளைதான் செய்தனர். பபானியின் வீட்டிற்கு போலீஸ் வந்து இறங்கினால் என்ன ஆகும்? அவர் மற்றும் அவரைச் சார்ந்திருந்த குடும்பத்தின் நிலை என்னவாகும்?
ஆயினும்கூட, ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதேசி, ராட்டை மற்றும் பிற எதிர்ப்புச் சின்னங்களைத் தழுவிய குடும்பங்கள் எப்போதும் கண்காணிப்பில் இருந்தன. ஆபத்துகள் நெருக்கத்தில் இருந்தது..
மறைந்திருந்தவர்களுக்கு பபானி என்ன சமைத்தார்? எங்கள் சந்திப்பிற்குப் பிறகு அதை எங்களுக்கு விளக்க பார்த்தா இருந்தார். சோளம், கருவரகு,ராகி மற்றும் பெண்கள் பெறக்கூடிய காய்கறிகள். அதாவது, பபானி மற்றும் அவரது நண்பர்களின் தயவால், கிளர்ச்சியாளர்கள் தம் வீட்டில் இருந்த அதே வகை உணவை அடிக்கடி உட்கொள்ள முடிந்தது.
சில சமயங்களில், அவல் அரிசியைப் பொறியாக்கி அல்லது தட்டையாகச் சாப்பிட்டார்கள். சில சமயம் பழங்களையும் அனுப்பி வைத்தனர். அதுமட்டுமின்றி அவர்கள் காட்டுப் பழங்களையும் பெர்ரிகளையும் சாப்பிடுவார்கள். பழைய காலத்தவர்கள் நினைவு கூரும் ஒரு பொருள் கியாண்ட். பழங்குடி மொழிகளில், அந்த வார்த்தையின் பொருள் காட்டின் பழம்.
ஒரு இளம் கணவனாக இருந்த அவரது தாத்தா திடீரென்று வந்து பபானியிடம் வேலைகள் சொல்வார் என்று பார்த்தா கூறுகிறார். காட்டில் உள்ள நண்பர்களுக்காக அந்த வேலைகள் இருந்தபோதும், தவிர்க்க முடியாமல் பலருக்கான உணவை தயார் செய்ய வேண்டியிருந்தது.
மேலும் ஆங்கிலேயர்கள் மட்டும் பிரச்சினையல்ல. 1940-களில், பெரும் வங்காளப் பஞ்சத்தின்போதும் அவரது சுமை அதிகமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் எதிர்கொண்டக் கஷ்டங்கள் கற்பனையை மிஞ்சக் கூடியவை.
சுதந்திரத்திற்குப் பிறகும் அவரது சாகசங்கள் தொடர்ந்தன. 1950-களில், குடும்பம் இன்னும் வசிக்கும் பகுதியில் பெரும் தீ விபத்து நேர்ந்தது. மக்கள் வைத்திருந்த தானியங்கள் எல்லாமும் அழிந்தது. பபானி ஜன்ரா கிராமத்தில் தனது சொந்தக் குடும்பத்தின் நிலங்களில் இருந்து தானியங்களையும் விளைபொருட்களையும் கொண்டு வந்தார். மேலும், அடுத்த அறுவடை வரை பல வாரங்களுக்கு மொத்த மக்களுக்கும் உதவியாக இருந்தார்.
1964-ம் ஆண்டில், ஜாம்ஷெட்பூருக்கு அருகிலுள்ள பீகாரில் ஒரு பெரிய மத மோதல் ஏற்பட்டது. அதன் தீப்பிழம்புகள் புருலியாவில் உள்ள சில கிராமங்களையும் எரித்தது. பபானி தனது கிராமத்தைச் சேர்ந்த பல முஸ்லிம்களுக்கு தனது சொந்த வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, வயதான பபானி உள்ளூர்வாசிகளின் கால்நடைகளைத் தாக்கிய காட்டுப் பூனையைக் கொன்றார். அவர் அதை ஒரு தடிமனான மரத் துண்டு கொண்டு செய்ததாக பார்த்தா கூறுகிறார். அது காட்டில் இருந்து வெளியே வரும் சிறிய இந்திய புனுகுப் பூனை.
*****
நாம் பபானி மஹதோவை மீண்டும் மரியாதையுடன் பார்க்கிறோம். சுதந்திரப் போராட்ட வீரர் கணபதி யாதவ் பற்றி நான் எழுதியக் கட்டுரை நினைவுக்கு வந்தது. சதாராவில் தலைமறைவு தூதர், அங்கு மறைந்திருந்த போராளிகளுக்கு உணவுகளை காடுகளுக்கு கொண்டு சென்றார். நான் அவரைச் சந்தித்தபோது 98 வயதில் அவர் ஒரு நாளைக்கு 20 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். அந்த அற்புதமான மனிதரைப் பற்றிய கட்டுரையை நான் ஆர்வத்துடன் உருவாக்கினேன். அவர் மிகுந்த ஆபத்தில் காடுகளுக்கு அவ்வளவு உணவை எடுத்துச் சென்றபோதும் அவற்றை சமைத்துக் கொடுத்த மனைவியின் நிலை என்னவென கேட்கத் தவறிவிட்டேன்.
நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது அவர் உறவினர்களுடன் வெளியூரில் இருந்தார்.
கணபதி இறந்துவிட்டார். ஆனால் பபானியை சந்திப்பது எனக்கு ஒரு விஷயத்தை உணர்த்துகிறது. நான் திரும்பிச் சென்று வத்சலா கணபதி யாதவிடம் பேச வேண்டும். அவர் தன் கதையைச் சொல்ல வேண்டும்.
நேதாஜி போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து, பர்மா (இப்போது மியான்மர்) மற்றும் சிங்கப்பூர் காடுகளில் இருந்த அவர்களது முகாம்களில் இருந்த ஒடியா சுதந்திரப் போராட்ட வீரர் லக்ஷ்மி பாண்டாவின் அந்த சக்திவாய்ந்த வார்த்தைகளையும் பபானி நினைவுபடுத்துகிறார்.
“நான் சிறைக்குச் சென்றதில்லை என்பதாலும் நான் துப்பாக்கியால் பயிற்சி பெற்றேன் என்பதாலும் யாரையும் துப்பாக்கியால் சுடவில்லை என்பதாலும் நான் சுதந்திரப் போராட்ட வீரர் இல்லை என்று அர்த்தமா? நான் பிரிட்டிஷ் குண்டுவீச்சுக்கு இலக்கான இந்திய தேசிய ராணுவ வன முகாம்களில் மட்டுமே வேலை செய்தேன். அப்படியென்றால் நான் சுதந்திரப் போராட்டத்தில் பங்களிக்கவில்லையா? 13 வயதில், நான் வெளியே சென்று சண்டையிடும் அனைவருக்கும் முகாம் சமையலறைகளில் சமைத்துக்கொண்டிருந்தேன். நான் சுதந்திரப் போராட்டத்தில் பங்களிக்கவில்லையா?”
பபானியைப் போலவே, லக்ஷ்மி பாண்டா, சாலிஹான், ஹவுசபாய் பாட்டீல் மற்றும் வத்சலா யாதவ் ஆகியோரும் எந்த அரச மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றதில்லை. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில், அவர்கள் அனைவரும் மற்றவர்களைப் போல மரியாதையுடன் போராடி தங்களை விடுவித்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் பெண்கள். பெண்களுக்கு எதிரான தப்பெண்ணங்கள் மற்றும் மட்டுப்படுத்தல்கள் கொண்ட சமூகங்களில், அவர்களின் பங்கு அரிதாகவே மதிப்பிடப்படுகிறது.
இது பபானி மஹதோவைத் தொந்தரவு செய்வதாகத் தெரியவில்லை. ஒருவேளை அவர் அந்த மதிப்புகளை உள்வாங்கியிருக்கிறாரா? ஒருவேளை அது அவரது தனித்துவமான பங்களிப்பை குறைத்து மதிப்பிட வழிவகுத்து விடுமா?
ஆனால் நாங்கள் வெளியேறும்போது அவர் எங்களிடம் கடைசியாகச் சொன்னது இதுதான்: “நான் வளர்த்ததைப் பாருங்கள். இந்த பெரிய குடும்பம், இந்த தலைமுறைகள், எங்கள் விவசாயம், எல்லாம். ஆனால் இந்த இளையவர்கள்...." பல மருமகள்கள் நம்மைச் சுற்றி மிகுந்த விடாமுயற்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். ஆனாலும், அவை அவர் தன் காலத்தில் தனியாளாகச் செய்தவைதான்.
அவர்களையோ அல்லது வேறு யாரையோ அவர் குறை கூறவில்லை. 'எல்லாவற்றையும்' செய்யக்கூடியவர்கள் குறைவாக இருக்கிறார்கள்’ என அவர் வருந்துகிறார்.
இக்கட்டுரைக்கென பெரும் பங்களிப்புகளைச் செய்தும் பபானி மஹதோ பேசுகையில் உடனுக்குடன் மொழிபெயர்ப்பு செய்தும் உதவிய ஸ்மிதா கடோருக்கு என்னுடைய நன்றிகள். மேலும், விலைமதிப்பற்ற பங்களிப்புக்காகவும், சந்திப்புகள் மற்றும் நேர்காணல்களை அமைத்துக் கொடுத்த ரெக்கே பயணத்திற்காகவும் ஜோஷ்வா போதிநேத்ராவுக்கு எனது நன்றிகள். ஸ்மிதாவும் ஜோஷ்வாவும் இல்லாமல் இந்தக் கட்டுரை உருவாகியிருக்காது.
தமிழில் : ராஜசங்கீதன்