சந்திரன் மாஸ்டரின் பராமரிப்பில் இருந்த வெச்சூர் இன பசு மாடு ஈன்ற ஒரு கன்றுக்கு 15,000 ரூபாய் பரிசை, கேரளத்தின் விவசாய அமைச்சர் கே.பி. மோகனன், கால்நடை மேம்பாட்டு வாரியம் சார்பாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் அளித்தார். தெரிந்தே சட்டத்தை மீறுகிற ஒருவருக்கு வழங்கப்பட்ட பரிசு அது. ஆனாலும் அமைச்சர் பரிசளித்தது சரிதான் என்று எல்லோரும் அங்கீகரித்து பாராட்டுகிற நிலைமை அங்கே உள்ளது. சந்திரன் மாஸ்டரும் அவர் போன்ற சில துணிச்சலான நபர்களும்தான் கேரளாவின் தனித்துவமான கால்நடை இனங்களை இன்னமும் உயிருடன் வைத்திருக்கின்றனர். மாநிலத்தில் உள்ள கால்நடைத் துறையின் இயக்குநர் மட்டத்தில் அனுமதி பெறாமல், இத்தகைய விலங்குகளை விவசாயிகள் இனப்பெருக்கம் செய்வது சட்டவிரோதம் என்கின்றன கேரளத்தின் பழைய சட்டங்கள். சில ஆண்டுகளாக கால்நடை ஆய்வாளர்கள் இந்த "தாழ்ந்த" இனங்களின் காளைகளால் இனப்பெருக்கம் நடக்காமல் தடுப்பதற்காக அந்தக் காளைகளைக் காயடித்து வந்துள்ளனர். அதன் மூலம் அவர்கள் கலப்பின கால்நடைகளின் எண்ணிக்கை ஆதிக்கம் செலுத்துவதை ஊக்கப்படுத்தி வந்துள்ளனர்.
‘அதிகமான பால் உற்பத்தி வேண்டும்’ என்பதை மட்டுமே மனதில் கொண்டு, அதனால் ஏற்படும் செலவுகளைப் பற்றியோ, பின் விளைவுகளைப் பற்றியோ கவலை கொள்ளாமல், செயல்பட்டது இந்தத் தவறு நடப்பதற்கான காரணங்களில் ஒன்று. அவை எல்லாம் பிரச்சனையாக மாறிவிட்டன. தற்போது அரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு ஏற்படுத்தியிருக்கிற பாதிப்புகளை எதிர்க்கிற விவசாயிகளுக்கு தற்போது அரசே பணம் செலுத்துமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.
திரிசூர் மாவட்டத்தின் பி.வெம்பல்லூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் வளாகத்தில் சந்திரன் மாஸ்டர் 24 கால்நடைகளை வைத்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை, கேரளத்தின் உள்நாட்டு இனங்களான அரிய வகைகள் ஆகும். கேரளாவின் உள்நாட்டு கால்நடைகள் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டன என்பதன் அடையாளமாக, சிறிய வெச்சூர் மாடு உள்ளது. அதுவும் சந்திரன் மாஸ்டரிடம் உள்ளது. ‘உணவு மற்றும் விவசாயத்துக்கான பன்முகத்தன்மையான உள்நாட்டு விலங்குகளுக்கான அமைப்பு 2000 ஆம் ஆண்டளவில், ‘உலகளாவிய கண்காணிப்பு பட்டியலை’ உருவாக்கியது. அதில் வெச்சூர் மாடு இருந்தது. ‘நெருக்கடிக்குள்ளாகியிருக்கிற இனங்களை கண்காணிக்கிற பட்டியல்’. அது. ஒரு கால்நடையின் இனத்தில் அந்த இனத்தைப் பெருக்கக்கூடிய பெண் விலங்குகளின் எண்ணிக்கை நூறு அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் அது ‘நெருக்கடிக்குள்ளாகியிருக்கிற இனங்கள் பட்டியலில்’ இடம்பெறும் அல்லது “இனப்பெருக்கம் செய்யும் ஆண் இனங்களின் மொத்த எண்ணிக்கை” ஐந்து அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்போது. அல்லது அந்த இனத்தின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 120 அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்போதும் அந்த கால்நடை இனத்தின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடையும்போதும் அந்தப் பட்டியலில் கால்நடை இனங்களைச் சேர்க்கிறார்கள்.
சந்திரன் மாஸ்டர் வீட்டில் வெச்சூர் இனத்தின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. “கால்நடைவளக் கழகத்துக்கு நான் ஐந்து வெச்சூர் கன்றுகளைக் கொடுத்தேன்” என்று பெருமிதமாக கூறுகிறார் அவர். அதற்கு பதிலாக அவர் இரண்டு கிர் கன்றுகளையும் ரூபாய் 45ஆயிரமும் பெற்றுக்கொண்டார். அவரது வீட்டு வளாகத்தில் ஒரு சின்னஞ்சிறு வெச்சூர் கன்றுக்குட்டி பிறந்து வெறும் ஆறு மணிநேரமே ஆகும்போது நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்தோம். அதைப் பெற்றெடுத்த அந்த அம்மா மாடு ஒரு அருமையான விலங்கு. 82 சென்டி மீட்டர்கள்தான் அதன் உயரம். உலகின் மிக குள்ளமான கால்நடை விலங்கு அதுதான். இதே திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 77 சென்டிமீட்டர்களே உயரமுள்ள ஒரு வெச்சூர் பசுதான் உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் உலகத்தின் மிகச் சிறிய பசுவாக இடம் பெற்றுள்ளது.
பொதுவாக, இந்த வகை பசுக்கள் சராசரியாக 90 சென்டி மீட்டர்கள் வரை உயரம் உள்ளவை. சுமார் 130 கிலோக்கள் எடையும் கொண்டவை. ஒரு நாளைக்கு மூன்று லிட்டர்கள் வரை பால் கறக்கும். தீவனமோ பராமரிப்போ மிகவும் குறைவாகவே தேவைப்படும்.
வடகரா குள்ளப் பசுவையும் காசர்கோடு குள்ளப் பசுவும்தான் “உலகின் மிகச் சிறிய பசு” வோடு சேர்த்துப் பார்க்க வேண்டியவை. கால்நடைகள் பற்றி பொதுவாக உள்ள மனப்போக்கை அந்த 72 வயது பழைய பள்ளியாசிரியரான அவர் கேலி பேசுகிறார். “அத்தகைய மனப்போக்கு உள்ளவர்களுக்கு பசு என்பது வெறும் பால் கறக்கும் இயந்திரம்தான். பாலின் தரமும் அதன் உள்ளடக்கமும் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. விவசாயத்திலும் ஒரு விவசாயியின் வாழ்க்கையிலும் கால்நடையின் பாத்திரம் என்ன என்பது பற்றி அவர்களுக்கு பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. சுற்றுச்சூழல், பன்முகத்தன்மை அல்லது சமூகத்தின் மீது கால்நடையின் தாக்கம் பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது” என்கிறார் அவர்.
நம்பியாந்திர அய்யப்பன் சந்திரன் முன்னாள் ஆங்கில ஆசிரியர். அவரது சிறந்த பணிக்காக விருது பெற்றிருக்கிறார். கேரளத்திலும் ஓமன் நாட்டிலுமாக 36 வருடங்கள் ஆசிரியர் பணியில் இருந்துள்ளார். உள்நாட்டின் கால்நடைகளை பாதுகாப்பதுதான் அவர் தனது மிச்ச வாழ்க்கையில் செய்தாக வேண்டிய பணிகளில் ஒன்றாக” உறுதி எடுத்திருக்கிறார். கேரளாவின் கால்நடை வளத்துறை அளித்த 15 ஆயிரம் ரூபாய் காசோலையை அவர் பெரிய போட்டோவாக ஆக்கி அவரது வீட்டின் முன்னறையில் மாட்டி வைத்திருக்கிறார். “எனக்கு ரொம்ப பிடித்த வேலையாக இது இருப்பதால் மாதாமாதம் சராசரியாக 15 ஆயிரம் ரூபாய் அளவுக்கு எனக்கு செலவாகிறது. அந்த அளவு பணம்தான் அரசும் எனக்கு அளித்துள்ளது” என்கிறார் அவர். ஆனாலும் அவருக்கு இது திருப்திதான்.





