எல்லாவற்றிற்கும் மேலாக, பிளாஸ்டிக் உள்ளது. இது எல்லா இடங்களிலும் எல்லா வடிவங்களிலும் கிடைக்கிறது. தெருக்களில் கிடக்கிறது, தண்ணீரில் மிதக்கிறது, சாக்குகளில் சேமிக்கப்படுகிறது, தொட்டிகளில் வைக்கப்படுகிறது, கூரைகளில் குவிக்கப்படுகிறது. மேலும் 13-வது வளாக எல்லையில் உள்ள சிற்றோடையில் அதிக மதிப்புள்ள உலோக பாகங்களை பிரித்தெடுப்பதற்காக பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும்போது, கடுமையான புகை காற்றை அடர்த்தியாக்குகிறது.
தாராவியில் உள்ள மறுசுழற்சித் துறையான இந்த வளாகத்துக்கு, மும்பையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுப் பொருட்களின் முடிவில்லாத சங்கிலி தொடர்ந்து வந்து சேருகிறது. மாநகரில் தினமும் உற்பத்தியாகும் 10,000 டன்னுக்கும் அதிகமான குப்பைகளின் பெரும் பகுதி கை வண்டிகள், லாரிகள் மற்றும் டெம்போக்களில் இங்கு கொண்டு வரப்படுகிறது. தொழிலாளர்கள் - பெரும்பாலானோர் பல்வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த இளைஞர்கள் - இந்தத் துறையின் சாத்தியமில்லாத குறுகியப் பாதைகளில் இவற்றை ஏற்றி இறக்குகிறார்கள்.
இங்குள்ளக் கொட்டகைகளின் நெரிசலானப் பகுதியில், மறுசுழற்சி செய்யும் பல அடுக்கு செயல்முறை மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது. ஒவ்வொருப் பொருளும் ஒரு 'புதிய' மூலப்பொருளாக அல்லது முற்றிலும் மற்றொருப் பொருளாக மாற்றப்படுவதற்கு முன், பலரைக் கடந்து பல முறைகளுக்கு ஆட்படும் ஒரு பெரியச் வேலைச் சங்கிலியில் பயணிக்கிறது.
டெரா காம்பவுண்டில் மறுசுழற்சி செய்வதற்கான சுற்றுச்சூழல் அமைப்பு ஒரு நுணுக்கமான அமைப்பைக் கொண்டுள்ளது. வாங்குதல் மற்றும் விற்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன. பணி சார்ந்த சொற்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். செயல்முறையின் அடுத்தடுத்தக் கட்டங்கள் நன்கு நிறுவப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு நபரும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டப் பணிகளில் திறன்பெற்றிருக்கிறார்கள். தூக்கி எறியப்பட்ட பொருட்களை காயலான் கடைக்காரர்கள் சேகரிக்கின்றனர். கழிவுகளை எடுப்பவர்கள் மற்றும் பயணித்து குப்பைகளை சேகரிப்பவர்கள், தினசரி சேகரிப்புகளை கொட்டகைகளில் சேர்ப்பிக்கின்றனர். வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் நிறுவை மையங்களில் பொருட்களை இறக்குகிறார்கள். பின்னர் குடோன்களை வைத்திருப்போர், அவர்கள் வேலை கொடுக்கும் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆண், பெண் தொழிலாளர்கள் எனப் பலர் ஆயிரக்கணக்கானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.




